Thursday, October 27, 2022

சபரிமலை தர்மசாஸ்தா என்னும் *ஸ்ரீஐயப்பசுவாமி (மணிகண்டன்) திருக்கோயில் வரலாறு:*_

_கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹரிஹரசுதனான கலியுக வரதன் சபரிமலை தர்மசாஸ்தா என்னும் *ஸ்ரீஐயப்பசுவாமி (மணிகண்டன்) திருக்கோயில் வரலாறு:*_


கேரளாவில் உள்ள சாஸ்தா கோவில்களில் மிகவும் புகழ்பெற்றதும் முக்கியமானதும் ஐயப்ப சுவாமிக்காக கட்டப்பட்ட சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலாகும். 

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மேலும் மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

பூப்படையாத சிறுமிகளையும், மாதவிடாய் நின்ற பெண்களையும் மட்டுமே சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. 

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.

மூலவர் : ஐயப்பன் என்னும் தர்மசாஸ்தா
தீர்த்தம்: பம்பை நதி
ஊர்: சபரிமலை
மாவட்டம்: பத்தனம்திட்டா
மாநிலம் : கேரளம்

#சுவாமி_ஐயப்பன் - பிறப்பு மற்றும் வரலாறு:

மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்குக் காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன்.

பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார், இதன் விளைவாக தான் ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும்.

மதுரை, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பரவியிருந்த பாண்டிய சாம்ராஜ்ஜியத்துக்கு முந்தைய ஆட்சியாளரான திருமலை நாயக்கரால் வெளியேற்றப்பட்ட பாண்டிய வம்சாவளியினர் வள்ளியூர், தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில் மற்றும் சிவகிரி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் திருவாங்கூரின் பல பகுதிகளிலும் தங்கள் சமஸ்தானத்தை விரிவுபடுத்தி இருந்தனர். அவர்களில் சிலர் சிவகிரியின் செம்பழநாட்டுக் கோவிலை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எண்ணூறு வருடங்களுக்கு முன் பந்தள நாட்டை ஆளும் உரிமையை திருவாங்கூர் ராஜா வழங்கியிருந்தார். சுவாமி ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை மன்னர் ராஜசேகரன் இந்த அரச வம்சத்தை சேர்ந்தவராவார். 

நீதியும் நேர்மையும் புத்திசாலித்தனமும் இறையாண்மையும் கொண்ட மன்னர் ராஜசேகர் அவருடைய குடிமக்களால் மிகுந்த மரியாதையுடன் போற்றப்பட்டார். அவருடைய ஆட்சிக்காலம் அந்த நாட்டின் பொற்காலமாக இருந்தது. ஆனால் மன்னருக்கோ மிகப்பெரிய மனக்குறை ஒன்று இருந்தது. அவருக்கு குழந்தை இல்லை. அவருடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு மகுடத்தை ஏற்க ஒரு வாரிசு இல்லை. மகிழ்ச்சியற்ற ராஜாவும் அவருடைய பட்டத்து ராணியும் ஒரு குழந்தைக்காக சிவபெருமானிடம் இடைவிடாமல் வேண்டினர்.

அதே நேரத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய கடுமையான தவத்தின் விளைவாக மகிஷனை பூமியில் யாராலும் அழிக்க முடியாது என்கிற அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரம் அளிக்க வேண்டிய கட்டாயம் பிரம்மதேவனுக்கு ஏற்பட்டது. பிரம்மன் கொடுத்த வரத்தால் அசாத்திய தைரியம் அடைந்த மகிஷாசுரன் மனிதர்களையும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பழங்குடி சமூகத்தினரையும் படிப்படியாக அழிக்கத் தொடங்கினான். அவனுடைய கொடுமையான செயல்களால் பயந்து போன மக்கள் தூர தேசங்களுக்கு ஓடிவிட்டனர். ஒரு தெய்வீக சக்தியால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த தேவர்கள் துர்காதேவியை தஞ்சமடைந்தனர். துர்க்கை அம்மன் அவனை ஒரு ரத்தக்களறி போரில் கொன்றார். 

தனது சகோதரனைக் கொன்றவர்களை பழிவாங்க உறுதி பூண்ட மகிஷாசுரனின் சகோதரி மகிஷி பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து மகா விஷ்ணுவுக்கும் (ஹரி) மற்றும் சிவபெருமானுக்கும் (ஹரன்) பிறக்கும் குழந்தையால் மட்டுமே தன்னை கொல்ல முடியும் என்கிற ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அதன் பிறகு தேவலோகத்திற்கு சென்ற மகிஷி தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினாள். இதனால் வேதனையுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவை இதில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி வேண்டினர்.

ஹரிஹரனுக்கு பிறக்கும் மகனைத் தவிர வேறு யாராலும் மகிஷியை கொல்ல முடியாது என்கிற வரத்தை அவள் பெற்றிருப்பதால் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். விஷ்ணுவின் பெண் வடிவமான மோகினிக்கும் சிவபெருமானுக்கும் இணைவு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்து அதை சிவபக்தனான குழந்தையில்லாத பந்தளராஜன் ராஜசேகரனின் பராமரிப்பில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒருநாள் பம்பை நதிக்கரையில் உள்ள காடுகளில் வேட்டையாட பயணம் மேற்கொண்ட மன்னன் ராஜசேகரன் ஆற்றங்கரையின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுப்புறம் மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது காட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். திகைத்துப்போன அந்த மன்னன் ஒலி வந்த திசையை நோக்கி பின்தொடர்ந்து சென்ற போது அங்கே ஒரு அழகான குழந்தை கை கால்களை உற்சாகமாக உதைத்தபடி படுத்து கிடந்தது.

குழப்பத்துடன் அங்கே நின்ற மன்னன் குழந்தைக்கு சொந்தமானவர்கள் யாரும் சுற்றிலும் இல்லாததால் இந்த குழந்தையை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று மனதில் ஏக்கம் கொண்டார். அந்த தெய்வீகக் குழந்தையை மன்னன் ராஜசேகரன் பார்த்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு முனிவர் தோன்றி ‘குழந்தையை உனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்துக்கொள்’ என்று அறிவுறுத்தினார்.

மேலும் அந்தத் துறவி இந்த குழந்தை உனது அரச வம்சத்தின் எல்லாத் துன்பங்களையும் நீக்குவான் என்றும் சிறுவனுக்கு 12 வயதாகும்போது மன்னர் ராஜ சேகரனுக்கு அந்தக் குழந்தையின் தெய்வீகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்றும் உறுதியளித்தார். கையில் கிடைக்கும் போதே குழந்தை கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததால் தங்கக் கழுத்து உடையவன் என்கிற பொருள்படுமாறு குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயர் சூட்டும்படி அந்த சாது அறிவுறுத்தினார்.

#ஐயப்பனை வளர்த்த மன்னன் ராஜசேகரன்:

பரவசமடைந்த மன்னன் ராஜசேகரன் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை ராணியிடம் விவரித்தார். அவர்களிருவரும் சிவபெருமானின் அருளால் இந்த குழந்தை கிடைத்ததாக பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் வரவில் பந்தள நாடே மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தபோது மன்னர் ராஜசேகரனின் காலத்திற்குப் பிறகு நானே இந்த நாட்டிற்கு மன்னராக வேண்டும் என்று கனவு கோட்டை கட்டியிருந்த அரசவை திவான் மட்டும் அரச தம்பதியரின் மகிழ்ச்சியால் கொதிப்படைந்தான்.

குழந்தையிலிருந்தே மணிகண்டன் மிகவும் புத்திசாலியாகவும் மதிநுட்பத்துடனும் இருந்தான். தற்காப்புக் கலைகள் மற்றும் சாஸ்திரங்களில் சிறந்து விளங்கிய மணிகண்டன் தனது புத்திசாலித்தனம் மற்றும் தெய்வீக ஆற்றலால் தனது குருவை ஆச்சரியப்படுத்தினான். பந்தள நாட்டில் அமைதியும் செல்வமும் நிரம்பி வழிந்தது. காலப்போக்கில் குரு, மணிகண்டன் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல தெய்வீக அவதாரம் என்கிற முடிவுக்கு வந்தார்.

படிப்பை முடித்தவுடன் மணிகண்டன் தனது குருவுக்கு குருதட்சனை வழங்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் சென்றார். மணிகண்டன் தனது ஆன்மீக குருவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக அணுகியபோது குரு மணிகண்டனை பற்றி தான் ஏற்கனவே ஊகித்தவாறு, மணிகண்டன் ஒரு மனிதப்பிறவி அல்ல மனிதகுல நன்மைக்காக படைக்கப்பட்ட தெய்வீக சக்தி என்பதை விளக்கினார்.

மேலும் குரு மணிகண்டனிடம் பிறவியிலேயே பார்வையற்றவனாகவும் ஊமையாகவும் இருந்த தன் மகனுக்கு பார்வை மற்றும் பேச்சுத்திறனை கொடுக்குமாறு மன்றாடினார். மணிகண்டன் தனது தெய்வீக திருக்கரங்களை குருவுடைய மகனின் தலையில் வைத்த அடுத்த நிமிடம் உடனடியாக அந்த பையனுக்கு பார்வையும் பேச்சுத்திறனும் கிடைத்தது. தனது அதிசய சக்தியைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பினார்.

#ஐயப்பனை மன்னராக்க நினைத்த ராஜசேகர்:

அதே நேரத்தில் இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மகாராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். இப்படிப்பட்ட அதிசய நிகழ்வுகளுக்கு ஏதோ ஒரு வகையில் மணிகண்டனுக்கு தொடர்புள்ளதை உணர்ந்த ராஜசேகரன் மணிகண்டனுக்கு மன்னராக முடிசூட்ட முடிவு செய்தார். ஏனென்றால் அவர் வெளிப்படையாகவே ஐயப்பனை தனது மூத்த மகனாகக் கருதினார்.

மன்னருடைய அமைச்சரை தவிர மற்ற எல்லோரும் இதனால் மனம் மகிழ்ந்தனர். அரசனாக வேண்டும் என்கிற அபிலாஷையை மனதுக்குள் ரகசியமாக வளர்த்து வந்த தந்திரக்காரனான மந்திரி, தெய்வீக அவதாரமான மணிகண்டனை அழிக்க உணவில் விஷம் வைப்பது உள்ளிட்ட பல்வகை திட்டங்களை வகுத்தான். எல்லா சதித் திட்டங்களிலிருந்தும் மயிரிழையில் உயிர் தப்பிய மணிகண்டனுக்கு ஆனால் அவருடைய உடலில் யாராலும் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு காயம் ஏற்பட்டு விட்டது. இறுதியில் மருத்துவருடைய மாறுவேடத்தில் சிவபெருமானே வந்து சிறுவனை குணப்படுத்தினார். 

#புலிப்பால் கொண்டு வரச்சென்ற மணிகண்டன்:

தனது திட்டங்கள் தோல்வியடைந்ததால் அமைச்சர் மகாராணியிடம் சென்று தன் சொந்த மகன் உயிருடன் இருக்கும்போது மன்னர் ராஜசேகரன் தனக்குப் பிறகு மணிகண்டனுக்கு முடி சூட்டுவது முறையாகாது என்று கூறி ராணியின் மனதில் நஞ்சை விதைத்தார். ஒரு உன்னதமான முடிவிற்காக எந்த ஒரு தவறான செயலையும் செய்வது தவறல்ல என்று அர்த்தசாஸ்திரம் நியாயப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி மகாராணியை சமாதானப்படுத்தி அவளை நோய்வாய்ப்பட்டபடி நடிக்குமாறு தூண்டினார்.

புலி பாலைத் தடவினால் மட்டுமே உங்கள் நோயை குணப்படுத்த முடியும் என்று ராஜ வைத்தியர் அறிவிப்பார் என்று ராணிக்கு உறுதியளித்தான். புலிப்பால் கொண்டுவர கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும் அடர்ந்த வனப் பகுதிக்கு செல்லுமாறு மணிகண்டன் நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தப் பணியை முடிக்காமல் நாடு திரும்பினாலும் ராஜசேகரனுக்கு மணிகண்டன் மீதுள்ள அன்பு முன்பு போலவே இருக்கும். தனது சொந்த மகன் மீது இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் மதியிழந்த மகாராணி மந்திரியுடன் இணைந்து கூட்டு சதியில் பங்கேற்று பயங்கரமான தலைவலியால் அவதிப்படுவதை போல நடிக்கத் தொடங்கினாள்.

பதட்டமடைந்த மன்னர் அரசாங்க மருத்துவர்களை வரவழைத்தார். வேண்டுமென்றே நோய்வாய்ப்பட்ட ராணியை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் மந்திரியின் கூட்டு சதியில் பங்கேற்ற மருத்துவர்கள் ஒரு தாய்ப்பாலூட்டும் பெண் புலியின் பால் கிடைத்தால் மட்டுமே மகாராணியின் நோயை குணப்படுத்த முடியும் என்று அறிவித்தார்கள். நோய்வாய்ப்பட்ட மகாராணியை குணப்படுத்தினால் தனது சாம்ராஜ்யத்தில் பாதியை எழுதித் தருவதாக மன்னர் ராஜசேகரன் அறிவித்தார். புலிப்பால் கொண்டு வருவதற்காக ராஜசேகரனால் அனுப்பப்பட்ட தளபதிகளின் படை வெறுங்கையுடன் நாடு திரும்பியது.

மணிகண்டன் உதவ முன்வந்தான் ஆனால் சிறுவனின் சிறுவயது மற்றும் வரவிருக்கும் முடிசூட்டுவிழா ஆகிய காரணங்களை சொல்லி மன்னர் மணிகண்டனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டார். இதற்கெல்லாம் சலிக்காத மணிகண்டன் தனக்கு இந்த ஒரு விருப்பத்தை மட்டும் நிறைவு செய்யும்படி தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தினார். மகனின் இந்த முடிவில் மகிழ்ச்சியற்ற பெற்றோராக மன்னர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இந்த வாய்ப்பை அழுத்தமாக பிடித்துக் கொண்ட மணிகண்டன் தன்னை புலிப்பால் கொண்டு வருவதற்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து மன்னருக்கு அழுத்தம் கொடுத்தார். 

#மகிஷியை கொன்ற ஐயப்பன்:

சிறுவனுடன் வனப்பகுதிக்கு செல்வதற்கு வீரர்களின் ஒரு குழுவை ஏற்பாடு செய்யும் ராஜசேகரனின் முயற்சிகளையும் மணிகண்டன் நிறுத்திவிட்டார். படை கூட்டத்தைக் கண்டால் அமைதி இழந்து புலி பயந்து ஓடிவிடும் என்று வாதித்தார். மன்னர் ராஜசேகரன் வேறு வழியின்றி அரை மனதுடன் மகனை வழியனுப்பி வைத்தார். மணிகண்டனுக்கு வழியில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் மற்றும் சிவபெருமானின் உருவகமாக கருதப்படும் மூன்று கண்களை கொண்ட நெய்த் தேங்காயை கொடுத்தனுப்பினார்.

சிவபெருமானின் பஞ்பூத கணங்களும் மணிகண்டன் காட்டை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும் பின்தொடர்ந்தனர். ஆனால் வழியில் தேவலோகத்தில் மகிஷியின் அட்டூழியங்களை கண்ட மணிகண்டன் சினம் கொண்டு அவளை பூமியில் வீசி எறிந்தார். அவள் அழுதா நதிக்கரையில் வந்து விழுந்தாள். விரைவில் இரத்தப் போர் தொடங்கியது.

இறுதியில் மணிகண்டன் மகிஷியின் மார்பில் ஏறி ஆக்ரோஷமாக நடனமாடத் தொடங்கினார். அந்த நடனத்தால் பூலோகமும் தேவலோகமும் அதிர்ந்தது. தேவர்களும் நடுநடுங்கிப் போயினர். அப்போது தன் மீது ஏறி நிற்கும் அந்த தெய்வ அவதாரம் ஹரி ஹரனின் மகன் என்று மகிஷி உணர்ந்து கொண்டாள். சிறுவன் காலடியில் அடிபணிந்து தொழுது பின்னர் உயிரை விட்டாள்.

#மாளிகைபுரத்து அம்மா:

இந்த நடனத்தை சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் கண்டுகளித்த இடம் காலாகட்டி என்றழைக்கப்படுகிறது. கரம்பன் என்கிற காவலனின் மகள் லீலா என்பவளே மகிஷி உருவில் இருந்ததாகவும் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் அருளால் சாப விமோசனம் பெற்று மோட்சத்தை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. சபரிமலையில் இவளுக்கு மாளிகபுரத்து அம்மா என்கிற பெயரில் கோவில் இருக்கிறது.

மகிஷியை வென்ற மணிகண்டன் புலிப்பால் தேடி காட்டிற்கு சென்றார். அங்கே சிவ தரிசனம் செய்த மணிகண்டனிடம் சிவபெருமான், ‘உன் அவதார நோக்கமான தெய்வீகத் திருப்பணியை முடித்து விட்டாய் இருந்தாலும் நீ நிறைவு செய்ய வேண்டிய மற்றொரு மிகப்பெரிய பணி ஒன்று இருக்கிறது’ என்றார். ‘நீ பத்திரமாக திரும்பி வர வேண்டுமென்று வருத்தத்துடன் காத்திருக்கும் உன் தந்தை மற்றும் நோய்வாய்ப்பட்ட உன் தாயாரை விரைவில் போய் பார்’ என்று நினைவுபடுத்தினார். மேலும் புலிப்பால் கொண்டு செல்லும் பணியில் தேவேந்திரன் உனக்கு உதவி செய்வார் என்று உறுதியளித்தார். அதன்படி மணிகண்டன் புலி உருவெடுத்த தேவேந்திரன் மீதேறி அமர்ந்து தேவர்களும் தேவ கன்னிகைகளும் ஆண் மற்றும் பெண் புலிகளாக புடைசூழ அரண்மனையை நோக்கி பயணித்தார்.

#புலிகள் புடைசூழ மணிகண்டன்:

புலி மீது ஏறி வரும் சிறுவனைப் பார்த்து பயந்துபோன பந்தள நாட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி ஆங்காங்கே ஒளிந்து கொண்டனர். அப்போது முதன்முதலில் காட்டில் மணிகண்டனை ராஜசேகரன் கண்டெடுத்த போது தோன்றிய அதே முனிவர் இப்போதும் தோன்றி திகைப்பில் ஆழ்ந்த பந்தள நாட்டு குடிமக்களுக்கு மணிகண்டனின் உண்மையான தெய்வீக அவதாரத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

புலிகள் புடைசூழ மணிகண்டன் அரண்மனை கதவை நோக்கி வந்தபோது மன்னர் கவலை தோய்ந்த முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தார். புலி மேலிருந்து இறங்கிய மணிகண்டன் இப்போது மகாராணியாருடைய இனம் தெரியாத நோய்க்கு புலிப்பாலை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். மகாராணியுடைய பாசாங்கை புரிந்துகொண்ட மன்னர் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிறுவனின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னித்து விடுமாறு வேண்டினார். மகாராணியின் நோய் நீங்கியவுடன் மணிகண்டன் அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்கு சென்று விட்டார். மணிகண்டன் காட்டிற்கு சென்ற அந்த நாளில் அவருக்கு பன்னிரெண்டாவது வயது தொடங்கியது.

#கோயில் இடத்தை தேர்வு செய்த மணிகண்டன்:

மணிகண்டன் காட்டிற்கு சென்றதற்கு காரணமான மந்திரியை ராஜசேகரன் தண்டிக்க முடிவு செய்தார். இருந்தாலும் தெய்வீக விருப்பத்திற்கிணங்க அந்த முடிவை நிறுத்தினார். மேலும் மணிகண்டன் மகிஷியை அழிப்பதற்காக இது தானே மேற்கொண்ட நாடகம் என்று தந்தைக்கு புரிய வைத்தார். தன்னுடைய தெய்வ காரியம் நிறைவடைந்து விட்டதால் தான் தேவலோகத்திற்கு திரும்ப வேண்டும் என்று சொன்னார்.

புறப்படுவதற்கு முன் தந்தை ராஜசேகரனின் அளவில்லாத பக்தியை கண்டு மெச்சிய மணிகண்டன் மன்னருக்கு ஒரு வரம் கொடுக்க விரும்புவதாக சொன்னார். உடனடியாக மன்னர் ராஜசேகரன் மணிகண்டனின் நினைவாக தான் ஒரு கோயிலை கட்ட விரும்புவதாகவும் கோயில் கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை பரிந்துரைக்குமாறு மணிகண்டனிடம் மன்றாடினார்.

உடனே மணிகண்டன் தன்னுடைய அம்பை எடுத்து வில்லை எறிந்தார். அது ஒரு இடத்தில் சென்று தைத்தது. அந்த இடம் ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரை நோக்கி சபரி என்கிற பெண் துறவி தவமிருந்த இடமாகும். அந்த இடம் தான் சபரிமலை. சபரிமலையில் தனக்கு கோயில் கட்டும்படி மன்னர் ராஜசேகரனிடம் கூறிய மணிகண்டன் உடனடியாக மாயமானார்.

#சபரிமலை பதினெட்டு படிகள்:

அதற்குப் பிறகு அகஸ்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி மன்னர் ராஜசேகரன் சபரிமலை கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். 41 நாள் கடுமையான விரதமிருந்து தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு மட்டுமே தரிசனம் கொடுப்பேன் என்று மணிகண்டன் அசரீரியாகச் சொன்னார். அதேநேரத்தில் மன்னர் ராஜசேகரன் கோயில் கட்டும் பணியை முடித்தார்.

கோவில் கர்ப்பக்கிரகத்தை அடைவதற்கு புனிதமான பதினெட்டு படிகளையும் அமைத்தார். ஆனால் இறைவனின் சிலையை நிறுவும்போது மன்னருக்கு குழப்பங்கள் ஏற்பட்டது. அப்போது சுவாமி ஐயப்பனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. பம்பை நதி கங்கை நதியை போன்ற புனிதமான நதியாகும். சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். அப்போது தர்ம சாஸ்தாவால் அனுப்பப்பட்ட பரசுராமன் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி மகரசங்கராந்தி நாளன்று பிரதிஷ்டை செய்தார். 

#இருமுடி ஏன் கொண்டு செல்லப்படுகிறது தெரியுமா?

இல்லற வாழ்க்கையின் இகபர சுகங்களிலிருந்து விலகி ஒரு பிரம்மச்சாரி போன்ற வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து பக்தர்கள் இந்த 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரதம் வாழ்நாள் முழுவதற்கும் நன்மையை தொடர்ந்து பிரதிபலிக்கிறது.

சுவாமி ஐயப்பன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது தலையில் பள்ளிக்கட்டு சுமந்து அதில் உணவுப் பொருட்களும் நெய் அடங்கிய மூன்று கண் கொண்ட தேங்காயும் கொண்டு சென்றதைப் போல பக்தர்கள் இருமுடி சுமந்து தேங்காயை எடுத்துக் கொண்டு தலையில் ஆனந்த மாலையை அணிந்த படி சபரி மலையின் செங்குத்தான சரிவுகளில் ஏறும்போது சரண கோஷங்கள் பாடிக்கொண்டு இறுதியில் பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றனர். 

தர்மசாஸ்தாவாகிய ஐயப்ப பிரபுவின் தரிசனத்தை காண்பதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் ஜாதி மத வேறுபாடின்றி ஆனந்த மாலையை அணிந்து கொண்டு இருமுடியை சுமந்து ஐயப்ப கோஷங்களை சரணங்களை பாடியபடி பம்பை நதியில் குளித்து சபரி மலையை நோக்கி படையெடுக்கின்றனர்.

#நாகராஜ_சுவாமி:

சுவாமி ஐயப்பன் சன்னிதானமான ஸ்ரீகோவிலை ஒட்டியபடி நாகராஜ சிலை நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து கன்னிமூல கணபதி தரிசனம் செய்த பிறகு நாகராஜவுக்கு தரிசனம் செய்து காணிக்கை செலுத்துகின்றனர்.

#மாளிகபுரத்து அம்மா:

மாளிகபுரத்து அம்மா சபரிமலையில் இருக்கும் முக்கியமான உபதேவதை ஆவார். மாளிகபுரத்து அம்மாவை பற்றி இரண்டு விதமான நம்பிக்கைகள் நிலவுகிறது. ஒன்று, ஐயப்பன் வதம் செய்த மகிஷி இறந்தவுடன் அவளுடைய உடலிலிருந்து ஒரு அழகான பெண் வெளிப்பட்டு தான் எப்போதும் ஐயப்பனோடு இருக்க விரும்புவதாக தெரிவித்தாள். அவள் தான் மாளிகபுரத்து அம்மன் என்கிறது ஒரு கதை.

மற்றொரு நம்பிக்கை ஐயப்ப சுவாமியின் குருவுடைய மகள் துறவறத்தை ஏற்றுக்கொண்டு சந்நியாசியாகி ஐயப்பனுடன் நிரந்தரமாக இருக்க வரம் வேண்டியதாகவும் அவளே மாளிகைபுரத்து அம்மா என்றும் சொல்லப்படுகிறது. தாந்திரீக பார்வையின் படி யாத்திரிகர்கள் மாளிகபுரத்து அம்மனை ஆதிபராசக்தியாக நினைத்து வழிபடுகின்றனர். மாளிகைபுரத்து அம்மனுக்கு செலுத்தப்படும் முக்கியமான காணிக்கைகள் மஞ்சள் பொடி, குங்குமம், சர்க்கரை, தேன், கதலி வாழைப்பழம் மற்றும் சிகப்புப் பட்டு ஆகியவையாகும்.

#மாளிகைபுரத்து அம்மன்:

மாளிகைபுரத்து அம்மன், அய்யப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளாள். பகவதி சேவை எனும் சடங்கின்போது கண் மை, பட்டுப்பாவாடை, குங்குமம், வளையல் போன்றவைகள் பக்தர்களால் காணிக்கையாக மாளிகைப்புரத்து அம்மனுக்கு அளிக்கப்படுகிறது. தேங்காய் உருட்டு எனும் தனித்தன்மையான சடங்கும் செய்விக்கப்படுகிறது.

#கருப்புசாமி மற்றும் கருப்பாய் அம்மா, வலிய கடுத்த சுவாமி மற்றும் மேல் கணபதி:

பதினெட்டாம் படிக்கு வலது பக்கத்தில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. கருப்புசாமி கோயிலுக்குள்ளேயே கருப்பாய் அம்மாவின் சிலையும் இருக்கிறது. சுவாமி ஐயப்பனின் தெய்வீக நோக்கத்திற்காக இவர்கள் இருவரும் காட்டிலிருந்து வந்து உதவியதாகவும் இவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும் நம்பி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

#வலிய கடுத்த சுவாமி:

புனித பதினெட்டாம் படிகளின் இடது பக்கத்தில் வலிய கடுத்த சுவாமிக்கு சிறிய கோயில் அமைந்துள்ளது. வலிய கடுத்த சுவாமி ஐயப்பனின் உதவியாளராவார்.

#மேல் கணபதி : 

ஸ்ரீ கோயில் சன்னிதானத்தை ஒட்டியபடி மேல் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் ஆழியில் மேல் கணபதிக்கு நெய் தேங்காயை உடைத்து காணிக்கை செலுத்துகின்றனர். கணபதி ஹோமம் இங்கே முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாகும்.

#நிர்வாகம்:

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்யும் அதிகாரம் மட்டுமே தந்திரிகளிடம் உள்ளது. கோயிலுக்கு வெளியே நிர்வாகம் செய்யும் உரிமை திருவாங்கூர் தேவஸ்தானம் குழுவிடம் உள்ளது.

#பிரசாதம்:

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பாக பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்படுகிறது.

#நெய் அபிசேகம்:

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் சுமந்து வரும் இருமுடியில் ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு அய்யப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படும். ‎சீவாத்மாவும் – பரமாத்மாவும் (சீவ - ஈஸ்வர) ஐக்கியத்தை குறிக்கும் தத்துவமாக கருதப்படுகிறது.

#மண்டல பூஜை:

கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். மண்டல பூஜை முடிவதை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கியை ஆரான்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 18 படிகள் வழியாக கடந்து, தங்க அங்கியை அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். பின் அன்று இரவே கோயில் நடை மூடப்படும். பின் இரண்டு நாட்கள் கழித்து மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். 

#மகரவிளக்கு பூஜை:

இந்து புராணகால நிகழ்வின்படி, ஒரு முறை இலக்குவனுடன் ராமன் சபரிமலை காட்டிற்கு வரும் போது சபரி எனும் வயது முதிர்ந்த சந்திக்கிறார். சபரி இராமருக்கு வழங்கிய காய் கனிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார். பின் அங்கு தெய்வீகக்களை பொருந்திய இளைய தவசியைக் கண்டு சபரியிடம் தவசியை யார் எனக் கேட்டதற்கு, இவரே தர்மசாஸ்தா என உரைக்க, இராமர் தவசியிடம் செல்ல, தவசியான அய்யப்பன் இராமரை வரவேற்றார். இந்நிகழ்வை ஆண்டுதோறும் மகரவிளக்கு அன்று சபரிமலையில் இன்றும் கொண்டாடப்படுகிறது. மகரவிளக்கு அன்று அய்யப்பன் தன் தவத்தை நிறுத்தி, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்நாளையே மகரசங்கராந்தி என கொண்டாடுகிறார்கள்.

#மகர_ஜோதி_ஒளி:

மகர ஜோதி  வானத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14 ல் மாலை 6.30 மணி அளவில் மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று தோன்றும் நட்சத்திரம்.கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு நேர் எதிரே கண்டமாலா மலை முகட்டில் இது தோன்றுவதாக ஆதரமற்ற செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தைக் காண வழிபாட்டாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலை செல்கின்றனர். இது குறித்து பல சர்ச்சைகள், பல்வேறு கருத்துக்கள் உள்ளன. தற்பொழுது இந்த நட்சத்திரம் தெரிவதில்லையென்றும் தற்பொழுது தெரிவது மகரவிளக்கு என்றும் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் இது குறித்து சில மூடநம்பிக்கை கருத்துக்களும் நிலவுகின்றன.

சபரிமலைக்கு எதிரே உள்ள கொச்சுபம்பா என்னும் ஊரின் அருகே உள்ள பொன்னம்பலமேடு என்னும் மலைப்பகுதியில் மனிதர்களைக் கொண்டு கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகரஜோதியாக தெரிகிறது என்று கூறுகின்றனர். இவை மூன்று முறை ஈரசாக்குப்பைகளால் அணைக்கப்பட்டு மீண்டும் எரியவைத்துக் காட்டப்படுகிறது. இப்பணியிணை மேற்கொள்பவர்கள் கேரள மின்துறை ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. இம்மலையின் அருகில்தான் கொச்சுபம்பா மின்னேற்று நிலையம் உள்ளது. இங்கு கொச்சுபம்பா அணையிலிருந்து நீர்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வழியாகத்தான் பொன்னம்பலமேட்டிற்கு செல்லவேண்டும். இவ்விடம் கேரள வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினரால் அந்நியர்கள் பிரவேசிக்கா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#தத்துவமசி:

சபரிமலை அய்யப்பன் கோயிலின் முகப்பில் தத்துவமசி என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. அத்வைத வேதாந்த தத்துவ வாக்கியமான தத்துவமசி என்ற சொல்லை சமசுகிருத மொழியில் தத்+துவம்+அஸி எனப்பிரித்தால் தத் = அது (பிரம்மம்), துவம் = நீ, அஸி = இருக்கிறாய் எனப் பொருள். அதாவது நீ அதுவாக (பிரம்மமாக) இருக்கிறாய் என்பதை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அய்யப்பன் உபதேச வாக்கியமாக அருள்கிறார்.

#ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டப்பட்டிருக்க காரணம்:

 ஐயப்பனின் இரு கால்களிலும் துண்டு கட்டப்பட்டு அவர் தவக் கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

 ஐயப்பனைக் காண ஒரு முறை பந்தள மகாரஜா வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்றார்; இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காகத் தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை – ஐயப்பனை நோக்கி தூக்கி போட்டார். அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் என்றும் கூறுகிறார்கள். 

18 படிகளின் விளக்கம்:

1.முதல் படி பிறப்பு நிலையற்றது
2.இரண்டாம் படி சாங்கிய யோகம்
3.மூன்றாம் படி கர்ம யோகம்
4.நான்காம் படி ஞான யோகம்
5.ஐந்தாம் படி சன்னியாசி யோகம்
6.ஆறாம் படி தியான யோகம்
7.ஏழாம் படி ஞான விஞ்ஞான யோகம்
8.எட்டாம் படி அட்சர பிரம்ம யோகம்
9.ஒன்பதாம் படி ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
10.பத்தாம் படி விபூதி யோகம்
11.பதினொன்றாம் படி விஸ்வரூப தரிசன யோகம்
12.பன்னிரெண்டாம் படி பக்தி யோகம்
13.பதிமூன்றாம் படி சேஷத்ர விபாக யோகம்
14.பதினான்காம் படி குணத்ரய விபாக யோகம்
15.பதினைந்தாம் படி புருஷோத்தம யோகம்
16.பதினாறாம் படி தைவாசுரஸம்பத் விபாக யோகம்
17.பதினேழாம் படி ச்ராத்தாதரய விபாக போகும்
18.பதினெட்டாம் படி மோட்ச சன்னியாச யோகம்

ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

'சைவம், வைணவம் ரெண்டுக்கும் பொதுவான தெய்வமா ஐயப்பன் பார்க்கப்படறார்.  12 வயசு வரைக்கும் மணிகண்டன்  மனித உருவமாக வளர்ந்து  தன்னுடைய அவதார நோக்கம் முடிஞ்சதும், தியானம் செய்வதற்காகப் போன  இடம்தான் இன்னிக்கு இருக்கிற சபரிமலை. 

1894 - ம் ஆண்டிலேயே சபரிமலைக்குப் போறவங்களோட  எண்ணிக்கை ஆண்டுதோறும் 15,000-ங்கிற அளவுல இருந்ததா வரலாற்றுப் பதிவுகள் முறையான ஆதாரத்தோட இருக்கு. இத்தனைக்கும் அப்போ தென் இந்தியாவோட மக்கள் தொகை 5 கோடிக்கும் கீழதான் இருந்துச்சு. 

1940-கள்ல தமிழ்நாட்டுல, 'நவாப்' ராஜ மாணிக்கம்கிறவர்தான் முதன்முதலா சபரிமலை பற்றியும் சுவாமி ஐயப்பன் பற்றியும் நாடகங்கள் போட்டு பலருக்கும் அறிமுகப்படுத்தி வெச்சார். 

1950-ம் வருஷத்துல சபரிமலைக் கோயில் தீப்பிடித்து எரிந்துபோனது. அதன்பிறகு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் அமைத்துத் தந்த ஐயப்பன் சிலைதான் இப்போது வழிபாட்டில் உள்ள சிலையாகும். 

இவருக்கு அடுத்துச் சொல்றதுன்னா நம்பியார் சுவாமிகள். 70 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்குப் போய் சாமி தரிசனம் செய்து வந்தவர். அவர் ஒவ்வோர் ஆண்டு மலைக்குப் போகும்போதும் திரைப்படத்துறையிலிருந்து பலரையும் அழைச்சிக்கிட்டுப்போவார். அவருடன் செல்வதை பெரும்பாக்கியமாகவே நடிகர்கள் நினைச்சாங்க. 

சிவாஜி தொடங்கி, அமிதாப்பச்சன் வரை பலரும்  சபரிமலைக்குப் போய் சுவாமி தரிசனம் செஞ்சிருக்காங்க. இதுக்கிடையில கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய சபரிமலை ஐயப்பன் பத்தின பக்திப் பாடல்கள் மலையாளம் மற்றும் தமிழிலும் வெளியாகிப் பெரிய அளவுல பிரபலமாச்சு. பல லட்சக்கணக்கான காஸெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இப்போதும் மலையில் 'ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்' என்ற புகழ்பெற்ற  கே ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒலித்தபிறகுதான் நடை சாத்தப்படுது. ஐயப்பன் உறங்கறதுக்காக இசைக்கப்படுற இந்தப் பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.இவரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி. இப்படி தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானரோட பங்கு சபரிமலையில இருக்கு'' என்றார்.

#ஐயனார்_ஐயப்பன்:

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு குலதெய்வ வழிபாடு ஆகும்.

தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனைக் காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

நடை திறப்பு :

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

ஐயப்ப விரத விதிமுறைகள்:

ஐயப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடை அணிவார்கள். இது பழங்கால வாழ்வியலையும், படை அமைப்பு மற்றும் யோக கலையின் தொடர்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தங்களது ஆராதனைக்கு தேவையான பொருட்களை ஒரு முடியிலும் தங்களுடைய வேண்டுதல்களை ஒரு முடியிலும் வைத்து இருமுடியாக தலையில் சுமந்து கொண்டு செல்கின்றனர்.
சபரிமலை செல்வதற்கு முன் துளசி மற்றும் ருத்ராட்ச மாலை அணிவார்கள். அது ஆன்மீகம் மட்டுமல்லாமல் மருத்துவத்தையும் கொண்டுள்ளது.
சபரி மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நெய் – தேங்காய்யில் அடைக்கப்பட்டு, அதன் கண் அடைத்து, பல நாட்கள் சுமந்து சென்று நவ பாஷான சிலையில் அபிஷேகம் செய்து எடுத்து வரப்பட்டு பத்தியத்துடன் உட்கொள்ளப்படுகிறது.

ஐயப்ப பக்தர்கள் இறுதியாக செய்யும் தரிசனம், மகர ஜோதி தரிசனம். வான்னம்பல மேட்டில் ஏற்றப்படும் மகர ஜோதி விளக்கை தரிசிப்பவர்களுக்கு ஜோதி வடிவில் வந்த ஐயப்பன் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக அர்த்தம்.

சபரிமலை யாத்திரை:

இன்றைய நவீன காலத்தில் எல்லாவற்றையுமே வெகு சீக்கிரத்தில் அடையவேண்டும் என்று தான் அனைவருமே எண்ணுகின்றனர். அதே விஷயம் கடவுள், கோவில் விஷயத்திலும் நடக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். நம்முடைய எந்த ஒரு விஷயத்தையுமே காரண, காரியம் இல்லாமல் எந்த ஒரு விதிமுறைகளையும் வகுத்திருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இது சபரிமலை ஐயப்பன் தரிசன விஷயத்திற்கும் பொருந்தும். சபரிமலை ஐயப்பனை மனதார நேசித்து பக்தி சிரத்தையுடன் 48 நாட்கள் கடுமையான விரதமுறைகளை கடைபிடித்து இருமுடி கட்டிக்கொண்டு செல்பவர்களில் அநேகம் பேர் பெருவழிப் பாதையையே தேர்ந்தெடுத்து நடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். ஆனால், இப்போதெல்லாம் பெருவாரியான பக்தர்கள், அவசர அவசரமாக மாலையை அணிந்து கொண்டு, மிகக்குறைந்த நாட்கள் மட்டும் விரதம் இருந்து, வாகனங்களில் நேராக பம்பைக்கு வந்து விடுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறுவழிப் பாதையில் நடந்து சென்று சபரிமலையை அடைகின்றனர்.

சபரிமலை செல்ல விரதமிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், வாகனங்களில் கிளம்பி நேராக பம்பைக்கு வந்து, அங்கிருந்து கடுமையான சிறுவழிப்பாதை என்னும் காடு, மலை வழியாக 7 கி.மீ பாதயாத்திரையாக சென்று சபரிமலையை அடைகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் 4 வழிகளில் சென்றாலும், பெரும்பாலும் செங்கோட்டை-புனலூர் வழியாக பட்டனம்திட்டா சென்று அங்கிருந்து பம்பை செல்வதையே விரும்புகின்றனர்.

உண்மையில், பெருவழிப் பாதை என்று சொல்லப்படும் எரிமேலியில் தொடங்கி, பேரூர்தோடு, காளைகட்டி, அழுதா மலை, அழுதா நதி, கல் இடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, மூக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கலிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என பாதங்களை பதம் பார்க்கும் சிறு கற்கள், உயர்ந்த மரங்களின் வேர்தடங்கள் அடங்கிய கரடு முரடான காட்டு வழிப்பாதையில் நடந்த சென்று பம்பையை அடைய வேண்டும்.

அங்கிருந்து சிறு வழிப்பாதையில் நடந்து சென்று சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை அடைய வேண்டும். அந்த பாதையின் மொத்த தூரம் சுமார் 75 கி.மீ ஆகும். மேற்கண்ட பெருவழிப்பாதை என்பது பெரும்பாலும் கரடு முரடான மலைப்பிரதேச காட்டு வழிப்பாதை என்பதால் குறைந்த பட்சம் 2 நாட்களாவது ஆகும். அந்த காட்டு வழிப்பாதையில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். ஆரம்ப காலந்தொட்டே, ஐயப்ப பக்தர்கள் அனைவருமே அந்த பாதையைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் வாகனங்களிலேயே நேராக பம்பைக்கு வந்து அங்கிருந்து 7 கி.மீ தூரமுள்ள சிறுவழிப் பாதையில் நடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு வருகின்றனர். இந்த பாதையில் நடந்து செல்ல அதிகபட்சமாக 4 முதல் 5 மணி நேரம் தான் பிடிக்கும். தற்போது தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனத்தில் பம்பை நதியை 4 வழிகளில் வந்தடைகின்றனர்.

முதலாவதாக, மதுரை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களில் பெருவாரியானவர்கள், வண்டிப்பெரியார்-எருமேலி பாதையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மொத்த தூரம் சுமார் 206 கி.மீ ஆகும். திருச்சி, மதுரையிலிருந்து செல்பவர்கள் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கம்பம், குமுளி வழியாக வண்டிப்பெரியாறை சென்றடையலாம். அங்கிருந்து சுமார் 53 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு வழியில் பயணம் செய்து எருமேலியை அடையலாம். இந்த வண்டிப்பெரியாறு-எருமேலி பயணவழியானது ரம்மியமானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்பவர்களுக்கு இந்த வழியே செல்வது தான் பயண நேரத்தை குறைக்கும்.

இரண்டாவது வழியானது, செங்கோட்டை, பத்தனம் திட்டா வழியாக பம்பையை அடைவது. இந்த வழியானது விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். செங்கோட்டை-பட்டனம் திட்டா-பம்பை வழியில் சபரிமலை தூரம் சுமார் 87 கி.மீ ஆகும். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிளம்பும் பக்தர்கள் பெரும்பாலோனோர், குற்றாலத்தில் குளித்துவிட்டு, அங்கிருந்து தென்மலை, கொட்டாரக்கரா போன்ற அழகிய சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு செல்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.

அடுத்ததாக இருப்பது, நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழியாக பட்டனம்திட்டா வந்து அங்கிருந்து பம்பையை அடைவது. தூத்துக்குடி, நெல்லை வட்டார பகுதிகளில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பட்டனம் திட்டா இடையே உள்ள தூரம் சுமார் 173 கி.மீ ஆகும். நெல்லை பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து பக்தர்களுமே, வழியில் உள்ள, கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம், கோவளம், திருவனந்தபுரம் போன்ற சுற்றுலாத் தளங்களை பார்த்துவிட்டு பின்னர் பட்டனம் திட்டா வந்து அங்கிருந்து பம்பையை அடைகின்றனர்.

அடுத்ததாக இருப்பது கோயம்புத்தூர்-கோட்டயம்-பம்பை வழியாகும். மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். கோயம்புத்தூர்-கோட்டயம் வழி தான் சபரிமலை செல்வதற்கு மீக நீண்ட தூர பயண வழியாகும். கோயம்புத்தூரிலிருந்து சபரிமலையை சுமார் 271 கி.மீ தூரமாகும். ஆனால் பெரும்பாலான தமிழக பக்தர்கள் செங்கோட்டை-பட்டனம் திட்டா வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். இந்த வழி தான் மிகக் குறைந்த தூரமாகும்.

#சபரிமலையை எப்படி அடைவது:

மலைப் பாதைகள்:

எருமேலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை வழியாக 61 கிலோ மீட்டர் நடைப்பயணம்
பம்பை ஆற்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் நடைப்பயணம்

ரயில் வழியாக : 

யாத்திரிகர்கள் ரயில் வழியாக கோட்டயம் மற்றும் செங்கனூரை அடைந்து அங்கிருந்து சாலை வழியாக பம்பையை அடையலாம்.

விமான வழியாக : 

யாத்திரிகர்கள் விமான வழியாக திருவனந்தபுரம் அல்லது கொச்சியை அடைந்து அதன் பிறகு ரயில் அல்லது சாலை வழியாக பம்பையை அடையலாம்.

சாலை வழியாக - KRCTC :

சபரிமலை யாத்திரிகர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து கோயம்புத்தூர், பழனி மற்றும் தென்காசிக்கு பேருந்து சேவையை தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் கேரள அரசாங்கம் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு பம்பைக்கு பேருந்துகளை இயக்க அனுமதி கொடுத்துள்ளது. பம்பா மற்றும் நீலக்கல் முகாம்களுக்கு தொடர் பேருந்து வசதி இருக்கிறது.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. ..

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...