Wednesday, September 28, 2022

தானாய்_முலைத்த_லிங்கமும்_வில்வமும்

#தானாய்_முலைத்த_லிங்கமும்_வில்வமும்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். 

அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். 

பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். 

ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். 

எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!

பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.

""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது. 

""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். 

வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். 

அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். 

மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். 

அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல்,மனம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டார் பார்த்த  அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால்,  தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டார் .ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தார் .அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான்.

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் (நெரூர்) 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார். அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர்.தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்..
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

வாழ்வில் ஒரு முறையேனும் கரூர் அருகிலுள்ள நெருரில் உள்ள ஶ்ரீ சதாசிவபிரமேந்திராள் மஹா சந்நதி அமைந்துள்ள தலத்திற்க்கு சென்று தரிசித்து வாருங்கள்...

செல்லும் வழி: கரூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ,லோக்கல் பஸ் மூலம் இந்த சிற்றூரை அடையலாம்.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...