Thursday, June 10, 2021

சோழர்களின் குலதெய்வம்

தஞ்சை நிசும்பசூதனி தஞ்சாவூர் கீழ வாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயில் என்னும் சிற்றாலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறாள்  !சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி!வெற்றிக்கு அதிதேவதையாக விளங்குபவள் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி. எனவேதான், சோழப் பேரரசின் தொடக்கம், துர்க்கா பரமேஸ்வரியான நிசும்பசூதனியின் பிரதிஷ்டையில் உதித்தது

 
சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி!
செ ன்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு எனும் தேவாரப் பாடல்பெற்ற தலம் உள்ளது. காரைக்காலம்மையார் ஈசனின் திருநடம் கண்டு போற்றியதும், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பாடியதும் ஆகிய பெருமைகள் இந்தத் தலத்துக்கு உண்டு. வடபுலத்தில் வங்காள தேசம் வரையிலும், கீழ்த்திசை நாடுகளான ஜாவா, சுமத்ரா, போர் னியோ, மலேசியா போன்ற பல நாடுகளையும் வெற்றி கண்டவனான சோழப் பேரரசன் கங்கை கொண்ட ராஜேந்திரன், இந்தத் திருவாலங்காட்டுத் திருக் கோயிலுக்கு நிலக்கொடைகள் அளித்து அதைச் செப்பேடுகளிலும் பதிவு செய்தான். வரலாற்றுச் சிறப்புடைய அந்தச் செப்பேட்டுத் தொகுதியில் தன் குல முன்னோரின் சாதனைகளையும், பெருமைகளையும் விரிவாகக் கூறியுள்ளான். அதோடு, தன் குலதெய்வத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்துள்ளான். அவ்வாறு அந்தப் பேரரசன் குறிப்பிடும் குலதெய்வம் நிசும்பசூதனி எனும் தேவியாவாள்.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி!
‘சூரிய குலத்தில் தோன்றிய விஜயாலயன் எனும் சோழச் சக்ரவர்த்தி தன் குலம் தழைக் கப் பேரழகு வாய்ந்த தஞ்சாபுரி (தஞ்சாவூர்) எனும் நகரத்தில் நிசும்பசூதனி எனும் தேவியை பிரதிஷ்டை செய்தான். தேவர்களா லும், அசுரர்களாலும் பூஜிக்கப் பெற்ற திருப் பாதங்களை உடைய இந்த தேவியின் அருளால் கடல்கள் எனும் ஆடையை அணிந்து ஒளிரும் கடல் சூழ்ந்த இந்த பூமியை, ஒரு மாலையை அணிவது போன்று சூடிக்கொண்டு எளிமையாக ஆண்டு வந்தான்’ என்று ராஜேந்திர சோழனது செப் பேடு கூறுகிறது. ராஜேந்திரனின் பாட்டனுக்குப் பாட்டனான விஜயாலய சோழன் கி.பி. 850-ல் முத்தரைய மன்னன் ஒருவனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றித் தன் சோழ மரபை நிலைநிறுத்தினான். அன்று தொடங்கி 430 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த அவன் மரபினர் அத்தனை பேரும் தங்கள் குலதெய்வமாகப் போற்றியது இந்த நிசும்பசூதனி தேவியைத்தான். சோழப் பேரரசர்கள் இந்த தேவிக்காக எடுத்த பெருங்கோயில் இன்று காணப் பெறவில்லை.

தற்போது நிசும்பசூதனி தேவி, தஞ்சாவூர் கீழ வாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயில் என்னும் சிற்றாலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறாள். சோழ சாம் ராஜ்யப் பெருமைகளின் திருவடிவமாக அன்னை பராசக்தி கருவறையில் வடக்கு நோக்கி கம்பீரமான திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள்.

அன்னை பராசக்தி துர்க்கையாக, திரிபுரசுந்தரியாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதை தேவி மகாத்மியம் தெளிவுபட உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை ராத்திரி சூக்தம் உட்பட வேறு பல நூல்களும் எடுத்துரைக்கின்றன. துர்கா சப்தசதி, தேவி மகாத்மியம் ஆகியவை தேவி யின் ஆற்றலைப் பலவாறும் விவரிக்கின்றன. தேவி மகாத்மியம், ஸ்ரீமார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியாகும். தேவி மகாத்மியத்தில் ‘நிசும்ப வதம்’ ஒன்பதாம் சர்க்கமாகவும், ‘சும்ப வதம்’ பத்தாம் சர்க்கமாகவும் விவரிக்கப் பெற்றுள்ளன.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி!
தேவியானவள் துர்கா பரமேஸ்வரியாக, ரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்ப னும் தேவியுடன் போர் தொடுத்தனர். தேவி, இறுமாப்புடைய அரக்கர் இருவரையும் அழித்தாள். அப்போது அவள் கொண்ட வடிவே நிசும்பசூதனி என்பது இந்த நூல்களால் அறியப் பெறுகிறது.

வெற்றிக்கு அதிதேவதையாக விளங்குபவள் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி. எனவேதான், சோழப் பேரரசின் தொடக்கம், துர்க்கா பரமேஸ்வரியான நிசும்பசூதனியின் பிரதிஷ்டையில் உதித்தது. அவள் அருட்கருணை இருந்ததாலேயே சோழப் பேரரசின் மாட்சிமை கங்கை நதி வரையிலும், லட்சத்தீவு, மாலத்தீவு, ஈழம், மலேயா, ஜாவா, சுமித்திரா, போர்னியோ போன்ற கடல் கடந்த நாடுகளுக்கும் சென்றடைந்தது. சோழர்களால் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை உருவாக்க முடிந்தது.

சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. அன்னை, பீடத்தின் மீது ஒரு காலை மடித்து, மறு காலை தரையில் கிடக்கும் அசுரனின் தலைமீது பதித்தவாறு அமர்ந்துள்ளாள். அவளின் திருக்கரங்களில் சூலம் மற்றும் வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலையிலோ கேசம் தீச்சுடரென மேலெழுந்து நிற்கிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்ற சீற்றம் தெரிகிறது. அவளது இருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மூச்சுத் திணறுகிறார்கள். தப்பி ஓட யத்தனிக்கிறார்கள். பெருமிதம் மிகுந்த வடிவம். சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் எனும் அசுரர்கள் அன்னையால் வீழ்த்தப்பட்டனர். தீமையை ஒடுக்கி, அருட்கருணை வழங்கும் துர்க்கா பரமேஸ்வரி இங்கு 1,150 ஆண்டுகளுக்கும் மேலாக நிசும்பசூதனியாகக் காட்சியளிக்கிறாள்.

தொண்ணூற்றாறு விழுப்புண்கள் சுமந்த விஜயா லயன், காவிரிக்கரையில் எண்ணிலா கற்கோயில்களை எடுத்த ஆதித்தன் அவன் மகன் பராந்தகன், சிவஞான கண்டராதித்தன், செம்பியன் மாதேவியார், அரிஞ்சயன், சுந்தரன், ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமன் என்ற சோழ மாமன்னர்களும், ஈடு இணையற்ற ராஜராஜசோழனும், கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழனும், ராஜாதிராஜனும், குலோத்துங்கனும், பின்வந்த சோழப் பேரரசர்களும், தேவியர்களும், சேக்கிழார் பெருமானும், கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தரும், சோழ சாம்ராஜ்யத்து தளபதிகளும், போர்வீரர்களும் இந்த தேவியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பெற்ற பேரரருள்தான், இன்று நாம் நூல்களில் காணும் சோழர் வரலாறு.

அந்த தேவியை வாழ்வில் ஒருமுறையேனும் நாமும் வழிபட்டு உய்யலாமே!

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....