திருமழபாடி வைத்தியநாதர் ஆலயம்...!
இன்று நந்தியெம்பெருமான் திருமணம் 🙏
திருத்தலம் அறிமுகம்: நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்தித் திருமணம்-
‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..’
அன்று சுந்தரர் பாடிய திருத்தலம்தான் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழபாடி வைத்தியநாதர் திருத்தலம்.
காவிரி வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 54-ம் திருத்தலம் இது. எம் பெருமானே முன்னின்று நந்திகேஸ்வரருக்குத் திருமணம் செய்து வைத்த இடமாகக் கருதப்படுகிறது.
திருவையாறு அருகே அந்தணபுரத்தில் வசித்தவர் சிலாத முனிவர். குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த சிலாத முனி, குழந்தை பாக்கியம் வேண்டி, திருவையாறில் அருள்பாலிக்கும் ஐயாறு அப்பரை நோக்கித் தவம் இருந்தார்.
தவத்திற்கு மெச்சி இறங்கி வந்த ஐயாறு அப்பர், புத்திர காமேட்டி யாகம் செய்து யாகம் நடத்திய பூமியை உழுதால் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று உத்தரவிட்டார்.
உழுத நிலத்திலிருந்து பெட்டகம் ஒன்று கிடைக்க, அதிலிருந்து குழந்தையையும் பெற்றார் சிலாத முனிவர். ஆனால் அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் வாழுமென்று முன்பே கூறிவிட்டார் இறைவன்.
வித்தைகள் கற்றுத் தேர்ந்த செப்பேசன்
பெட்டகத்திலிருந்து தோன்றிய புதல்வனுக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் செப்பேசன். இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் தன் புதல்வன் இருப்பான் என்ற உண்மை, கடுங்கவலையாக சிலாத முனியை ஆட்கொண்டது.
தனது ஆயுள் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட செப்பேசன், ஐயாறு அப்பர் கோயிலின் அயன அரி தீர்த்தக் குளத்தில் இறங்கி சிவ பெருமானை வேண்டி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.
அவரது மேனியைத் திருக்குளத்து மீன்கள் கடித்துச் சேதப்படுத்தியபோதும் தவத்தைக் கலைக்கவில்லை.
மனஉறுதி கொண்ட அவரது தவத்தை மெச்சிய இறைவன், செப்பேசனுக்கு பூரண ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
திருமணம் நடத்திவைத்த வைத்த வைத்தியநாத சுவாமி
திருமழபாடி திருத்தலத்தில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்துவந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாம்பிகைக்கும் செப்பேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறு அப்பரே செப்பேசன் என்ற நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் மழபாடி வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘
நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.
No comments:
Post a Comment