Sunday, September 25, 2022

வேடன் ரூபத்தில்... கையில் சேவலுடன் முருகன்..

தினம் ஒரு திருத்தலம்... வேடன் ரூபத்தில்... கையில் சேவலுடன் முருகன்...!!
                அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில்...!!


🌺 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு பழனியப்பர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌺 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னும் ஊரில் அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌺 நாமக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சி என்னும் ஊர் உள்ளது. பேளுக்குறிச்சியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌺 மூலவரான பழனியாண்டவர் வேடன் ரூபத்தில், மூன்றரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


🌺 இவர் தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.

🌺 மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🌺 பத்மாசுரனை போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன் என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது.

🌺 மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறம் நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.

வேறென்ன சிறப்பு?

🌺 இத்திருக்கோயிலில் இடும்பனுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.


🌺 இக்கோயிலில் பழனியாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர்.

🌺 வலதுபுறம் நவகிரகம் மற்றும் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. மண்டப உச்சியில் ராகு கேது பாம்புகள் சூரிய, சந்திரரைப் பிடிக்கும் கிரகண சிற்பம் அமைந்துள்ளது.

🌺 இக்கோயிலின் மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே உள்ள யானை வடிவிலான வற்றாத சுனையை யானைப்பாழி தீர்த்தம் என்கின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌺 கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பௌர்ணமி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌺 தோல் மற்றும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌺 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் காவடி எடுத்தும், அலகு குத்தியும், மொட்டை போட்டும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...