Friday, November 18, 2022

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான
#திருப்புறவார்
#பனங்காட்டூர் என்கிற #பனையபுரம்
#பனங்காட்டீஸ்வரர்
#சத்யாம்பிகை
திருக்கோயில்

திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். 

மூலவர்:பனங்காட்டீஸ்வரர்
அம்மன்/தாயார்:சத்யாம்பிகை, புறவம்மை
தல விருட்சம்:பனை
தீர்த்தம்:பத்ம தீர்த்தம்
புராண பெயர்:திருப்புறவார்பனங் காட்டூர்
ஊர்:பனையபுரம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்:

விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழவெங்கணை யால்எய்தாய்விரி பண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞா பிறை சேர்நுதலிடைக் கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.

__திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 20வது தலம்.

தல சிறப்பு:

இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 231 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

இத்தலத்தில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார்பனங்காடுடையார் கோவில் எனவும், இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 

தலபெருமை:

சூரியன் வழிபட்ட தலம். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சன்னதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம்.

துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். துவாரகணபதியையும், தண்டபாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம். நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக் கம்பம் வணங்கி, வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம்.

உள்பிரகாரங்களில் விநாயகர், ஆறுமுகர், சனிபகவான், நவக்கிரகம், சூரியன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், இடபாரூடர், திருமால், கஜலஷ்மி, நால்வர், பிக்ஷடனர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம்மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும்.

பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. பிறதலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக- காடுகளால் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு: சோலை, காடு) “புறவார் பனங்காட்டூர்’ என்றழைக்கப்பட்டது. முல்லை நிலக் காடுகளால் சூழப் பெற்று இத்தலம் விளங்கியதால் புறவார் பனங்காட்டூர் என வழங்கப்படுகிறது.

சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.

தல வரலாறு:

சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செயத் வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். 

தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார்பனங்காட்டூரும் ஒன்றாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

சூரிய கிரணங்கள் :

சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.

ஓம் நமசிவாய🙏

திருச்சிற்றம்பலம்🙏

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...