Friday, March 24, 2023

மனம் நோகும் வார்த்தைகளை பேசுபவர்கள் வழிபட வேண்டிய தெட்சிணாமூர்த்திதிருமண்டங்குடி திருபுவனேஸ்வரர் கோவிலில் தெட்சிணாமூர்த்திக்கு தனிச்சன்னதி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதையடுத்து மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவிலுக்கு திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது கோவில் கருவறை கோமுகியில் (தீர்த்தம் வெளி வரும் பாதை) பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பழமையான கோவில்களில் ஆண்களின் வீரச்செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பெண்களின் வீரத்தை போற்றும் சிற்பங்கள் அந்த காலத்திலேயே வடிக்கப்பட்டு இருப்பது வியப்படைய செய்துள்ளது.

திருமண்டங்குடி திருபுவனேஸ்வரர் கோவிலில் இருப்பது தமிழ்நாட்டில் வேறெங்கும் காண கிடைக்காத அரிய சிற்பங்களாகும். அதாவது, நடுகற்களில் ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயுதம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்ற சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு உள்ள சிற்பங்களில் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள்.

திருபுவனேஸ்வரர் கோவில் கருவறை கோமுகியில் இத்தகைய அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. யாழி (பழங்கால விலங்கு) ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சிகள் சிற்பங்களாக அழகுற வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல பரதநாட்டியமாடும் பெண்கள், சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்கள் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. 3-ம் ராஜராஜன் (13-ம் நூற்றாண்டு) காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. சோழர் காலத்தில் திருப்பணி நடந்த கோவில்களில் இதுவும் ஒன்று.

பல அரிய சிற்பங்கள் இக்கோவிலில் ஏராளம் உள்ளன. பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில் மக்கள் வழிபடுமிடத்திலேயே அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

மனம் நோகும் வார்த்தைகளை பேசுபவர்கள் வழிபட வேண்டிய தெட்சிணாமூர்த்தி

திருமண்டங்குடி திருபுவனேஸ்வரர் கோவிலில் தெட்சிணாமூர்த்திக்கு தனிச்சன்னதி உள்ளது. மற்றவர்களை மனம் நோகும்படி தவறாக பேசி விட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் இவரை வணங்கி, வழிபாடு செய்தால் இந்த குறை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த காலத்தில் மன்னர்கள் பலர் தங்கள் குறைகள் நீங்க தெட்சிணாமூர்த்தியை வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...