Sunday, September 4, 2022

ஸ்ரீ அனந்த பத்மநாபன் ஸ்வாமி விரதம்

ஸ்ரீராமஜெயம்🙏
ஸ்ர்வம் ஸ்ரீராம மயம்🙏
ஸ்ரீமதே ராமானுஜாயா நம:



அனந்த விரதம் என்றால் அனந்த பத்மநாப சுவாமியை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் இந்த நாளை, ‘அனந்த பத்மநாப விரதம்’ என்றும்  சொல்லுவார்கள். அனந்த பத்மநாபன் என்றால் திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பத்மநாப ஸ்வாமிகளைத்தான் அனந்தபத்மநாப சுவாமிகள் என்று சொல்வோம்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு வருவது அந்த ரகசிய அறைகளை திறந்தது தான். அதனுள்ளே எவ்வளவு பொன் பொருள் இருந்தது. அப்படிப்பட்ட செல்வ வளங்களை கொண்ட ஒரு தெய்வத்தை நினைத்து இருக்கக்கூடிய விரதம் தான் இந்த அனந்த விரதம். இந்த அனந்த விரதத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றுக் கதை என்ன. இந்த கதையை உணர்த்தும் வகையில் நம்முடைய வீட்டில் நாம்  எப்படி விரதம் இருந்தால், நம் வீட்டில் செல்வ கடாட்சம் மேலோங்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

பல யுகங்களுக்கு முன்பு சுமந்தன், தீக்ஷாதேவி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக சென்றது. இவர்கள் இருவருக்கும் சீலை என்ற பெண் மகளாக பிறந்து இருந்தால். சீலை சிறுவயதாக இருக்கும்போதே, சீலையின் தாயார் தீக்ஷாதேவி மரணம் அடைந்து விட்டாள். சுமந்தன், மனைவியை இழந்து தனி மரமாக இருப்பதால் சுமந்தனால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்வதற்கு முன் வர முடியவில்லை. இதனால் சுமந்தன் இரண்டாவது திருமணம் செய்தான். சுமந்தனின் இரண்டாவது மனைவியின் பெயர் கர்க்கசை‌‌.

வழக்கம் போல தான். முதல் மனைவியின் பெண்ணை பார்த்தால் இரண்டாவது மனைவிக்கு விருப்பம் கிடையாது. சித்தி கொடுமை. சீலை வளர்ந்து பெரியவள் ஆனவுடன் அவளுக்குத் திருமணமும் நடந்து முடிந்தது. சீலையை கௌண்டின்யர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள். தாய் வீட்டிலிருந்து மணமுடித்த பெண்ணுக்கு சீதனமாக ஏதாவது கொடுக்க வேண்டுமல்லவா.

சுமந்தன் தன்னுடைய மனைவி கர்க்கசையை பார்த்து, வீட்டில் ஏதாவது பொருள் இருந்தால் அதைக் கொண்டு வந்து கொடு என்று சொல்கிறான். ஆனால் கர்க்கசையோ, வீட்டில் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று விடுகிறாள். என்ன செய்வது. சுமந்தன் தன் வீட்டில் இருந்த கோதுமை மாவை தன்னுடைய மகளுக்கு சீதனமாக கொடுத்து அனுப்பி வைக்கின்றான்.

சீலையும், சீலையின் கணவன் கௌண்டின்யரும் தனது பயணத்தை தொடங்குகிறார்கள். கால்நடையாக தானே பயணம் செய்யவேண்டும் அந்த காலத்திலெல்லாம். இவர்கள் பயணம் செய்யும்போது  ஒரு நதிக்கரை ஓரமாக ஓய்வு எடுத்துக் கொண்டபோது அந்த நதிக்கரையில் அன்று நிறைய பெண்கள் கூடி சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, ஏதோ ஒரு பூஜையை செய்து கொண்டிருந்தார்கள். இதை சீலை கவனித்து, அங்கு பூஜை செய்து கொண்டிருக்கும் பெண்களிடம் போய் கேட்கின்றாள். ‘இது என்ன பூஜை எதற்காக செய்கிறார்கள் என்று.’

அங்கு உள்ள ஒரு பெண் இந்த பூஜையை பற்றி விரிவாக சீலைக்கு எடுத்துரைக்கின்றார். இது அனந்த பத்மநாப ஸ்வாமிகளை நினைத்து செய்யக்கூடிய பூஜை. இந்த பூஜையை செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். இழந்த செல்வத்தை நாம் மீட்டு எடுத்து விடலாம். வீட்டில் கஷ்டம் என்பதே இருக்காது. என்றபடி பூஜையின் மகிமையை எடுத்துச் சொல்கின்றாள்.

சீலையும் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையில் தலைக்கு குளித்துவிட்டு, தன்னுடைய தந்தை தனக்கு சீதனமாக கொடுத்த கோதுமை மாவில், மாவு பிசைந்து எப்படியோ 14 பூரி போல ஒரு உணவை சமைத்து அதை பத்மநாப ஸ்வாமிகளுக்கு நிவேதனமாக வைத்து, சிவப்பு நிறப் கயிறை வைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு, பத்மநாபஸ்வாமிகளை நினைத்து பூஜை செய்கின்றாள். பூஜையும் நிறைவடைந்தது.

பூஜையின் இறுதியில் நோன்பு கையிறாக அந்த சிவப்பு கயிறை எடுத்து சீலை, தன்னுடைய கையில் கட்டிக்கொண்டால். சீலை இந்தக் கயிறை தன்னுடைய கையில் கட்டிக் கொண்டதும் அவளுடைய அங்கங்கள் முழுவதும் தங்க ஆபரணங்களால் ஜொலிக்க ஆரம்பித்தது. அவளுடைய வாழ்வும் சிறப்பாக மாறியது. சீலை மேற்கொண்ட இந்த அனந்த விரதத்தை தான் நாமும் நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும். இந்த நிகழ்வு நடந்தது புரட்டாசி மாதம் மூன்றாவது நாள்.

இந்த அனந்த விரதத்தை நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி செய்வது. காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய வீட்டில் அனந்த பத்மநாப சுவாமிகள் படம் இருந்தால் அந்த படத்திற்கு சிவப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பெருமாள் படம், கிருஷ்ணர் படம் எது இருந்தாலும் சரி தான். அந்த படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்

நீங்கள் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். முடிந்தால் சிவப்பு நிற பூக்களை பூஜைக்கு பயன்படுத்துங்கள். சிவப்பு நிறத்தில் கட்டாயமாக இந்த பூஜைக்கு சரடு தேவை. சிவப்பு நிற நூல். சிவப்பு நிற கயிறு ஏதாவது கட்டாயமாக இருக்கவேண்டும். வெள்ளை நிற நூலில் கொஞ்சமாக குங்குமத்தை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து, உலரவைத்து வெள்ளை நிற நூலை சிவப்பு நிற நூலாக மாற்றிக் கொண்டாலும் சரி தான். இந்த சிவப்பு நிற கயிறை பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

நிவேதனமாக உங்களால் முடிந்த ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து வையுங்கள்‌. முடிந்தால் கோதுமை மாவில் 14 பூரிகளை நிவேதனமாக வைக்கலாம். பிரசாதம் செய்ய முடியவில்லை என்றால் பழங்கள் நிவேதனமாக வைத்தால் கூட போதும் தான். அடுத்தபடியாக தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வீட்டில் பொன் பொருள் எல்லாம் குறைவில்லாமல் பெருக வேண்டும் என்று அனந்த பத்மநாப சுவாமிகளை மனதார நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு இறுதியாக தூப தீப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜை முடிந்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து சுவாமியின் பாதங்களில் வைத்து இருக்கிறீர்கள் அல்லவா அந்த சிவப்பு கயிறு, அதை எடுத்து உங்களுடைய கையில் கட்டிக் கொள்ளலாம். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் இதை கையில் கட்டிவிடலாம்.

மூன்று நாட்கள் கழித்து கையில் இருக்கும் கயிறை அவிழ்த்துக் கொள்ளலாம். இதை கட்டாயமாக, ஓடுகின்ற நீரில் விட வேண்டும். அப்படி இல்லை என்றால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மனிதர்கள் கால் படாத இடத்தில் கொண்டுபோய் போடவேண்டும். இந்த கயிறு அனாவசியமாக மனிதர்களின் காலில் மிதி படக்கூடாது. அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் ஏதாவது மரம் இருந்தால் அந்த மரத்தில் கட்டி தொங்க விட்டு விடுங்கள்.

இவ்வாறு வருடம் தோறும் இந்த பூஜையை செய்து வருபவர்களுடைய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. தொழில் மேலோங்கும். லாபம் அதிகரிக்கும். பணம் காசு நகை பொன் பொருள் ஆபரணம் அனைத்தும் சேர்ந்து கொண்டே செல்லும். நம்பிக்கையோடு இந்த விரதத்தை மேற்கொண்டு அனைவரும் நல்ல பலனைப் பெற வேண்டும் என்று அந்தப் பெருமாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

ஸ்ரீ அனந்த பத்மநாபன் ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏

ஓம் நமோ நாராயணாய 🙏🏻

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...