Tuesday, November 15, 2022

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 43வது தலம்.

முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட
தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு தலங்களில் ஒன்றான
#திருநனிப்பள்ளி
#புஞ்சை_நற்றுணையப்பர்
#பர்வதராஜபுத்திரி மற்றும் #மலையான்மடந்தைஅம்மன்
திருக்கோயில் வரலாறு:

சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "புஞ்சை" என்று வழங்குகின்றனர்.

இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. பொன்செய் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சை தரணியின் ஒரு பகுதியாகும்

      மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளியில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.

மூலவர்:நற்றுணையப்பர்
அம்மன்:பர்வத ராஜபுத்திரி, மலையான் மடந்தை இரண்டு அம்மன்
தல விருட்சம்:செண்பக, பின்ன மரம்
தீர்த்தம்:சொர்ண தீர்த்தம்
புராண பெயர்:திருநனிபள்ளி
ஊர்:புஞ்சை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

வழிபட்டோர்:
சம்பந்தர், அப்பர்,சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத்து ஓதில் நாளும் அரனடிக்கு அன்பதாகும் வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமும் அமுதாக்கு வித்தா நனிபள்ளி யடிகளாரே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 43வது தலம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் 
எழுந்தருளியபோது இத்தலம் பாலைவனமாக இருந்ததாகவும், அவரது பதிகச் சிறப்பினால் நெய்தல் 
(மணல் பிரதேசம்) நிலமாகிப் பின்னர் கானகமாய் மருதமுமாகிச் செழித்தது என்றும் கூறப்படுகிறது. 
வயலும் வயல் சூழ்ந்த இடமும் மருதம் எனப்படும்.

    "நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானகமாக்கி யஃதே 
    போதின் மலிவயல் ஆக்கிய கோன்"

என்ற நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் இச்செய்தி 
விதந்து கூறப்பட்டுள்ளது.

பெயர் காரணம்:

சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்ற கங்கை கொண்ட சோழீச்சுரத்தை, அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். அதோடு இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது.

தல வரலாறு:

திருஞானசம்பந்தரின் திருத்தாயார் பகவதியம்மையார் திருவவதாரத் தலம் திருநனிபள்ளி. திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள், திருஞானசம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் திருஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததைத் திருஞானசம்பந்தர் தனது திருப்பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

கோவில் வரலாறு:

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்.இராஜராஜ சோழனின் மூதாதையரான முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-950)கட்டிய திருக்கோவில்களில் திரு நனிபள்ளி நற்றுணையப்பர் கோவிலும் ஒன்று. 10ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலாகும். கருவறையின் உள்ளே யானை சென்று வழிபாடு நடத்திய திருத்தலமாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்குவது சோழனின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.

கோவிலின் சுற்றுப்புற சுவற்றில் கோவிலை கட்டிய பராந்தக சோழனின் சிலை பொதியப்பட்டுள்ளது.

சோழர் காலக் கல்வெட்டுகள் 17ம், விஜயநகர அரசின் ஒன்றும் ஆக 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

தலபெருமை:

மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே இடப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோட்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோட்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.

மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம். எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார்.

காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.

அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் “பொன்செய்’ ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி “புஞ்சை’ ஆனது.

பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்திலும் அருளுகிறார்.

பொது தகவல்:

கோயில் மூலஸ்தானமும், கோயில் மண்டபங்களும் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.

அத்துடன் “நனிபள்ளி கோடி வட்டம்’ என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் சுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா, லிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர். அமைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழனின் மூதாதையர் பராந்தக சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

தல சிறப்பு:

இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 7 – 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.

சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த தலம் மற்றும் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவ அடிகளார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.
சோழர் காலக்கல்வெட்டில் இத்தலம் "ஜயங் கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரமதேயமாகிய நனிபள்ளி" என்று குறிக்கப்படுகிறது
கோவிலின் சுற்றுபுற சுவற்றில் அகத்தியர், பிரம்மா, சிவன் உள்ளிட்ட சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அழகிய வேலைபாடுகளுன் கூடிய சிலைகளை நாம் எங்கும் காண இயலாது.
இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கருவறை கோபுரம் மட்டுமே உள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத் திருதலங்களிலும் காண முடியாது.
திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும்.

அமைப்பு:

கிழக்கு நோக்கி அமைந்துள்ள, ராஜகோபுரம் இல்லாத, கோயில். விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தை அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மலையான்மடந்தை அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இடப்புறம் பருதவராஜபுத்திரி சன்னதி உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணை ஈஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய தலம். புள்ளமங்கை கோயிலில் உள்ளது போல கருவறையைச் சுற்றி மிகச்சிறிய சிற்பங்களைக் கொண்ட பெருமையுடையது இக்கோயிலாகும்.

திருவிழா:

ஆண்டு தோறும் சித்திரை மாதம் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சூரியன் சிவலிங்கத்தின் மேல் காலையில் தன் கதிரொளியை வீசும். அந்த நேரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடபடுகிறது. காலத்தை வென்று நிற்கும் இந்த சோழனின் கட்டிடக்கலை தமிழனின் பெருமைக்கு என்றும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அடையும் வழி:

மயிலாடுதுறையிலிருந்து 13கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார்,திருவெண்காடு,பெருந்தோட்டம்,மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம்.

திருச்சிற்றம்பலம்🙏
ஓம் நமசிவாய 🙇

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...