Saturday, October 1, 2022

திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது...

♥  புரட்டாசி   சிறப்பு  பதிவு - 3 ♥
♥  திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம் 2022 . ♥ 
♥“திருமலை திருப்பதி சில தகவல்கள். பாகம் - 1. ”♥
                     ♥ திருப்பதி  திருமலைக்கு    சென்று ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... 
                     ♥ இந்த  மரபு  ராமானுஜரால்  தொடங்கி,  அவர்  காலம் முதல்   கடைபிடித்து வரப்படுகிறது.
                     ♥ திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
                     ♥ ♥ 1வது கோவில் :-  பத்மாவதி தாயார்  கோவில்,  அலமேலுமங்காபுரம்.  கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.  காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
                     ♥ ♥ 2வது கோவில் :-  கீழ் திருப்பதியில்  கோவிந்தராஜ சுவாமி கோயில், (Sri Govindarajaswamy Temple), கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து நான்காவது கிலோமீட்டரில் நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது.   இராமானுசரால் 1130இல் இக்கோயில் நிறுவப்பட்டது.                காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.  
                     ♥ ♥ 3வது கோவில் :- கல்யாண  ஸ்ரீனிவாச  பெருமாள்  கோவில்,  ஸ்ரீனிவாச மங்காபுரம்.  கீழ் திருப்பதியில் இருந்து பஸ் அல்லது கார் மூலமாக ஸ்ரீனிவாச மங்காபுரம் சென்று ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.  கீழ் திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.  காலை5-30மணி முதல் இரவு 7-30 மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
                     ♥ ♥ 4வது கோவில் :-  கபிலேஸ்வர் சுயம்பு லிங்க சிவாலயம்.   திருமலையில் உள்ள சேஷாத்திரி, நீலாத்திரி, கருடத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்திரி, நாராயணதிரி, வெங்கடாத்திரி ஆகிய ஏழு மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் கபில மகரிஷியால்  சேஷாசலம் என்ற கபிலதீர்த்த அருவியும், சரோவர் ஏரி என்ற கபிலதீர்த்த தடாகமும்   கொண்டு வரப்பட்டு,   சிவ பார்வதியின் அருளைப் பெற்ற  சுயம்பு  லிங்கமும்    அமையப்பெற்றுள்ள  கோயில். 
 இதுவாகும்.   கோவிலுக்கு  எதிரில்  பெரிய  நந்தி  சிலை  உள்ளது.  கபிலேஸ்வர சுவாமி கோயில் வளாகத்திற்குள் 100 அடி உயரத்தில் இருந்து சரோவர் ஏரி என்ற கபிலதீர்த்த தடாகதில் அருவி   தண்ணீர் விழுந்துக் கொண்டிருக்கும்.  திருமலை மலைப்பாதையை நோக்கி செல்லும்போது, மலையை நெருங்கும்போது பாதையிலிருந்து பார்த்தாலே கபிலதீர்த்த அருவி தெரியும்  திருமலையில் உள்ள புண்ணியதீர்த்தங்களில் திருமலையின் அடிவாரத்திலுள்ள புண்ணியதீர்த்தம் இதுமட்டுமே. கபிலதீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும். காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
                     ♥ ♥ 5வது கோவில் :-  திருமலை மேல் உள்ள ஆகாசகங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும். முன்பு திருப்பதி மலையிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீரை அதிகாலையில் அர்ச்சகர்கள் எடுத்து வந்து, ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).  தற்போது புனிதம் கருதி ஆகாச கங்கை தீர்த்தத்தை மனிதர்கள் உபயோகப்படுத்தும் இடத்திற்கு மேல் இருந்து பைப் லைன் மூலம் ஆனந்த நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. திருமலை ஆனந்த நிலையத்தில் அபிஷேகத்திற்கும், இதர சடங்குகளுக்கும் ஆகாச கங்கை தீர்த்தமே உபயோகப்படுத்தப்படுகிறது.  திருமலை வெங்கடாசலபதி தாமரை மலர் பாதங்களுக்கு கீழே இந்த தீர்த்தம் உருவாவதாக கூறப்படுகிறது. எல்லா  காலங்களிலும் இந்த தீர்த்த அருவி நீர் வருகிறது. பக்தர்கள் தொட்டு வணங்க அருவியிலிருந்து சிறிய பிரிவு ஒன்று பிரித்து விடப்பட்டுள்ளது.  மேல் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 4 வது கிலோ மீட்டரில் ஆகாச கங்கை அருவி அமைந்துள்ளது. கீழே மலைச்சரிவில் இறங்கி மனிதர்கள் தீர்த்தமாடுகிறார்கள்.
                     ♥ ♥ 6வது கோவில் :-  அதற்குப் பிறகு   பாபநாசம்  தீர்த்தத்தில் நீராட வேண்டும். இது ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. தற்போது பாபவிநாசம் தீர்த்தத்தின் குறுக்கே பாபவிநாச அணை கட்டப்பட்டு அந்த நீர் திருமலையில் வாழும் மக்களுக்கு விநியோகிக்க படுகிறது.  பாபவிநாசம் தீர்த்தத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சுவர் எழுப்பி வடிகால்கள் மூலம் நீர் விழச்செய்து அதில் பக்தர்கள் தீர்த்தமாட ஏற்பாடுசெய்துள்ளார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடை மற்ற தனித்தனி இட வசதி செய்துள்ளார்கள்.  தீர்த்தத்திற்கு அருகில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு தீர்த்தமாடினால் முன்ஜென்ம வினைகள் உட்பட அனைத்து பாவங்களும் தீரும். திருமணம் கூடிவரும். குழந்தை வேண்டுவோர் தீர்த்தமாடி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். 
இதற்கு சிறிது தூரத்தில் வேணுகோபாலஸ்வாமி கோவில் உள்ளது.
                     ♥ ♥ 7வது கோவில் :-  அதற்குப் பிறகு   ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தில் நீராட வேண்டும்.  ஸ்வாமி புஷ்கரணியின் தீர்த்தத்தை பம்ப் செய்து, ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தின் தென்மேற்கு கரையில் குழாய் மூலம் தீர்த்தமாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.   இங்கு தீர்த்தமாடிய பின்பு  புஷ்கரணி தீர்த்தத்தின் வடமேற்கு கரையில் உள்ள   வராகமூர்த்திக்கு வேங்கடவன் கொடுத்த வாக்கினை நாம் காப்பாற்ற,  வராகமூர்த்தி பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து வணங்கிய பின்பு திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும்.   வராகமூர்த்தி பெருமாள் கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆறு மணி முப்பது நிமிடம் முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
                     ♥ ♥ 8வது கோவில் :-  அதற்க்கு  பின்பு தான்   “8 வதாக  ஆனந்த நிலையம்   என்ற தங்க  மூலஸ்தான  விமானம்  கொண்ட  வெங்கடாசலபதி பெருமாள்  கோவிலில் வெங்கடாசலபதியை  தரிசிக்க  வேண்டும். 
                       ♥  வெங்கடாசலபதி பெருமாள். கோவிலுக்குள் நுழையும்
முன்பு (படி காவிலி என அழைக்கப்படும் ) ராஜகோபுரத்தை, ஆண்கள் தலைக்குமேல் கை தூக்கி குவித்தும், பெண்கள் மார்புக்கு அருகில் கை குவித்தும் வணங்க வேண்டும். பெண்கள் தலைக்குமேல் கை தூக்கக்கூடாது. 
                       ♥  பின்பு வரிசையில் வரும்போது ராஜகோபுர வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும்; 
                       ♥  கோவிலுக்கு உள்ளே  கிருஷ்ண தேவராய மண்டபம்,  ரங்க மண்டபம்,  திருமலை ராய மண்டபம்,  ஜனா மண்டபம்,  துவஜஸ்தம்ப மண்டபம்,  திருமாமணி மண்டபம்,  உண்டியல் மண்டபம்  ஆகிய  மண்டபங்கள்   உள்ளது. - உண்டியல் மண்டபம் பரகாமணி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்டபத்தில் கோயிலின் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி வைக்கப்படுகிறது. 
                       ♥  இக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும்  கொண்டது. 
                       ♥  திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. 
                       ♥  விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன. 
                       ♥  மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.
                       ♥  ராஜகோபுர வாசற்படியை  தாண்டியபின்பு   கொடிமரத்தை வணங்கவேண்டும்;  
                       ♥  அதற்க்கு அடுத்து   திருமாமணி மண்டபத்தில்  உள்ள நடிமி படி காவிலி : இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின்  உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. ****" வெண்டிவாகிலி "***** என்று இந்த கதவுகளுக்கு பெயர்.  வெள்ளி கவசம் மூடிய (நமிடி படி காவிலி என அழைக்கப்படும் ) சிறிய வாசலுக்கு முன்பு சற்று நின்று உங்கள் கோரிக்கையை மனதுக்குள் சொல்லி பெருமாளை வேண்டிக்கொண்டு, வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும்.
                       ♥  “பங்காரு வகிலி’ எனப்படும்  நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம்.  இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.  இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர்.  இவர்களை  வணங்கி வெங்கடாசலபதியை தரிசனம்  செய்ய  அனுமதிக்கும்படி  வேண்டுங்கள். 
                       ♥  பின்பு அங்கிருந்து பெருமாளின் கர்பக்ருஹத்தின் முன் மண்டபம் வழியாக செல்வோம். உள்ளே உள்ள ஒரு ஸ்தம்பத்தில் வெளியில் வராகர் கோவிலில் உள்ளது போலவே ரூபத்துடன்  ஆதி வராகர் இருப்பார். அவரையும் சேவித்துவிட்டு பெருமாளின் முன் எப்போதும் நிற்கும் கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்ல வேண்டும். 
                       ♥  வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை “ராமர் மேடை’ என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்தி களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.  குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.   இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார்.  ராமர், சீதா, லட்சுமணர், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகியோரை  வணங்கி,  கர்ப்பகிரகத்தில்  உள்ள வெங்கடாசலபதி,  மலையப்பர்,   போக சீனிவாசர் ஆகியோரை  தரிசித்து  வணங்க வேண்டும்.
                       ♥  வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.            
                       ♥  இடது கோடியில் பழைய மடப்பள்ளியை,  (கோவிலின் kitchen) பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறையை “பொட்டு’ என்று சொல்கிறார்கள். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். அங்கு  “பொட்டு அம்மா’ என்கிற  “சமையலறை பெண்மணி,’  இவளை “மடப்பள்ளி நாச்சியார்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளாதேவி  என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம், பணியாரம், லட்டு, வடை, அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறையை “படிப்பொட்டு’ என அழைக்கிறார்கள்.இருக்கும், அங்கே உள்ளே மேற்பார்வை பார்த்துக்கொண்டு வகுளாதேவி (ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார் - யசோதையாக பிறந்தவரும் இவரே) இருப்பார். அவரை கண்டிப்பா சேவிக்கணும். 
                       ♥  அருகில்  தீர்த்தம், சடாரி சாதிப்பார்கள். 
                       ♥  16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாசாரியாரான வியாசராய தீர்த்தர்,   ஆனந்த நிலையம்   என்ற தங்க  மூலஸ்தான   விமானத்தின் வடகிழக்கு திசையில் உள்ள  இறைவனின் சிறுபிரதிமை மீது தியானத்தில் மூழ்கி முக்தியடைந்தார். அன்றிலிருந்து அப்பிரதிமை விமான வேங்கடேசர் என பக்தர்களால் வணங்கப்பட்டுவருகிறது.
                       ♥  விமானத்தின் வடகிழக்கு மூலையில் இன்றும் அடியவர்கள் காணும் வண்ணம் அப்பிரதிமைக்கு மட்டும் வெள்ளியினால் வேயப்பட்ட திருவாசியோடு காட்சியளிக்கிறார் விமான வேங்கடேசர். மூலஸ்தான தங்க கோபுரத்தில் வெள்ளி பிரபை வைத்து TTD தேவஸ்தானத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மூலஸ்தான  விமான  தங்க கோபுர வெங்கடாசலபதியிடம் உங்கள் கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் பொறுமையாக மனதுக்குள் கூறி வணங்கி வேண்டுங்கள். இங்கு பலர் சற்று உயரமான படிகள் மீது நின்று வணங்கிக்கொண்டு இருப்பார்கள்.   இங்கு உங்களை யாரும் அவசரப்படுத்த மாட்டார்கள். 
                       ♥  மூலஸ்தான  விமான  தங்க கோபுர  விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
                       ♥  பின்பு காணிக்கை செலுத்துவதாக இருந்தால், உண்டியலில் செலுத்துவது, கோவிலில் இலவச பிரசாதம் வாங்குவது ஆகியவற்றை முடித்துக்கொண்டு , சாமிக்கு முதுகு காட்டாமல் ராஜகோபுரத்துக்கு வெளியில் வாருங்கள். 
                       ♥   மூலவர் தரிசனம் பார்த்த பின்பு ராஜகோபுரத்துக்கு வெளியே வரும்வரை எங்கும் அமரக்கூடாது.

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....