Wednesday, June 30, 2021

திருமணஞ்சேரி


*தினம் ஒரு திருத்தலம்.... சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சி தரும் தலம்.!!*

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் :

அமைவிடம் :

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவில் திருமணஞ்சேரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

மாவட்டம் :

திருமணஞ்சேரி, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம்.

எப்படி செல்வது?

இத்தலத்திற்கு மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.

கோயில் சிறப்பு :

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்தத் தலத்தில் வந்து கல்யாண சுந்தரரை வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சிவனும், விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம்.

கோயில் திருவிழா :

சித்திரை மாதம் திருக்கல்யாண உற்சவமும், வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மக உற்சவமும் மூன்று நாட்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேஷமாக நடைபெறும்.

வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல் மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

வேண்டுதல் :

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

பிரிந்த தம்பதியர் மற்றும் அண்ணன், தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேஷமான மற்றொரு அம்சம்.

நேர்த்திக்கடன் :

இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாற்றலாம்.

மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். இதுதவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோயில் பிரசாதம் :

இக்கோயிலில் பிரசாதமாக விபூதி மற்றும் குங்குமம் கொடுக்கப்படுகிறது.

💫🌷🌷

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...