_கமலமுனி சித்தர் வாழ்க்கை வரலாறு_
குரு: போகர், கருவூரார்
காலம்: 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
சீடர்கள்: குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
சமாதி: ஆரூர்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
சித்தர்களின் தாய் வீடான சதுரகிரியில் பாம்பாட்டிச் சித்தரும், இடைக்காட்டுச் சித்தரும் ஆனந்தமாக சுற்றி சுற்றி வந்தனர். அப்போதுதான் உலகோர் தொழும் கௌசிக மாமுனியை கண்டனர். தரிசித்த கணத்திலேயே தங்களை மறந்து அவர் பாதம் படர்ந்தனர். தம்மளவில் பெருஞ்சித்தர்களாக இருந்தாலும் கௌசிக மாமுனி போன்றோர் வரும்போது நமஸ்கரித்தல் என்பது ஞானிகளுக்குத்தான் சாத்தியமாகும். ஆஹா, பாம்பாட்டி சித்தரே நமஸ்கரிக்கிறார் எனில் அவர் எத்தகைய ஞான புருஷராக இருப்பார் என்று மற்ற எல்லோரும் அவரை தரிசிப்பார்கள்.மேலும், ஞானி ஒருவரால்தான் இன்னொரு ஞானியை அறிய முடியும். இல்லையெனில் நாமே இவர் ஞானி, அவர் ஞானி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இன்று வரையிலும் பாரத தேசத்தில் வாழ்ந்த ஞானிகளை, மற்றொரு ஞானி சொல்லித்தான் நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இந்த இரு சித்தர்களும் கௌசிக முனிவரை வணங்கி எழுந்து பணிவாக நின்றனர். ‘‘என்னால் தாங்கள் இருவருக்கும் என்ன உதவி செய்யக்கூடும்” என்று கௌசிக முனிவர் கேட்டார்.‘‘தங்களைப் போன்ற உயர்ந்த ஞானிகளிடம் உபதேசம் மட்டுமே வேண்டுகிறோம்” என்று அவர்கள் அமைதியாக பதிலளித்தனர். ஞானிகளைக் கண்டால் என்ன கேட்க வேண்டும் என்று இவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
உலகியல் பொருட்களை எது கேட்டாலும் அது மீண்டும் ஜீவனை உலக மாயையில்தான் தள்ளும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே உபதேசம் செய்யுங்கள் என்று அவர்கள் வேண்டிக்கொண்டபோது கௌசிகனார் உற்றுப் பார்த்து, மெல்லிய குரலில் உபதேசம் ஈந்தார். குருவின் வாக்குகளோடு, சக்தியும் சேர்ந்து அவர்கள் இருவருக்குள்ளும் கலந்தது. குருவிற்கு கைங்கரியம் செய்வது என்பது அவர் கூடவேயிருந்து சிறு சிறு வேலைகள் செய்வதோடு முடிந்து போவதில்லை. குரு காட்டிய வழியில், அவர் உபதேசித்த மார்க்கத்தில் ஈடுபட்டு நடத்தலே ஆகும். உண்மையான குரு தன்நிலைக்குத்தான் சீடர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அதற்காக சீடனை சோதித்தாவது சேர்த்துக் கொள்கிறார். ஏனெனில் நான் எனும் அகந்தையை வருடிக் கொடுத்தால் அதீதமாக வளரும்.
சத்குரு அதை எப்போதும் இரு துண்டாக வெட்டி விடவே துணிவார். இப்போது பாம்பாட்டிச் சித்தரும், இடைக்காட்டுச் சித்தரும் சட்டென்று தவத்தில் ஆழ்ந்தனர். கௌசிக முனிவரின் உபதேசம் எப்படியிருந்ததெனில், ‘‘பட்டமரம் துளுத்ததொரு கதையைப்போல பாங்குடனே யுபதேச மருளுந்தந்து” என்கிறார், அகத்தியர். இதில் பாங்கான எனும் வார்த்தைக்கு, சித்தர்கள் இருக்கும் நிலையை அறிந்து உபதேசத்தோடு சேர்த்து அருளும் தந்தார் என்று பொருள் தருகிறார். அடுத்த வரியிலேயே, ‘‘சட்டமுடன் மலையருகில் போவதற்கு சாங்கமுடன் வுத்தாரம் பெற்றுக்கொண்டு” என்கிறார்.
அதாவது இந்த மலையின் அருகில் என்பதற்கு சதுரகிரியின் நாயகனான ஈசனுக்கு அருகிலே என்று பொருள்.
சாங்கம் என்பதும் யோகம் என்று பொருள்படும்.
உத்தாரம் என்பது ஜீவனை மேல் நிலைக்கு உயர்த்தும் செய்கை;
குருவினால் கரையேற்றப்படும் கருணை.
இப்படிப்பட்ட உபதேசத்திற்கும், தீட்சைக்கும் பிறகு,
‘‘திட்டமுட னாலமரம் பொந்திலப்பா தீர்க்கமுடன் யோகமது செய்தார்பாரே” என்கிறார்.
இரு சித்தர்களும் உடல், உலகம் என அனைத்தையும் மறந்து நிர்விகல்ப சமாதி நிலையில் பெரிய பொந்துள்ள ஆலமரத்திலேயே கிடந்தனர் என்கிறார்.
மேலும்,
‘‘அவரைப்போல் விருட்சந்தன்னில் லாரேனும் சமாதிமுக மிருந்ததில்லை” என்று
அவர்கள் இருவரின் உயர்ந்த நிலையினை எடுத்துச் சொல்கிறார்.
அவர்கள் சமாதி நிலையில் இருந்தபோது சீடர்கள் அவர்களை பாதுகாத்தும், பூசித்தும் வந்தனர். சமாதியிலிருந்து வெளியே வந்து பல நூல்கள் செய்தனர். இவையெல்லாமுமே இந்த யுகமான கலியுகத்தில்தான் நிகழ்ந்தது என்று காலத்தையும் அகத்தியர் குறிப்பிடுகிறார். மேலும் கமலமுனி எனும் சித்தரைப் பற்றி பல ஆச்சரியமான தகவல்களை கூறுகிறார். அவருக்கும் சதுரகிரிக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார்.
கமல முனிவர் வைகாசி மாத பூச நட்சத்திரத்தில் அவதரித்தவராவார். அவர் பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார்.
‘‘சீரேதான் சீனபதி தன்னிலப்பா சிறப்புடனே நெடுங்காலம் இருந்த சித்து” என்கிறார்.
அப்பேற்பட்ட கமலமுனி சதுரகிரியை நோக்கி வந்தார். சித்தர்களின் பெருநூல்களை அரங்கேற்றம் செய்ய எங்கெங்கோ அலைந்து இறுதியில் சதுரகிரிக்கு வந்தார். முழுவதும் வேதாந்த விசாரங்கள் நிறைந்த நூலை பல தர்க்கவாதம் பேசிப் பேசி வெளிவிடாது தடுத்தனர்.
அப்போதுதான், ‘சித்துமுனி கமலர்தாமும் யெழிலாக சதுரகிரி மலையோரந்தான் சட்டமுடன் ரோமரிஷி தன்னைக் கண்டார்’.
ரோமரிஷியை கண்டு இதுவரை விதிவசமாக நிகழ்ந்தவற்றை கூறினார்.
ரோமரிஷி, ஆறுதல் அளிக்கும் வகையில்,
‘‘பட்டயம்போல் வரங்கேற்றல் செய்வதற்கு பாங்குடனே சம்மதங் கொண்டருளினாரே” என்று கூறுகிறார்.
இப்படிப்பட்ட அருமையான நூலை அரங்கேற்றம் செய்வதற்கு எங்களுக்கு சம்மதம் என்று கமலமுனியின் கவலை தீர்த்தார்.சகல சித்தர்களும் ஒன்று கூடினர். இருள் அகன்ற குகையினில் ரிஷிகள், தேவர்கள் என்று எழில்மிக்கோர்கள் கூட்டமாக அமர்ந்தனர். ‘‘மருளகற்றும் கிரந்தமதை கண்டாராய்ந்து மார்க்கமுடன் வரங்கேற்றல் செய்தார் பாரே” என்று அகத்தியர் கூறுகிறார்.
மருளகற்றும் என்பதை உலக மாயையான மயக்கத்தை அகற்றிடும் ஞான நூலை அரங்கேற்றம் செய்தார் என்று கொள்ள வேண்டும். இந்த நிகழ்விற்குப் பிறகு கமல முனிவர் சமாதியடைந்ததாக பாடல் தெரிவிக்கிறது. இங்கு சமாதி என்பது தனக்குள் தான் ஆழ்ந்து ஆத்மானுபவம் பெற்ற நிலையாகும்.
சில சமயம் முற்றிலும் தம்மை மறைத்துக் கொண்டு எங்கேனும் குகைகளில் சமாதியில் இருப்பர். ஒரு பாடலில்
‘தேகமதை சிலகாலம் பூலோகத்தில்
தெளிவுடனே யாரொருவர் காணாமற்றான்
யூகமதாய் மறைத்து வைத்து”
என்று சில காலங்கள் தம்மை மறைத்துக் கொள்ள கமலமுனி ஆவலுற்றார்.
கமலமுனி தான் சொன்னதுபோலவே, ‘‘கமல முனிவர்தாமும் செத்தவர்போல் சதுரகிரி மலையோரத்தில்” என்று தம்முடலை கிடத்தி சமாதியில் ஏகினார்.இப்படி சதுரகிரியில் எத்தனையோ சித்தர்கள் சமாதி கொண்டருளினர். இவர்கள் சமாதியில் கிடந்த இடங்களை சுந்தரமகாலிங்கம் அருளினில் மட்டுமே நம்மால் காணமுடியும். சதுரகிரியின் உச்சியில் சித்தர்களுக்கெல்லாம் மகாசித்தர் ஒருவர் இருந்தார். அவர் திருப்பெயர் காலாங்கிநாதர்.
அவர்தம் நாமத்தை சொல்லியே பல சித்தர்கள் முக்தி பெற்றனர்.
ஓம் நமசிவாய நம ஓம் சிவாய நம ஓம். . .
No comments:
Post a Comment