Monday, December 26, 2022

ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது

_காளிங்க நர்த்தனம்_


ஏழை எளியவர்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்த பகவான் 
கண்ணபிரான் ஆயர் மக்களை மிகவும் நேசித்தார். 

காளிங்கன் என்ற   ஐந்து தலைகளைக் கொண்ட  கொடிய விஷநாகமொன்று யமுனை நதியில் இருந்த மடு ஒன்றில் குடும்பத்தோடு   வசித்து வந்தது.  அந்நாகம் அந்த மடுவில் இறங்குபவர்களை எல்லாம் விழுங்கி வந்தது.   கால்நடைகளையும் கொன்று வந்தது.  இதனால் காளிங்கன் இருந்த மடுவில் அருகே யாருமே செல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையை மாற்றி அந்த மடுவின் நீரை அனைவரும் பயன்படுத்தும்படிச்  செய்ய நினைத்தார் கண்ணபிரான். 
          
தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தக் கண்ணன் திடீரென்று காளிங்கன் இருக்கும் மடுவை நோக்கி வேகமாகச் சென்றார். அந்தமடுவில் இருக்கும்  காளிங்கனின் விஷம் பட்டு கண்ணன் இறந்துவிடுவானென நினைத்து குழந்தைகள் பயத்தில் கத்தினர். ஆனால் கண்ணனோ சற்றும் கலங்காமல்,  காளிங்கனின் மீதே   குதித்தார்.  சினங் கொண்ட காளிங்கன் ஆத்திரத்தோடு  கண்ணனைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தது. இதைக் கண்ட ஆயர் சிறுவர்கள்  பயந்து அலறினர்.
              
நந்நகோபன்,  யசோதை மற்றும் ஆயர்களும், ஆய்ச்சியர்களும்  கதறி அழுதனர். தனக்காக  எல்லோரும் வேதனையுறுவதைக் கண்ட கண்ணனும் காளிங்கன்,  தன்னை நெருக்காதபடி உடலை மிகவும் பெரியதாக்கினார். எனவே காளிங்கன்,  பகவானை விட்டு விலகியது. எனவே கண்ணன் அதன் தலைகளின் மீது  ஏறி நின்று நர்த்தனம் புரிய ஆரம்பித்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே  காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது.
             
கண்ணனை கீழே தள்ள முயன்று,  தோற்ற காளிங்கனும் இறுதியில் பகவானிடம் பணிந்தது.  இங்கிருந்து சமுத்திரத்திற்குச் சென்றுவிடு; இங்குள்ள மக்களை வாழவிடு!  என்றார் கண்ணன். கருடனுக்கு அஞ்சியே இந்த மடுவில் தஞ்சம் புகுந்தேன் சுவாமி! என்றது காளிங்கன். எனது பக்தனைக் கருடன் துன்புறுத்தாது!  என கிருஷ்ணரும் அருள் புரிந்தார். பகவானை வணங்கி, குடும்பத்தோடு காளிங்கனும் சமுத்திரத்தை அடைந்தது.  அனைவரும் காளிங்கனின் பயம் நீங்கிற்று என மகிழ்ந்துக் கண்ணனைக் கொண்டாடினர்.
      
இவ்வாறு ஆயர் மக்களை துன்புறுத்தி வந்த காளிங்கன் என்ற விஷ நாகத்தை அடக்கி அதன் தலை மீது நின்று கண்ணபிராரான் நர்த்தனம் ஆடிய புனிதமான  தினம் இன்று என்பதால் இன்றைய தினத்தை கண்ணபிரான் "காளிங்க நர்த்தனம்"  ஆடிய தினமாகப் பக்தர்கள்  கொண்டாடுவர். 
      
பார்த்தனுக்கு,  ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டிய கோலத்திலேயே காட்சி அளிக்கும் தலம்  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  ஆலயம்.  தேரோட்டிக்கு மீசையை கம்பீரத்தை தருவது என்பதால்  இங்கே பார்த்தசாரதிப்  பெருமாள்
மீசையோடு கம்பீரமாகக்  காட்சி அளிப்பார்.   இன்றைய தினம் பகவான் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய தினம் என்பதால் இன்று   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான்
 ஸ்ரீகிருஷ்ணர் "காளிக நர்த்தன கோலத்தில்"   பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
  பார்த்தசாரதிப்பெருமாளே சரணம்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...