Thursday, November 10, 2022

மதுரை பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாததற்கு காரணம் தெரியுமா

பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாததற்கு காரணம் தெரியுமா?
சிவபெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களை, மதுரையில்தான் நிகழ்த்தினார்.
இதில் வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரரை உயிரோடு எழுப்பியது என்று பல புராண நிகழ்வோடு தொடர்பு கொண்ட திருவிளையாடல்களை நடத்திய இடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் திகழ்கிறது.
இந்திரன் தன்னுடைய சாபம் நீங்க, இந்த தீர்த்தக் குளத்தை உண்டாக்கினான் என்று தல வரலாறு சொல்கிறது. மேலும் இந்த குளத்தில் இருந்து பொன்னால் ஆன தாமரைகளைப் பெற்று அதைக் கொண்டு இறைவனை பூஜித்தான். எனவேதான் இந்த குளம் ‘பொற்றாமரைக் குளம்’ என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

இந்தக் குளத்தில் மீன்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அதற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் மழை பொய்த்துப் போன காரணத்தால், மதுரையில் நீர்நிலைகள் வற்றத் தொடங்கின. அதுவரை மதுரையில் உள்ள ஒரு குளத்தில் தனக்கான உணவை சாப்பிட்டு வந்த நாரை ஒன்று, குளம் வற்றிப் போனதால் தனது பசியைத் போக்க வேறு குளத்தைத் தேடிப் போனது. அப்படி அது சென்றடைந்த தண்ணீர் நிறைந்த குளம்தான், மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம்.

அந்தக் குளத்தின் அழகை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தது, நாரை. அந்தக் குளத்திற்குள் ரிஷிகள் பலர் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்களின் மீது, குளத்தில் இருந்த மீன்கள் தாவிக்குதித்து விளைாடிக்கொண்டிருந்தன. அந்த கொழுத்த மீன்களைக் கண்டு ஆச்சரியம் அடைந்த நாரையின் நாக்கில் எச்சில் ஊறியது. மகிழ்ச்சியோடு, குளத்தில் இறங்கி மீன்களை சாப்பிடலாம் என்று நினைத்து குளத்தில் இறங்க நினைத்த நாரை, சற்றே அதிர்ச்சியோடு நின்றுபோனது. அதன் மனதில் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது.

‘அடடா.. தவறு செய்ய இருந்தேனே.. முனிவர்களுடன் அன்பாக விளையாடும் மீன்களை நாம் சாப்பிட்டால், அது பாவமாகி விடுமே. முனிவர்களும் நமக்கு சாபம் கொடுக்க நேரிடுமே’ என்று நினைத்த நாரை, தன் முடிவை மாற்றிக்கொண்டு உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கியது.

நாரையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ரிஷிகள், அந்த நாரைக்கு பொற்றாமரைக் குளத்தின் பெருமையையும், ஈசனின் மகிமையையும் எடுத்துரைத்தனர். அதைக் கேட்டு அந்த குளத்தில் மூழ்கி எழுந்த நாரை, சிவபெருமானை நோக்கி வணங்கியது. இதில் உள்ளம் நெகிழ்ந்த ஈசன், நாரை முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். உன்னுடைய பக்தியால் யாம் மகிழ்ந்தோம்” என்றார்.

உடனே அந்த நாரை, “என்னைப் போல், இங்கு வரும் உயிரினங்களும், மனிதர்களும் இந்த பொற்றாமரைக் குளத்தில் உள்ள மீன்களின் மீது ஆசைப்பட்டு, அதை சாப்பிட இந்த குளத்திற்குள் இறங்கலாம். மீன்களின் உயிர் போவதால் இந்தக் குளத்தின் புனிதம் கெடலாம். எனவே இந்தக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு உங்கள் காலடியில் நிரந்தர இடம்வேண்டும். எனக்கு முக்தியை அருளுங்கள்” என்று வேண்டியது. அப்படியே அருள்செய்தார் சிவபெருமான்.

இதன் காரணமாகத்தான் இன்றளவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Followers

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம் வேதாரண்யேஸ்வரர்

🛕வேதாரண்யேஸ்வரர் கோயில் - வேதாரண்யம் 🌹நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி த...