1500 ஆண்டுகள் பழைமையான
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புகழ்பெற்ற அஷ்ட பைரவர்கள் தலமான,
மன்மதன் தலமான
#ஆறகழூர்
#காமநாதீஸ்வரர்
(காயநிர்மாலேஸ்வரர்)
#பெரியநாயகிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது.
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.
மூலவர்: காமநாதீஸ்வரர் (காய நிர்மாலேஸ்வரர்)
அம்மன்: பெரியநாயகி
தல விருட்சம்: மகிழம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
புராண
பெயர்: அகழியூர்
ஊர்: ஆறகழூர்
மாவட்டம்: சேலம்
மாநிலம்: தமிழ்நாடு
#தல_வரலாறு:
சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.
பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு “அனந்தேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
#அஷ்ட_பைரவர்:
1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில் கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனாக சிவ பெருமான் “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயரில் அருள்புரிகிறார். “அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும். இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர்.
சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு.
தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.
இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் நள்ளிரவில் அஷ்டபைரவர்களுக்கும் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.
#மன்மதன் வழிபட்ட தலம் :
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
#தலபெருமை:
சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும். இந்த சீடர்கள் யாரென்பதை அறிய முடியவில்லை.
#தலையாட்டி_பிள்ளையார் :
இத்தலத்திற்கு வெளியே “தலையாட்டி பிள்ளையார்’ சன்னதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டான் மன்னன். அதற்கு இவர், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்’ என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு “தலையாட்டி பிள்ளையார்’ என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை “காயநிர்மாலேஸ்வரர்’ என்கின்றனர். “காயம்’ என்றால் உடல், “நிர்மலம்’ என்றால் பரிசுத்தம் என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்’ என்று மருவியுள்ளது.
#பொது_தகவல்:
இத்தலவிநாயகர் மூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள ராஜகோபுரம் மூன்றுநிலைகளைக் கொண்டது.
அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாமிக்கு வலது பின்புறத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில் ஐயப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்னே இருபுறமும் விநாயகர் சன்னதி உள்ளது.
விநாயகர் தன் தம்பியான ஐயப்பனை தன் நிழல் வடிவிலும் காப்பதாக கூறப்படுவதால் இரண்டு விநாயகர் சன்னதி இருப்பதாக சொல்கிறார்கள்.
#ஆலய_அமைப்பு :
இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.
கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
#அஷ்டபைரவர்கள் :
காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.
பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.
கோவிலின் முன் வாயிலின் அருகே பூக்கடைகளை ஒட்டி குறும்ப விநாயகர் சன்னதி அருகில் ஒரு குத்துகல்லில் கல்வெட்டு காணப்படுகிறது, சற்றே சிதைந்த நிலை, சிலவரிகளை வைத்து அரசாங்க ஏட்டை வைத்து பார்த்ததில் வீரபாண்டியன் கல்வெட்டு என தெரிகிறது.
#கல்வெட்டு வாசகம்:
"அழகிய சொக்கரான வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 10ஆவது இவர் முதலிகள் கண்ணகனான வழுதிநாராயண தேவனேன் சேல நாட்டு சேலத்து உடையார் கிளிவண்ணமுடைய நாயனார் கோயில் இவ்வாட்டை சித்திரை மாதத்து திருமதிலும் விரிய இட்டும் திருமடை விளாகம் கண்டும் திருவெடுத்து கட்டி கண்டும் திருக்குளமும் வகுதுடும் திருவாசலில் தென் புறம் மாகேசுவர் நாயனாரை பூசிகுமவர்களுகும் மேடம் கண்டும் இம்மடம் நோக்கும் திருமேனிக்கு இந் நாயனார் தேவதானமான மறவந ஏரி குடிநீங்கா தேவதானத்தில் குழி 150 பறம்பு பூதான கரதானமாக கொண்டு இட்ட குழி 200 ஆகா குழி முன்னூற்றைம்பதுங்க் கொண்டு இம்மடம் குத்துமெழுகி திருவிளக்குமிட்டு அவர்களுக்கு இக்கல்வெட்டின் படி காணியாக கடவதாகவும் இதன்மம் நோக்கினவன் திருவடி இரண்டும் மேலே இதுப கேசுரர் இரக்ஷை "
இந்த வீரபாண்டியன் காலம் கிபி 1276, இவர் மதுரை பாண்டியர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியரின் கீழ் கொங்கு பகுதிகளை ஆண்டவர் எனக் கொள்ளலாம், இவரின் அலுவலர் வழுதிநாராயணன் கோவிலுக்கு செய்த திருப்பணிகளை இந்த கல்வெட்டு சிறப்பாய் செல்கிறது...!
ஒரு சித்திரை மாதம் இவர் கோவிலில் திருமதிலும் திருமடை விளாகம் திருக்குளமும் தென்திசை வாசல் மடமும் எடுப்பித்து , இதற்காக மரவனேரி கீழுள்ள 350 குழி நிலத்தை கொடையாக கொடுத்தார்.
#திருவிழாக்கள் :
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.
ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
#அமைவிடம் :
சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சிற்றம்பலம் 🙏
No comments:
Post a Comment