Friday, September 30, 2022

லிங்கபைரவிஸ்துதி 🌺🌻🌼இது தான் தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். இதை பக்தியோடு உச்சரித்தால், அவள் அருட்பார்வை உங்கள்மீது படரும்

அம்மன் அருளைப் பெற - #நவராத்திரி சாதனா! 🌺🌻🌼
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 வரை கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில் தேவியின் அருளைப் பெற நாம் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு 'சாதனா'வை சத்குரு இங்கே நமக்கு வழங்குகிறார்.
 
#சாதனாபாதை 🌺🌻🌼

யோகக் கலாச்சாரத்தில் ஜூன் மாதத்தில் வரும் கதிர்திருப்பம், தக்ஷிணாயனத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. அதாவது, இப்பூமியின் வடக்குப் பாகத்தைப் பொருத்தவரை, அதன் வானில் சூரியன் தெற்கு திசையை நோக்கி பயணிக்கும் நேரம். இதே போல் குளிர்காலத்தில் வரும் கதிர்திருப்பம், அதாவது டிசம்பர் மாதத்தில், உத்தராயணம் துவங்கும். இது தான் சூரியனின் வடதிசை நோக்கிய பயணம். உத்தராயணத்தை (டிசம்பரில் துவங்கி, ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலம்) 'ஞான பதா' என்றும், தக்ஷிணாயனத்தை (அடுத்த ஆறு மாதக் காலம்), 'சாதனா பாதை' என்றும் வழங்குவர்.

தக்ஷிணாயனம் என்பது அன்னியோன்யத்திற்கான காலம். இப்பூமி தன்னை ஒரு பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம். பெண்தன்மை சார்ந்த பண்டிகைகள் இந்த ஆறு மாதத்தில் தான் கொண்டாடப்படும். நம் முழு கலாச்சாரமும் இதை பின்பற்றியது. இந்த ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பண்டிகை இருக்கும்.

#தேவிபாதை 🌺🌻🌼

பெண்தன்மை நிறைந்த வருடத்தின் இப்பாதியில், செப்டம்பர் 23, குளிர்கால விஷ்வத்தைக் (பகலும் இரவும் சமபாதியாக இருக்கும் நாள்) குறிக்கிறது. இதையடுத்து வரும் முதல் அமாவாசை தான் மாஹாளய அமாவாசை, நம் வாழ்க்கைக்கு பெருமளவில் பங்களித்துள்ள நம் முன்னோர்களுக்கு, நம் நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாள். இந்த மஹாளய அமாவாசையின் இன்னொரு முக்கியத்துவம், அன்றிலிருந்து தேவிக்கு விசேஷமான காலமும் பிறக்கிறது. அன்றிலிருந்து, டிசம்பரில் துவங்கும் உத்தராயணம் வரையிலான மூன்று மாதங்களை 'தேவி பாதை' என்றழைப்பர். இந்த மூன்று மாதங்களில், பூமியின் வடக்குப் பாகம், மிக மென்மையாய் இருக்கும். இதற்குக் காரணம், இந்த மூன்று மாதத்தில் தான், பூமியின் வடக்குப் பாகத்தில் மிகமிகக் குறைவான சூரிய ஒளி விழுகிறது. இதனால் அனைத்துமே சிறிது வீரியம் குறைந்து செயல்படும். தீவிரமான செயல் எதுவுமே இம்மாதங்களில் நிகழாது.

#நவராத்திரிசாதனா 🌺🌻🌼

இந்நேரத்தில் தேவியோடு, அவளின் அருட்கொடையில் வியாபித்திருக்க வேண்டுபவர்களுக்கு, மிக சாதாரணமான, ஆனால் அதேநேரத்தில், மிக சக்திவாய்ந்த நவராத்திரி சாதனாவை சத்குரு இங்கே வழங்குகிறார். இதை வீட்டில் இருந்தவாறே நீங்கள் பின்பற்றி, தேவியின் அருளை வீட்டிலேயே பெறலாம். இதை செப்டம்பர் 26 அன்று ஆரம்பித்து, அக்டோபர் 04 வரை தினமும் பின்பற்ற வேண்டும்.

#சாதனாகுறிப்புகள்: 🌺🌻🌼

தேவிக்கு விளக்கு ஏற்றுங்கள்.'ஜெய் பைரவி' ஸ்துதியை குறைந்தபட்சமாக மூன்று முறை தேவியின் முன்னிலையில் உச்சரியுங்கள். இது தேவியின் படத்திற்கு முன்போ, லிங்கபைரவி குடியின் முன்போ, அல்லது லிங்கபரைவி யந்திரம் / அவிஞ்ன யந்திரத்தின் முன்போ அமர்ந்து உச்சரிக்கலாம். (ஸ்துதியில் உள்ள தேவியின் 33 பெயர்களையும் உச்சரிக்கவேண்டும். இப்படி மூன்று முறை செய்யவேண்டும்.)தேவிக்கு ஏதேனும் அர்ப்பணம் செய்யுங்கள். எதை வேண்டுமானாலும் தேவிக்கு நீங்கள் அர்ப்பணிக்கலாம்.

இதை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பகலோ, இரவோ நீங்கள் செய்யலாம். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எவ்வித உணவுக் கட்டுப்பாடும் கிடையாது. என்றாலும் இந்த நாட்களில் கடைபிடிக்கப்படுவது போல் சாத்வீக உணவை உண்பது அதிக பலனளிக்கும். உங்கள் வழக்கப்படி நீங்கள் செய்யும் பூஜைகளோடு சேர்த்து இதையும் நீங்கள் செய்யலாம்.

#லிங்கபைரவிஸ்துதி 🌺🌻🌼

இது தான் தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். இதை பக்தியோடு உச்சரித்தால், அவள் அருட்பார்வை உங்கள்மீது படரும்.

ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ

அஉம் மஹாதேவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் மஹாஷக்தி லிங்கபைரவி நமஸ்ரீ
நமஸ்ரீ / நமஸ்ரீ / தேவி நமஸ்ரீ /🙇‍♂️

#லிங்கபைரவியில் நவராத்திரி கொண்டாட்டங்கள் : 🌺🌻🌼

நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அத்தனை நற்பலன்களையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் தேவியின் அருள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

செப்டம்பர் 26 - 28 : துர்காவின் நாட்கள் - குங்கும அபிஷேகம் 🌺

செப்டம்பர் 29 - அக்டோபர் 01 : லக்ஷ்மியின் நாட்கள் - மஞ்சள் அபிஷேகம் 🌻

அக்டோபர்  02 - 04 : சரஸ்வதியின் நாட்கள் - சந்தன அபிஷேகம் 🌼

நவராத்திரி, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணம். இந்த ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்னும் மூன்று அடிப்படைப் குணங்களுக்கு தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள் துர்கா, காளி போன்ற தீவிரத்தன்மையிலிருக்கும் தேவிகளுக்கு உரிய 'தமஸ்' என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியோடு தொடர்புடையவை. மென்மையான ஆனால் உலகியல் சார்ந்த பெண்தெய்வங்களுக்கு (ரஜஸ்) உரியவை. கடைசி மூன்று நாட்கள் அறிவு, ஞானம் போன்ற மற்ற விஷயங்களோடு தொடர்புடைய சரஸ்வதி, அதாவது சத்வ குணத்தோடு தொடர்புடையவை. கடைசி நாள், அதாவது பத்தாம் நாள் விஜயதசமி. அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வெற்றி கொள்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மூன்று குணங்களில் எந்த ஒன்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் அழைத்துச் செல்லும். நீங்கள் தமஸில் கவனம் செலுத்தினால் ஒருவகையில் சக்தி வாய்ந்தவராவீர்கள். ரஜஸில் கவனம் செலுத்தினால் மற்றொரு வழியில் பலம் பெற்றவராவீர்கள். சத்வத்தில் கவனம் செலுத்தினால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழியில் வலிமை பெற்றவராவீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சென்றால் அது முழுமையான விடுதலை. இந்த மூன்றையும் நீங்கள் வென்றுவிட்டால், அன்றைய தினம்தான் விஜயதசமி-வெற்றியின் திருநாள்.

ஜெய் பைரவி தேவி லிங்கபைரவி நமஸ்ரீ🌺🌻🌼🙇‍♂️

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...