கீழச் சூரிய மூலை என்கிற சூரியகோடீஸ்வரர் திருத்தலம்.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.
அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.
தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.
சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.
பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம் அல்லவா?
மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.
ஆலய அமைப்பு :
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி. இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.
வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.
பைரவர் :
இத்தல பைரவர் சொர்ண பைரவர் என அழைக்கப்படு கிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி என கூறுகின்றனர் பக்தர்கள்.
இந்த பைரவர் தன் கழுத்து பவளமணியின் ஏழு ஒளிக் கிரகணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரகணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தவிர பணத்தட்டுபாடு, ஏழ்மை வறுமையை போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.
இங்குள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை முன்நோக்கி வைத்துள்ளாள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோவில் அர்ச்சகர் விளக்குகிறார்.
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோவிலில் அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அகத்திய முனிவர் :
சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..
சூரியன் சக்தி பெற்ற கதை :
தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான். இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர். எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.
சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன். ‘எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான்.
குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது.
இருப்பிடம் :
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment