Tuesday, June 8, 2021

இரண்டடுக்கு முருகன் கோவில்

இரண்டடுக்கு 
முருகன் கோவில் 
திருமலைக்கேணி அதிசயம்..!

படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்போம். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி தண்டாயுதபாணி கோவிலில் தரிசிக்கலாம். 

இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர், முருகன் கோவில் கட்ட நீண்டகாலமாக விரும்பினார். ஒருநாள் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்திருந்தார். ஒரு சுனையில் தண்ணீர் குடித்து விட்டு ஓய்வெடுக்க அமர்ந்தார். அப்படியே தூங்கி விட்டார். அப்போது மன்னரின் கனவில் தோன்றிய முருகன், சுனை அருகில் கோவில் எழுப்பும்படி உத்தரவிட்டார். அதன்படி இங்கு முருகன் கோவில் கட்டப்பட்டது. 

இரண்டடுக்கு கோவில்...

மலையிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் கோவில் கட்டப்பட்டது. அது சிதிலமடைந்த பிறகு, ஒரு குடிசையில் முருகன் சிலை வைக்கப்பட்டது. பூஜையும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோவிலை புனரமைக்க ஏற்பாடு செய்தார். இதற்குள் மூலவர் சிலையும் பின்னமாகி விட்டதால், அதே போல வேறொரு சிலை வடிவமைக்கப்பட்டது.

 ஆனால், பழைய சிலையை குடிசையில் இருந்து அகற்ற 
முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே புதிய கோவில் இரண்டு அடுக்காகக் கட்டப்பட்டது. பழைய முருகன் சிலை கீழ்ப்பகுதியில் இருக்க, புதிய முருகன் சிலையும் மேல் அடுக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

மேலடுக்கில் முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள முருகன் மீது விழும் படியாக சன்னிதி அமைத்துள்ளனர். இதற்காக மேலே உள்ள முருகனின் பாதத்தின் கீழ் ஒரு துளை உள்ளது. கீழே இருக்கும் முருகன் முதலில் வந்தவர் என்பதால் 'ஆதி முருகன்' என அழைக்கப்படுகிறார். 

ராஜ_அலங்காரம்..

கருவறையில் முருகன் குழந்தை வடிவில் வலது கையில் தண்டம் ஏந்தி, கிரீடத்துடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த முருகனிடம், மழலை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். முருகன் சன்னிதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளன. வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலை மத்தியில் இந்தக்கிணறு உள்ளதால், 'மலைக்கேணி' என இவ்வூருக்கு பெயர் வந்தது.

கீழ்பழநி..

குன்றில் இருக்கும் மலைக்கோவில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித் தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோவில் படியிறங்கிச் சென்று தரிசனம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இக்கோவிலை, 'கீழ் பழநி' என்கின்றனர். 

கந்தசஷ்டி விழாவின் ஆறாம் நாளில், சூர சம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கும். பிரகாரத்தில் சக்தி விநாயகர், நவக்கிரகம் சன்னிதி உள்ளது. கோவில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரிநாதர் வீற்றிருக்கிறார். கோவில் அருகில் மவுனகுரு சுவாமி அதிஷ்டானம் உள்ளது.

பதவி உயர்வு, அரசியல் கட்சிகளில் தலைமைப்பதவி வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆகியோர் தெய்வானை தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், விபூதி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்..

திண்டுக்கல் - சிலுவத்தூர் சாலையில் 17 கி.மீ., தூரத்தில் கம்பிளியம்பட்டி. இங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ.,

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...