Friday, November 25, 2022

மதுரை #தெப்பக்குளம்#முக்தீஸ்வரர்#மரகதவல்லிஅம்மன்திருக்கோயில் வரலாறு

மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றான
#மதுரை #தெப்பக்குளம்
#முக்தீஸ்வரர்
#மரகதவல்லிஅம்மன்
திருக்கோயில் வரலாறு:

இந்த உடலில் உயிர்க்காற்று அந்த ஆண்டவன் கருணையால் ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதியில் அந்தக் காற்று சேர வேண்டிய இடமும் அவன் திருவடிதான். அப்படி உயிர்களுக்கு முக்தியை அளித்துக் காக்கும் இறைவனை 'முக்தீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டு அழைப்பது வழக்கம்.

இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.இக்கோயிலானது
மதுரையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகும். சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் இதுவும் ஒன்று.

மூலவர்: முக்தீஸ்வரர்

அம்பாள்: மரகதவல்லி தாயார்

சிறப்பு: மதுரையின் வாயு ஸ்தலம்

விசேஷம்: சூரிய ஒளி இறைவனை பூஜிப்பது

விநாயகர்: வில்வ விநாயகர்

தலவிருட்சம்: வில்வம்

தீர்த்தம்: வைகை

ஊர்: மதுரை

புராணப் பெயர்: ஆலவாய்

தல வரலாறு:

சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில்.
இத்திருவிளையாடலின் முக்கிய கதாநாயகன் ஐராவதம் என்ற யானை. இந்த யானை எப்படி இங்கு வந்தது, எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது, அய்யனின் திருவிளையாடல்.

ஐராவதம் என்ற வெள்ளை யானை, தேவலோகத்தின் யானை. இது இந்திரனின் வாகனம் ஆகும்.துர்வாச முனிவர் ஒருநாள் இந்திரனைக் காண தேவலோகத்துக்கு வந்தார். சிவ பூஜை முடித்து விட்டு பிரசாதமாக மலர் மாலையைக் கொண்டு வந்து தேவேந்திரனிடம் கொடுத்தார். சிவ பிரசாதத்தின் மகிமையையோ, முனிவரின் தவ வலிமையையோ அறியாத ஐராவதம், அகங்காரம் அதன் அறிவை மறைக்க, மலர் மாலையைத் தும்பிக்கையால் இழுத்து, தன் காலடியில் போட்டு மிதித்தது.

இதனால் ஐராவதம் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது. சாபம் பெற்ற யானை பல நூறாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. சிவனுக்கு பூஜை செய்வதினால் சாப விமோசனம் பெற்றது.

சாப விமோசனம் பெற்ற தன் வாகனத்தை அழைத்து செல்வதற்காக இந்திரன் வருகிறார். தேவலோகம் செல்லும் முன் மீண்டும் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று ஐராவதம் விரும்புகிறது எனவே தன் பெயரிலேயே மதுரையின் கிழக்கே ஒரு பகுதியை உருவாக்கி முக்தீஸ்வரரை பூஜித்து பின் இந்திரனுடன் தேவலோகம் செல்கிறது. 

முக்தி தரும் சிவன்:

பூமியில் பிறக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியைக் கொடுக்கும் தலம் மதுரையம்பதி அல்லவா! இதனை "ஜீவன் முக்திபுரம்" என்று ஹாலாஸ்ய புராணம் வர்ணிக்கிறது.

ஐராவதம் போன்று, இம் மதுரையிலே நாரைக்கும் கூட முக்தி கிட்டியது. ஆறறிவு மக்களுடன் ஐந்தறிவு விலங்கு இனங்களுக்கும் இறைவன் முக்தி அளிப்பதனால், மதுரையம்பதி "ஜீவன் முக்தி புரம்" என அழைக்கப்படுகிறது.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு, சுமார் 400ஆண்டுகளுக்கு முன், முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் ஓர் ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது.

முக்தி விளக்கு:

ஆதியில், இங்குள்ள சிவனார், முத்து வீரப்ப நாயக்கரின் பெயரால் முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்துவந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்தச் சிவ சந்நிதியில் "முக்தி விளக்கு" ஏற்றலாயினர். இக்காரணத்தினால் தற்பொழுது "முக்தீஸ்வரர்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆலயத்தின் சிறப்புகள்:

இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந் நிகழ்ச்சி தினமும் இருபது நிமிடம் வரை நீடிக்கிறது.

அர்த்த மண்டபத்திற்கு மேல் ஏகாபத்ரிமூர்த்தி என்ற சுதை சிற்பம் உள்ளது. ஏகாபத்ரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒரு சேர ஒரே பாதத்தில் நிற்பதாகும்.

சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

விநாயகர் மகிமை:

இத்திருத் தலத்தில் வடகிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வில்வம்,நெல்லி, கிளுவை,மாவிலங்கை எனப்படும் நான்கு வகையான மரங்கள் இங்கு இருக்கின்றன.

இங்கு வடமேற்கில் உள்ள வில்வமரத்தின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகருக்கு நாற்பத்தியெட்டு நாட்கள் தீபம் ஏற்றி வலம் வந்து வழி பட்டால் வேண்டியற்றை அருள்வார் என்பது ஐதீகம்.

மேலும் இந்தத் தலத்தில் நடராஜப் பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமண்யர், துர்கை ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் இசைக்கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

பல ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த மூர்த்தி என்றாலும் இதற்குத் திருப்பணி புரிந்தவர்கள் நாயக்க மன்னர்கள்.

ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Followers

மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம்.

மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம். பல வகை லிங்கங்களைப் பார்த்திருப்போம்.மூலிகையால் ஆன லிங்கத்தைப் பார்க்க,மூன்றடுக்குள்ள, பிரான்ம...