Tuesday, September 27, 2022

சுவாரஸ்ய பகுதி.. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!! நவராத்திரி உருவான கதை

சுவாரஸ்ய பகுதி. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!!
                நவராத்திரி உருவான கதை...!!


சக்தி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.

மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அவற்றிற்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.

நவராத்திரி உருவான கதை :

மகிஷாசுரன் என்னும் ஓர் அரக்கன் மூவுலகையும், தேவர்களையும் அடிமைகளாக்கி அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் ரம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன். அதனால்தான் மனித உடலுடனும், எருமை தலையுடனும் தோன்றினான். மகிஷாசுரன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாறாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றியதும் சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். இவ்வுலகில் பிறந்த யாவருக்கும் இறப்பு என்பது நிச்சயம் நடந்தே தீரும். அதனால் உன் வரத்தை மாற்றி கேள் என்றார் பிரம்மதேவர்.

அதற்கு மகிஷாசுரன் முன்யோசனை ஏதுமின்றி எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னி பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வரத்தையே பிரம்மதேவரும் அருளினார். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷாசுரன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

வரத்தை பெற்றதும் மகிஷாசுரனின் அராஜகம் ஆரம்பித்தது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்கு உதவி செய்ய மகிஷாசுரனிடம் போருக்கு சென்றார். ஆனால், மகிஷாசுரனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

எதனால் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். பின் பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றதால் தான் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் சென்று முறையிட்டார்.

சிவன் தன் சக்தியால் 'சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு, சிவப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

மகிஷாசுரன் தன்னிடம் போர் செய்ய வரவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷாசுரனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய அவன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை அறிந்த சந்தியாதேவி, 'தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்" என்று தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷாசுரன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினான். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பவில்லை. இதை கண்ட மகிஷாசுரன், கடைசியாக தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷாசுரனிடம் பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷாசுரன் மாண்டான்.

இதை கண்ட தேவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிஷாசுரனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமர்த்தினி என்று தேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...