Friday, April 21, 2023

. யார் குரு பகவான் வடக்கை பார்ப்பவர். தெட்சிணாமூர்த்தி தென்முககடவுள்.

தட்சிணாமூர்த்தி (அல்லது) தென்முகக்கடவுள்
தட்சிணாமூர்த்தி என்றும் தென்முகக்கடவுள் என்றும் போற்றப்படும் இவர் ரிஷிகளுக்கு யோகத்தையும் ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் நிலை ..

சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில் சௌமியம் (சாந்தம்) சம்ஹாரம் (வதம்), நிருத்தம் (நடனம்), யோகம் (தியானம்) அனுக்கிரகம் (அருளல்) ஆகிய ஐந்தொழில்களில் யோக நிலையில் இருந்து ரிஷிகளுக்குக் கல்வியையும், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் மூர்த்தியாகத் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார்.

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் “தெக்கினான்” என்றும், “ஆலமர் செல்வன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகவே, தென்திசை அறிவும், ஞானமும் நிறைந்த திசையாகக் கருதப்படுகிறது. இவர் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்திருப்பார்.

வியாக்யான தட்சிணாமூர்த்தி

இமயமலையின் மீது ஆலமரத்தினடியில் அமர்ந்து சாஸ்திரங்களை விளக்குவது போல அமைந்திருக்கும். இவர் புலித்தோலினையோ அல்லது வெள்ளைத் தாமரையிலோ பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். 

வலது காலைத் தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் இருக்கும். இவ்வகையான அமைதியினை “வீராசனம்” என்று அழைக்கப்படுகிறது.

தொங்கவிடப்பட்ட வலது காலினை அபஸ்மாறன் அல்லது முயலகன் மீது வைத்திருப்பது போலமைந்திருக்கும். முன்று கண்களையும், (நெற்றிக்கண்) நான்கு கரங்களையும், பெற்றிருப்பார். 

முன் வலது கை ஞான முத்திரை அல்லது சுதர்சன முத்திரையினையும், இடது கை வரத முத்திரை அல்லது தண்ட ஹஸ்தத்தினையும் (முன் கை முழங்காலின் மீது வைத்து நீட்டியவாறு அமைந்திருக்கும்), பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை அக்னியும் அல்லது சர்பமும் தரித்திருக்கும். 

தலையில் சடாமுடி தரித்திருக்கும் சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கும் சடாபாரம் அணிந்திருக்குமேயானால் அதன் உள்ளே கங்கையைத் தாங்கியவாறு இருக்கும்.

இவரது மேனியின் நிறம் வெண்ணிறமான ஸ்படிகத்தின் நிறத்தைப் போல அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிவிக்கப்பட்டிருக்கும் மார்பில் திருநீற்றுச்சாந்து பூசியிருப்பார்.

யக்ஞோபவீதம் அணிந்திருப்பார் இடது காதினில் சங்கபத்ர குண்டலமும், வலது காதினில் குண்டலமும் அணிந்திருக்கும். தட்சிணாமூர்த்தியின் பார்வையானது காலின் பெருவிரலினைப் பார்த்தவாறு அமைந்திருக்கும்.

தர்மத்தையும், ஞானத்தையும் கற்கும் ஆவலில் ரிஷிகள் சூழ்ந்திருப்பர். அம்சுமத் பேதாகமம், சபதரிஷிகளான நாரதர் ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர் மற்றும் அகஸ்த்தியர், ஆகியோர் சூழ்ந்திருப்பதாகக் கூறுகிறது. 

அகஸ்த்தியர், புலஸ்த்தியர், விஸ்வாமித்திரர், மற்றும் ஆங்கீரசர் ஆகிய நான்கு ரிஷிகள் ஞானம் பெறுவதாகக் காரணாகமம் குறிப்பிடுகின்றன. இவர்கள் தலையில் சடாமுடியும் கழுத்தில் ருத்திராட்சமும் அணிந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

ஞானதட்சிணாமூர்த்தி

வியாக்கியான தட்சிணாமூர்த்தியைப் போன்ற வடிவில் அமைந்திருப்பார் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் நீலோத்பல மலரும், வலது கையில் ஞானமுத்திரையும், முன் இடது கையில் அபயம் அல்லது தண்டஹஸ்தமும் தரித்துக் காணப்படுவார்.

யோக தட்சிணாமூர்த்தி

1. முதல் வகை

இரண்டு கால்களைக் குறுக்காக மடக்கி ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்திருப்பார். முன் வலது கை மார்பிற்கு நேராக யோகமுத்திரை தரித்து முன் இடது கை தொடையின் மீது அமர்த்தி யோக நிலையில் அமைந்திருக்கும். பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை தாமரை மலரினைத் தரித்திருக்கும் இவரின் பார்வை மூக்கின் நுனியைப் பார்த்தவாரமைந்திருக்கும். தோள்களின் மீது பரவலாகச் சடைகள் காணப்படும்.

2. இரண்டாவது வகை

யோக தட்சிணாமூர்த்தியின் இடதுகால் மடக்கி உத்குடிக்காசணத்திலும் இடது காலையும் உடலையும் யோகபட்டையால் இணைக்கப்பட்டிருக்கும் வலதுகால் தொங்கவிடப்பட்ட நிலையிலிருக்கும். முன் இடது கையின் முழங்கை இடது முழங்காலின் மீது அமர்த்தப்பட்டிருக்கும்.

3. மூன்றாவது வகை

இரண்டுகால்ளையும் குறுக்காக மடக்கி ஆசனத்தின் மீது ஊன்றியவாறு அமைந்திருக்கும். இவரது கால்களையும் உடலையும் யோகப்பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். முன் கைகள் இரண்டும் ஆசனத்தில் ஊன்றியிருக்கும் முழங்காலில் மீது அமர்த்திய வாறிருக்கும் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் கமண்டலமும், தரித்திருக்கும் சடைகளை ஒன்றாக இணைத்து சடா மண்டலமாகக் கொண்டு அதன் மேல் பிறைச்சந்திரன் மற்றும் நாகத்தினை அணிந்திருப்பார். வெள்ளை நிற மேனியராய் இருப்பார். கழுத்தின் நிறம் கருப்பாக அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிந்திருப்பார்.

வீணாதர தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல யோகம் மற்றும் ஞானத்தில் தேர்ச்சிபெற்றது மட்டுமல்லாமல் கலையிலும் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக இசையில் பிரியர். பல கருவிகளை உபயோகிப்பவர். மிருதங்கம் (வெட்டுவான் கோயில் ), வீணை (லால்குடி) கருவிகளை மீட்டும் வல்லமை பெற்றவர்.

காமிகம் காரணம், அம்சுமத்பேதாகமம் இவரை இசைப்பிரியர் என்று எடுத்துக்காட்டுகின்றது. இடது காலை உத்குடிக்காசனத்தில் இருப்பதாக அமைத்து முன்னிரு கைகளில் வீணையைப் பிடித்தவாறும், பின் இருகைகளில் மான் மற்றும் மழுவினைத் தரித்திருப்பார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி பலவித விலங்கினங்கள், ஊர்வனவைகள், ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், பூதகணங்கள், கின்னரர்கள் ஆகியோர் சூழ அமைந்திருக்கும். ஆலமரத்தினடியில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் விரிக்கப்பட்ட புலித் தோலின் மீது சௌமிய தோற்றத்துடன் அமர்ந்திருப்பார்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...