Wednesday, March 22, 2023

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயம்.இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது

சிவாயநம
நமசிவாய

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் 18 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
பாண்டிநாட்டு தலங்களில் 10 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 200 வது தலமாகவும் விளங்குகிறது காளையார்கோவில் என்கின்ற (திருக்கானப்பேர்) சிவாலயம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மும்மை சிறப்புகளைக் கொண்டது. அருள்மிகு சௌந்தரவல்லி அம்மாள் சமேத சோமேஸ்வரர், அருள்மிகு சொர்ணவல்லி அம்பாள் சமேத சொர்ணகாளீஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத சுந்தரேஸ்வரர் என்று மூன்று முக்கிய திருக்கோயில்களை ஒன்றாக்கி உள்ளடக்கியது சொர்ன காளீஸ்வரர் கோயில்.

மூன்று லிங்கத் திருமேனிகளை தனித்தனி கருவறைகளாகக் கொண்டு மூன்று சிவாலயங்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்ட திருத்தலம் இது. பெரிய ராஜகோபுரத்தின் முன்னிலையில் காட்சி தரும் அருள்மிகு சோமேசர், பிரம்மா, சந்திரன், குபேரன் ஆகியோரால் செய்யப்பட்டது.

இவரின் வலதுபுறம் சௌந்தர்ய வெள்ளமாகக் காட்சி தரும் அன்னை சௌந்தரவல்லி. இக்கோயிலில் இந்திரனால் வழிபட்ட சாஸ்திர லிங்கமும் அருள் செய்கிறது. சன்னதிக்கு வலதுபுறம் இரு பிரகாரங்களை உள்ளடக்கிய அருள்மிகு சொர்ணவள்ளி அம்மன் சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இது உமாதேவிக்காக சுயம்புலிங்கத் திருமேனி திருக்கோயிலில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ராஜகோபுரம் ஆனது 152 அடி உயரத்தில் முத்து வடுகநாதரை நினைவாக மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது. 

இத்திருத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்றும், மனநோய் நீங்கும் என்றும் இத்திருத்தலத்தில் பாதம் பட்டால் பாவ விமோசனம் பெற்று ஏழு ஜென்மத்திற்கும் புண்ணியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

 சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் “யாம் இருப்பது கானப்பேர்” எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...