_முன்ஜம்மா பாவங்கள் தீர்க்கும் திருமணத்தடை, குழந்தைபாக்கியம், சுகப்பிரசவம், வாஸ்து தோஷம், சனி தோஷம், கடந்த கால பாவங்களால் ஏற்பட்ட துன்பங்கள், நிகழ்காலத்தில் ஏற்படும் துன்பம், எதிர்காலம் நன்றாக அமைய, பித்ரு தோஷம், போன்ற பல துன்பங்கள் நீங்கிட வழிபடவேண்டிய ஒரே கோவில்_
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் 22 கி.மீ.,தூரத்தில் திருப்புகலூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.,தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும் கோயில் உள்ளது. அடிக்கடி பஸ் உண்டு.
திறக்கும் நேரம்: காலை 5-30- பகல் 12.30 மணி. மாலை 4 - இரவு 9 மணி.
*கோயில் சிறப்பு:*
அக்னி பகவான் இங்கு சிலை வடிவில் காட்சி தருகிறார். நாவுக்கரசர் முக்தி பெற்ற தலம் இது. முருக நாயனார் இந்த ஊரில் அவதரித்து இந்தக் கோயிலில் சிவத்தொண்டு செய்தார். அவர் இவ்வூர் இறைவனை வர்த்தமானிஸ்வரர் என்று அழைத்தார். "வர்த்தம்' என்றால் நிகழ்காலம். இவரை வழிபட்டால் நிகழ்காலத்தில் ஏற்படும் துன்பம் நீங்கி, வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பிரகாரத்திலுள்ள பூதேஸ்வரரை வணங்கினால் பித்ரு தோஷத்துடன் கடந்த கால பாவங்களால் ஏற்பட்ட துன்பங்கள் விலகும். இங்குள்ள பவுட்சேஸ்வரரை வழிபட்டால் எதிர்காலம் நன்றாக அமையும். ஆக, முக்காலத்துக்கும் நன்மை தரும் மூன்று சிவலிங்கங்களை இங்கு மட்டுமே தரிசிக்கலாம் என்பது சிறப்பு.
விஷேசமான சனி பகவான்: இங்குள்ள சனி பகவான் கையில் காகத்துடன் காட்சி தருகிறார். நளமகராஜாவுக்கு ஏழரைச்சனி பிடித்து, அதை நிவர்த்தி செய்வதற்காக திருநள்ளாறு செல்லும் வழியில் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டார். அவரது பாதம் இந்தக் கோயில் வாசலில் பட்டவுடனேயே தோஷம் நிவர்த்தியடைந்ததாம். இதனால் இங்குள்ள சனீஸ்வரரை, அனுக்கிரக சனீஸ்வரர் என்கின்றனர். திருநள்ளாறு செல்பவர்கள், முன்னதாக இங்கு சென்றால் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அருள்பாலிக்கின்றனர்.
*வாஸ்து தோஷம் நீங்க:*
இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை "வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர்.
சுகப்பிரசவம்: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்தாக வரலாறு உள்ளது. இந்த தலத்தில் உள்ள அம்மையின் மகிமையை பற்றிய புராண வரலாறு என்னவெனில், இங்குள்ள பெண்களுக்கு பிரசவம் பார்த்து கூலியாக நிலத்தைப் பெற்று உள்ளார். எனவேதான் இந்த தலத்து அம்மைக்கு சூலிகாம்பாள் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் சூளிகாம்பாள் ஆனார். இந்த ஊருக்குள் இதுவரையிலும் பிரசவத்தின் போது எப்பொழுதும் சுகப்பிரசவம் என்பதும், ஒருவருக் காவது பிரவசத்தின் போது இறப்பு என்பது நடைபெற்றதில்லை என்பது மிகவும் அற்புதமான உண்மை.
ஆகவேதான் கர்ப்பிணிப்பெண்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து ஈஸ்வரனின் அருளையும் அன்னை யின் ஆசியையும் பெற்று செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு தரப்படும் எண்ணையை வாங்கி, வயிற்றில் பூச சுகப்பிரசவம் உறுதி என்பது ஐதீகம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
*தல வரலாறு:*
ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு "அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்குபுறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்றவில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், ""ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்,'' என்றான்.
இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு "கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.
சுந்தரர், திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழாவில் மகேஸ்வர பூஜை செய்யவும், அடியவர்களுக்கு அமுது படைக்கவும் பெரும் தொகை தேவைப்பட்டது. இந்தக் கவலையுடன் திருப்புகலூருக்கு வந்தார். அன்றிரவு ஆலயத் திருப்பணிகளுக்காக வைத்திருந்த சில செங்கற்களை
எடுத்துத் தலையணைக்குப் பதிலாகத் தலைக்கு அடியில் வைத்துப் படுத்திருந்தார். விடியலில் விழித்தெழுந்தபோது அச்செங்கற்கள் அனைத்தும் தங்கக் கட்டிகளாக மாறியிருக்கக் கண்டு வியந்தார்.
புகல் என்றால் அடைக்கலம் புகுதல் என்று பொருள். திருப்புகலூர் என்ற பெயர் கொண்ட இத்தலத்தை வடமொழியில் சரண்யபுரம் என்பர். வாதாபி, வில்வலன் என்ற இரு அசுரர்களுக்கு அஞ்சி ஓடிவந்த தேவர்கள், அசுரர்கள் அகத்தியரால் அழிக்கப்படும் வரையில் இங்கு அடைக்கலம் புகுந்திருந்தார்கள். அதனால்தான் ‘புகலூர்’ என்று இத்தலத்துக்குப் பெயர் ஏற்பட்டது.
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தின் தல விருட்சம்: புன்னை மரம். அக்னி பகவான் அருந்தவம் புரிந்த காலத்தில் இது புன்னை வனமாக இருந்தது. எனவே, ‘புன்னாகவனம்’ என்றும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது.
சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவையில் காட்சி தருவது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளதால் திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடும் பரிகாரம் இங்கு கடைபிடிக்க படுகிறது.
சதய நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக் கோவில்:
சதயத்தில் பிறந்தால் உதயத்தில் சாப்பாடு என்று கூறுவர். அதாவது அவர்கள் செல்வ சுகம் பெற்று வாழ்வர்-வசீகரமான தோற்றம் பெற்றிருப்பர்-மனதில் எண்ணியதை செயல்படுத்துவர்- விசாலமான எண்ணம் கொண்ட வர்கள்- ஒழுக்கத்தையும், பொறுமை யையும் கடைபிடிப்பவர்களாயிருப்பர்.
சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் பிறந்தநாள் அன்று அல்லது நட்சத்திரத்து அன்று இங்கு வந்து ஈஸ்வரனையும் அம்மையையும் வழிபட்டு, வஸ்திரம் சாத்தி, மஞ்சள் பொடி, மா, திரவியங்கள், எண்ணை, தயிர், பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், எலுமிச்சம்பழம், விபூதி தந்து அர்ச்சனை செய்தால், வாழ்வு நிச்சயம் மலரும். முன்னேற்றம் உறுதி.
No comments:
Post a Comment