Thursday, December 15, 2022

"மாதத்தில் நான் மார்கழி" என்றான் கீதையில் கிருஷ்ணன்

ஆண்டாள் அருளிய திருப் பாவை
 
               மார்கழி சிறப்பு

"மாதத்தில் நான் மார்கழி" என்றான்  கீதையில் கிருஷ்ணன்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும், திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் இது !  என்றும், ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும் மாதம் என்று சிலரும் , தை மாதத்தில் கொண்டாடப் படும் அறுவடை விழாவைச் சிறப்பாக கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்
மார்கழி மாதத்தில் இல்லை என்றும் , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''

ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் அந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
"கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற பெயர் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது.

மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆழ்வார் எனப்படுவர் ஆழ்வார்கள் பன்னிருவர்.
இவர்கள், பொய்கையார்,  பூதத்தார்,  பேயார்,  திருமழிசை,  மாறன் (நம்மாழ்வார்),  மதுரகவி,  சேரர் பிரான் (குலசேகரன்),  திருமங்கை மன்னன், பட்டர்பிரான் (பெரியாழ்வார்),  கோதை நாச்சியார் (ஆண்டாள்),  தொண்டர் பாதப் பொடி (தொண்டர் அடிப்பொடி),  பாணன் (திருப்பாணாழ்வார்) ஆகியோர் ஆவர்.இவர்கள் அருளிச் செய்தவை "நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்"  ஆகும். கி.பி. 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி என்பவர் இவற்றைத் தொகுத்தார். 

ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும்,  சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவி. இவர் கவிதையில் பெண்மையின் ஏக்கம் முழுவதும் தொனிக்கும் கவிதைகள் ஏராளம். ஆழ்வார்களில் கடைக் குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும், பரந்தாமனான கண்ணனை துயில் எழுப்பும் வண்ணமும் செய்த "திருப்பாவை" முப்பது பாடல்களும், தமிழ் மரபின் செழுமைக்கு  உதாரணமாகத் திகழ்கின்றன. அதனால்தான்!
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று பாடப் படுகிறது.

மாயவனை நினைந்து உருகும் மாதமாக மார்கழி திகழ்கிறது. இந்த மார்கழி மாதத்து பனிக்கு அணி சேர்த்து அழகு செய்வது ஆண்டாள் அருளிய திருப்பாவை. அந்த அரும் நூலை  நாமும் நாராயணனின் திருநாமத்தை சொல்லி படித்து வாழ்வில் நலம் பெறுவோமாக!

ஆண்டாள் அருளியது
பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

நன்றி
இனியகாலைவணக்கம்
வாழ்கவளமுடன்நலமுடன்

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...