*தினம் ஒரு திருத்தலம்... ஆனந்த தாண்டவம்... ஏர் மற்றும் நீர் இறைக்கும் இறைவன்.!!*
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் :
அமைவிடம் :
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 5வது தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 216 வது தேவாரத்தலம் ஆகும்.
மாவட்டம் :
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பேருந்து வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவனின் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி விழுகிறது.
இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதியபடியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்.
திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது.
இசைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்" என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது.
விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
சிவனது உதவியாளராக இருந்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யும் சண்டிகேஸ்வரர் பல கோயில்களில் தனித்துதான் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மனைவி சண்டிகேஸ்வரியுடன் இருக்கிறார். இவர், தன் பணிக்கு உதவியாக மனைவியை வைத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.
சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் இக்கோவில் பிரகாரத்தில் இருக்கிறது.
கோயில் திருவிழா :
வைகாசியில் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
வேண்டுதல் :
விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
🌷🌷
No comments:
Post a Comment