தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
#திருமழபாடி
#வைத்தியநாதசுவாமி (வயிரத்தூண் நாதர்)
#சுந்தராம்பிகை, #பாலாம்பிகை
திருக்கோயில் வரலாறு:
திருமழபாடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 54வது சிவத்தலமாகும்.
இறைவர் திருப்பெயர் :வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்
இறைவியார் :சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல மரம் : - பனை மரம்
தீர்த்தம் : - கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்:மழுவாடி, திருமழபாடி
ஊர்:திருமழபாடி
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
வழிபட்டோர் : புருஷாமிருகம், பிரம்மா, சிலாத முனிவர் , செப்பேசர் என்கிற திருநந்திதேவர் ,திருமால், இந்திரன், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர்
தேவாரப் பாடல்கள் :-
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
தேவாரப்பதிகம்:
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
-சுந்தரர்
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.
தல வரலாறு:
பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
நந்தி கல்யாணம்:
திருமழபாடி திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின் தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.
குழந்தை பாக்கியம் வேண்டி சிலாத முனிவர் சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,"முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார்.இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார்.சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர்.திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது.
நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்:
பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம். புனர்பூசம் நட்சத்திர நாளில் காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.
மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர்.அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘ நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.
“நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுந்தர மூர்த்தி நாயனார்:
கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார்.
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்றகுரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில்இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக்கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து
வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.
அந்தப் பதிகம் :
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே...
இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.
சிறப்பு:
இத்தலம் புருஷாமிருகம் மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்ற பெருமையும் உடையதாகும். சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் இறைவன் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.புருஷாமிருக முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தைப் பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரத்தம்பமாக இறைவன் விளங்கிய காரணத்தால் "வச்சிரதம்பேசுவரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இத்தல அம்பிகைக்கு சுந்தரராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை என்ற திருநாமங்கள் உண்டு. இத்தல தீர்த்தம் இலக்குமியின் பெயரால் "இலக்குமி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள அற்புதமான தலம்.
ஆவணம் காத்த கங்கை கொண்ட சோழன்:
திருமழபாடி என்னும் இத்திருத்தலம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் திகழ்வதாகும். இந்த கோவில் கிழக்கு நோக்கி ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரம் இரண்டு திருசுற்றுகள் உடன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பல்லவ வேந்தர்களின் பாடல் இடம்பெற்றுள்ளதால் இவ்வாலயம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆலயம் என்பதில் ஐயமில்லை. ஆதித்தசோழன் காலம் தொடங்கி பல்வேறு சோழ அரசர்களின் கல்வெட்டு சாசனங்கள் சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள், போசன அரசர்கள், கோனேரிராயன் காலத்து மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகளை இந்த கோவிலில் காணலாம். சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்டராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து திகழ்கின்றது. இங்குள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற பெயரால் சோழர்கள் வெட்டுவிக்கப்பெற்றதோடு எந்த ஏரியில் பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால் உத்தமசோழன் வாய்க்கால் என்ற பெயரில் இருந்தமையும் குலோத்துங்கசோழப் பெருவழி என்ற நெடுஞசாலை இவ்வூர் வழி சென்றமையும் சோழசமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்தமையும் கல்வெட்டு சொல்லும் செய்திகளாகும். இத்திருக்கோவிலில் மிக தலையாய சிறப்புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14ஆம் ஆண்டு 70 ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனமேயாகும். ராஜராஜ சோழனின் காலத்தில் சிதைந்த திருமழபாடி கோவிலை புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்தான் அதன்படி கோவில் விமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்கவேண்டி இருப்பதால் விமானத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். புதிய கற்கோவில் எடுத்த பிறகு மீண்டும் அக்கல்வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதேயாகும். திருமழபாடி கோயில் திருப்பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026 இல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றது. புத்தகத்தில் பதிவு செய்யப்பெற்ற பழைய கல்வெட்டு செய்திகளை நகல்களை தன்னுடைய தண்டநாயக்கர்(சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமழபாடி கோயிலின் அலுவலரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டராதித்த சதுர்வேதிமங்கள சபையோர் பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டு பார்த்தபின் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழரின் ஆணை மேலும் இந்த ஆணை திருமழபாடிமூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும் 74 ஆம் வரிகளில் ராஜ ராஜ சோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது சிறப்பு செய்தியாகும். இந்த அனைத்து செய்திகளையும் தற்போது உள்ள கல்வெட்டுகளில் காணலாம்.
கோவில் அமைப்பு:
வைத்தியநாத சுவாமி சந்நிதி இராஜேந்திரன் காலத்தாலானவை. நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன.
ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.
மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.
இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம். இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்கு நோக்கி, தெற்குப் பக்கமாகத் திருப்பியதாகவும் அதன் காரணமாகவே விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.
சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சருமநோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த அம்பிகை. நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈரப்புடவையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்புக்கள் :
இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
கடுமையான சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.
திருவிழா:
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம் :
மாநிலம் : தமிழ் நாடு
இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம்.
திருச்சிற்றம்பலம்🙇
ஓம் நமசிவாய🙏
No comments:
Post a Comment