Tuesday, June 29, 2021

பிள்ளையார் எறும்பு கதை

பிள்ளையார் எறும்பு* 🐜
🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀
*எனப் பெயர் வந்தது ஏன்?*

முப்பத்து முக்கோ டி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதி தேவி? ஆனாலும் அவளுக்கு 
'இந்தத் தொழிலை ஈசன் சரிவரக் கவனிக்கிறாரா? என்றொரு சந்தேகம். இதற்குத் தீர்வு காண முனைந்தாள்.

சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். 
'இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார் பார்க்கலாம்! ' என்பது அவளது எண்ணம்.

" ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா? " என்று ஈசனிடம் கேட்டாள். அனைத்தும் அறிந்தவனுக்கு, கேள்வியின் மர்மம் புரியாமல் இருக்குமா?  உலக நாயகி தன்னோடு விளையாடுகிறாள் என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமேல்,
" இதிலென்ன சந்தேகம் ...பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது! " என்றார். 

பார்வதி தேவி ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள். சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. 

'ச்சே ...வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே! ' என வருந்தினாள் தேவி.

"மகேஸ்வரி ...உனது ஐயம் விலகியதா? "
குறும்பாகக் கேட்ட பரமேஸ்வரன்,

"சரி ...சரி...விநாயகன் உன்னைத்தேடிக் கொண்டிருக்கிறான்...போய்ப் பார்! ..." என்றார்.

விநாயகனைச் சந்தித்த பார்வதி தேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி.

"ஏனம்மா...அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்! " என்றார் விநாயகர்.

" என்ன சொல்கிறாய்
நீ? " படபடப்புடன் கேட்டாள் பார்வதி தேவி.

" அன்னையே ...
அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்மபரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது, அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதத்தில் சிறையிட்டது! தாயின் பழி தனையனைத்தானே
சாரும். எனவே, எறும்புகளின்  பசியை 
நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது! " விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதி தேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத்துக் கொண்டு சிவனாரிடம் சென்றவள், "ஸ்வாமி, என்னை மன்னியுங்கள்.  நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்! " என்று வேண்டினாள்.

" வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இணையான பூஜையோ, வழிபாடோ கிடையாது. இதை உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன் அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும் என்று அருளினார்.

பிறகு பார்வதியிடம்,
" எறும்பு உண்டது போக, மீதம் உள்ள உள்ள அன்னப் பருக்கைககளை விநாயகனுக்குக் கொடு! " என்றார்.  அப்படியே செய்தாள் பார்வதி. அந்தப் பருக்கைகளை உண்ட விநாயகனின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது. அவரது பசியும் தீர்ந்தது. இந்த அருளாடல் சம்பவம் தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

விநாயகர் யானையின் கருப்பு நிறம் கொண்டவர். கருணைக்கடலாக இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறார். கருப்பு நிறமுள்ள. பிள்ளையார் எறும்பும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள்.
🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀

No comments:

Post a Comment

Followers

மார்பு நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர்

மார்பு 🥢நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர் ஆலயம் மணப்பாறை ஸ்ரீவடிவுடைநாயகி உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் பெண்களின் மார்பு ச...