Friday, March 31, 2023

, கருவறையே பள்ளியறையாக இருக்கும் தலமான#திருமாணிக்குழி#வாமனபுரீஸ்வரர்#அம்புஜாட்சி_அம்மன்திருக்கோயில்

இன்று 
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
1.தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றானதும், மகாவிஷ்ணு சிவனை வழிபட்ட தலமான, கருவறையே பள்ளியறையாக இருக்கும் தலமான
#திருமாணிக்குழி
#வாமனபுரீஸ்வரர்
#அம்புஜாட்சி_அம்மன்
திருக்கோயில்

மூலவர்:வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
அம்மன்/தாயார்:அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:சுவேத, கெடில நதி
புராண பெயர்:திருமாணிக்குழி
ஊர்:திருமாணிக்குழி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

சம்பந்தர்

தேவாரப்பதிகம்

மந்த மலர் கொண்டுவழி பாடுசெயு மாணி யுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டன் இடமாம் சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார்உதவி மாணி குழியே.

-திருஞானசம்பந்தர்

தலபெருமை:

சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது “உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்’ என பாடுகிறான். எனவே இறைவனுக்கு “உதவிநாயகன்’, அம்மனுக்கு “உதவி நாயகி’ என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர்.

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான “பீமருத்ரர்’ திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.

சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது. வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால் துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.

தல வரலாறு:

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,”” இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,” என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு “திருமாணிக்குழி’ என
பெயர் ஏற்பட்டது.

2. 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான, பெருமாள் நான்கு நிலைகளில் அருள்புரியும் தலமான
#திருவந்திபுரம்
#தேவநாத_சுவாமி
(தெய்வ நாயகன்)
#செங்கமல_தாயார்
திருக்கோயில் 

மூலவர் – தேவநாதர்
உற்சவர் – அச்சுதன்
தாயார் – செங்கமலம்
தல விருட்சம் – வில்வம்
தீர்த்தம் – கருடதீர்த்தம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவயீந்திரபுரம்
ஊர் – திருவகிந்திபுரம்
மாவட்டம் – கடலூர்
மாநிலம் – தமிழ்நாடு
ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஒளஷதாசலத்துக்கு வந்து வணங்க, நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட,”பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள்” என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது. இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரணடைந்தனர். அனைவரையும் பகவான் மன்னித்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சியளிப்பதாகக் கூறிய பகவான், தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். தேவர்களுக்குத் தலைவனாக இருந்தது போரில் வென்றதால் தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன், அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

 
 

பெருமாளுக்கு தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் நீர் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வரத்தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொன்னார். ஆதிசேஷன், தன் வாலால் அடித்து, பெருமாளுக்குத் தீர்த்தம் தந்தார். அதனால் இதற்கு சேஷதீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும்.

இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது.

ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம். இத்தலம் 108திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.

வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.

தேசிகன் பெருமாளை நாயகன் – நாயகி பாவத்தில் (பெருமாள் – நாயகன், தேசிகன் – நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார். தன் விக்ரத்தை தானே செய்து கொண்டார். தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.

யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.

கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும். ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் இலட்சுமி நரசிம்மர் சன்னதியில், நரசிம்மர் இலட்சுமியை இடதுமடியில் அமரவைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் தனது வலது தொடையின்மீது அமரவைத்து அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது, அனுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என் பெயரைக் கொண்டதாம். உடற்பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் இலட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவரையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார். ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்த சத்வம் எனப்படுகிறது. வைணவ ஆகமப்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் சென்று நேர்த்திகடன் செலுத்தலாம்.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.

–திருமங்கையாழ்வார்

கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.

திருவிழா

சித்திரை மாதம் – தேவநாதபெருமாள் பிரம்மோற்சவம் -10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை – 9ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி –

வைகாசி விசாகம் – வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாத்து முறை 10 நாள் (உற்சவம்) பெருமாள் வசந்த உற்சவம் -10 நாள் (பௌர்ணமி சாத்து முறை) நரசிம்ம ஜெயந்தி ஆடி அமாவாசை, ஆடிப்பூர உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தைமாதம் மகரசங்கராந்தி, பங்குனி ஸ்ரீராம நவமி உற்சவம் ஆகியவை முக்கியமான விழா நாட்கள் ஆகும்.

பிரார்த்தனை

தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள். கோயிலுக்குள் உள்ள “சேஷதீர்த்தம்” என்னும் கிணற்றில் உப்பு, வெல்லம், மிளகு, பால் இவற்றை பிரார்த்தனையாக சேர்ப்பது சர்வரோக நிவாரணம் அளிக்கும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு, பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும். குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோசம் நிவர்த்தி ஆகும்.

நேர்த்திக் கடன்

தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள். முடிக்காணிக்கை செலுத்துகிறார்கள். மாவிளக்கு போடுகிறார்கள். இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தல், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல் அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள்.

இந்த இரண்டு திருத்தலங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் 

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...