Tuesday, May 25, 2021

சூரியன் சந்திரன் வழிபட்ட கோவில்



#ஆலயதரிசனம்...

சூரியர்-சந்திரர் வழிபடும்
#கைலாசநாதர் கோவில்
தாரமங்கலம்...

முற்காலத்தில் சிற்பிகள் கோவில் கட்ட ஒப்பந்தம் செய்து கொள்ள தாம்பூலம் வாங்கும் போது, 'பேரூர், பெரியபாளையம், தாரமங்கலம், தாடிக்கொம்பு ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக' என்று சொல்லி வாங்கும் வழக்கம் இருந்ததாம். இந்த நான்கு இடங்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் அற்புதமான வேலைத்திறன் உடையவை. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தவை தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கற்சிற்பங்களாகும். 

பெயர்காரணம்...

தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மங்கல வினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இதற்கு சான்றுரைக்கும் வகையில் கைலாசநாதர் கோவில் அர்த்தமண்டப நுழைவாசலின் மேல் பார்வதியை பரமசிவனுக்கு, திருமால் தாரை வார்த்து கொடுக்கும் சிற்பம் காட்சியளிக்கிறது. 

இந்த கோவிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாக, சூரியர்-சந்திரர் இருவரும், இத்தல இறைவன் கைலாசநாதரை வழிபடும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணாயன புண்ணிய காலமான மாசி மாதத்தில், மூன்று நாட்கள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் கைலாசநாதரை வழிபடும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாகும். 

இந்த காலத்தில் கைலாச நாதர் சிலை மீது சூரியக்கதிர் பட்டு ஒளி வீசுவதைக் காண பக்தர்கள் பலரும் குவிகிறார்கள். அந்தி சாயும் நேரத்தில் சூரியனின் கதிர்களும், சந்திரனின் ஒளியும் சிவலிங்கம் மீது படுவதாக கூறுகிறார்கள். மாசி மாதம் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில் சூரிய கிரகணங்கள் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுகிறது. அவ்வாறு விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். 

தல வரலாறு..

முன்னொரு காலத்தில் கெட்டி முதலி என்பவர், தனது மந்தையில் இருந்து பசு ஒன்று விலகிச் செல்வதைக் கண்டார். அந்தப் பசு தாரகா வனமாக இருந்த இந்த பகுதியில் ஒரு புற்றின் மீது தனது பாலைச் சொரிவதை கண்டு அதிசயித்தார். அந்த புற்றினை விலக்கி பார்க்க, அங்கே ஒரு சிவலிங்க திருமேனி இருந்தது. இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய ஈசன், பசு பால் சொரிந்த இடத்திலேயே தனக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். இதையடுத்து அங்கு கோவில் எழுப்பப்பட்டது. 

கோவில் அமைப்பு...

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்கு திசை நோக்கியபடி உள்ளது. ஐந்து நிலை கொண்ட 150 அடி உயர ராஜகோபுரம், உச்சியில் 7 கலசங்களோடு மிளிர்கிறது. ராஜகோபுரத்தை இருபுறமும் யானைகளும், குதிரைகளும் இழுப்பது போல் ரதம் போன்று அமைய பெற்றிருக்கின்றன. கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுர வாயிலின் உள்ளே, வலதுபுறம் கிழக்கு பார்த்த சன்னிதியில் அவினாசியப்பர் எழுந்தருளியுள்ளார். இடது பக்கம் சகஸ்ரலிங்கம் உள்ளது. 

இதற்கு பின்புறம் மதிலை சேர்ந்தாற்போல் பஞ்சலிங்கங்கள் உள்ளன. எதிரில் கொடிக்கம்பம், பலிபீடம், நந்தி மண்டபம் முதலியவை உள்ளன. தென்புறம் சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். கோவில் உள்ளே மகா மண்டபம் 20 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு எதிரே கருவறையில் கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தின் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கு நோக்கியபடி சிவகாமசுந்தரி மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் அமைந்துள்ளன. 

தென்கிழக்கு மூலையில் தீர்த்தக்கிணறு உள்ளது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர். கோவிலுக்கு கிழக்கே இரண்டு தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த கோவிலின் தல விருட்சம் வன்னி மரம் ஆகும். இந்த கோவிலுக்கு அருகே, இளமீஸ்வரர், பத்ரகாளியம்மன், வேலாயுத சாமி, வரதராஜ பெருமாள் ஆகிய சுவாமிகளின் கோவில்கள் உப கோவில்களாக அமைந்துள்ளன. 

குதிரை, யாளி மண்டபம்...

இரண்டாவது வாசலுக்கு முன்னால் இருப்பது, ஆறு தூண்களையுடையது. இரண்டில் யாளிகளும், நான்கில் குதிரைகளும் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் இரண்டு விதமாக அமைக்கப்பெற்று இருக்கின்றனர். ஒருபுறம் ஒரு மாதிரியாகவும், மற்றொரு புறம் வேறு வகையாகவும் காட்சி அளிக்கும் வகையில், ஒரே தூணில் செதுக்கப்பெற்றிருப்பது அழகாகும். 

ஒரு யாளியின் வாய்க்குள் நான்கு அங்குல குறுக்களவு உள்ள கல் உருண்டை இருக்கிறது. அதை அந்த வாய்க்குள்ளே உருட்டலாமேயன்றி வெளியே எடுக்க முடியாது. தற்போது இந்த யாளி சிலைகள் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகளால் ஆன வலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் கொடுங்கையில் குரங்குகளை இயற்கையான பாவனைகளில் செதுக்கி உள்ளனர். 

பாதாள லிங்கம்...

மகா மண்டபம் வடமேற்கு மூலையில் சுரங்க அறை ஒன்று உண்டு. இது பண்டைய காலத்தில் பொருள் பாதுகாப்பு அறையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது சிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமைகளில், பாதாளேசுவரருக்கு திருமணமாகாதவர்கள் சிறப்பு வழிபாடாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம். மேலும் இந்த பாதாள அறையில் இருந்து அமரகுந்தி அரண்மனைக்கு சுரங்க பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பாதையை மறைத்து பாதாள லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திருவிழா...

தைப்பூசத்தை கடைசி நாளாக கொண்ட திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சூரசம்ஹாரம், திருவாதிரை, திருக்கார்த்திகை முதலிய நாட்களிலும் விழாக்கள் உண்டு. மேலும் பிரதோச வழிபாடும் சிறப்பாக நடைபெறும். 

காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும். 

அமைவிடம்....
சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து மேற்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது....

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...