Monday, May 1, 2023

திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது

சிவபெருமான் மன்மதனை (காமனை) தனது நெற்றிக் கண்ணால் எரித்த, அட்ட வீரட்டான தலங்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான
#திருக்குறுக்கை_வீரட்டானம் (கொறுக்கை)
#வீரட்டேஸ்வரர்
(காமதகன மூர்த்தி)
 #ஞானாம்பிகை திருக்கோயில் வரலாறு:

திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும்.

மூலவர்:வீரட்டேஸ்வரர்
உற்சவர்:யோகேஸ்வரர்
அம்மன்:ஞானம்பிகை
தல விருட்சம்:கடுக்காய் மரம், அரிதகிவனம்
தீர்த்தம்:திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம்
புராண பெயர்:திருக்குறுக்கை
ஊர்:கொருக்கை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

#வழிபட்டோர்:

திருமால், பிரம்ம தேவர், லட்சுமி, மன்மதன்,ரதி தேவி, சேக்கிழார்,அப்பர் சுவாமிகள் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

#பாடியவர்கள்:

திருநாவுக்கரசர்

#தேவாரப்பதிகம்:

"நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய்வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.

__திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.

காமனை தகனம் செய்தது, தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.

#கொறுக்கை:

மக்கள் வழக்கில் 'கொருக்கை' என்று வழங்குகிறது.

இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, 'தீர்க்கபாகு' என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் 'குறுங்கை முனிவர் ' என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் 'குறுக்கை' என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.

#தல_வரலாறு:

சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார்.ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.

உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.

இருப்பினும் இனி மன்மதனை உன்னால் மட்டும் தான் பார்க்க முடியும் என கூறினார்.

அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

#தலபெருமை:

பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும்.

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.

#பொதுதகவல்:

இத்தலவிநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.

  ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.

கொடிமரமில்லை.
  
 காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

குறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

  
 நடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை, 'சம்பு விநோத சபை', 'காமனங்கநாசனி சபை' எனப் பெயர் பெறும்.

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

  
 
 
 சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

#காம_சம்கார மூர்த்தி: 

அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

#சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள்: 

இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.

#கோயில்_அமைப்பு:

கோயிலுக்கு முன்பு குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தியைக் காணலாம். வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் வலப்புறம் சுக்கிரவார அம்மனைக் காணலாம். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அம்மன் சன்னதியை அடுத்து தட்சிணாமூர்த்தி சன்னதி, வாகனங்கள், நடராஜர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து திருச்சுற்றில் குறுங்கை விநாயகர் சன்னதி உள்ளது. அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளனர். அதற்கடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சோகஹரேஸ்வரர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. அடுத்து காணப்படும் உற்சவமூர்த்திகள் அறை உள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், பிரம்மா, அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி ஆகியோர் உள்ளனர்.

#தல_சிறப்பு:

ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26 வது தேவாரத்தலம் ஆகும்.

#தமிழகத்தில் ஹோலி பண்டிகை:

ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது தமிழகத்திலும் ஹோலிப் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஹோலி பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகின்றது. அதன் பின்னணியில் பல்வேறு புராண கதைகள் உள்ளன. பிரகலாதன் ஹோலிகா கதை, கிருஷ்ணர் தான் கருமையாக இருப்பதாக நினைத்த கதை, சிவன் - பார்வதி காதல் கதை என உண்டு.

அதையும் தாண்டி ஒரு புராண நிகழ்வு நடந்துள்ளது. அதுவும் தமிழகத்தில் என்றால் ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?

காம தகனம், கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைக்கும் அதிசயம் என பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றது 
இந்த தலம்.

ஹோலிப் பண்டிகை உருவாக காரணமாக இருந்த காம தகனம் நடந்த இடமாக பார்க்கப்படுகின்றது.

#சாம்பல்_நிறைந்த இடம் :

இப்படி புராண சிறப்பு மிக்க இந்த இடத்தில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் களிமண் நிறைந்திருக்கின்றன. ஆனால் கோயிலில் உள்ள காமன் தகனம் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சாம்பல் நிறைந்திருக்கின்றது. தோண்ட தோண்ட சாம்பல் மட்டுமே வருகின்றது.

மாசி மாத பெளர்ணமி தினத்தில் இந்த காம தகனம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

#பிரார்த்தனை

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும் அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.

#நேர்த்திக்கடன்:

கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

#திருவிழா:

மாசி மகம் – காமதகன விழா – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழா -பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு – வீதியுலா. மார்கழி மாதம் – திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- இதுவும் சிறப்பான விழா ஆகும்.. நவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோசம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

#வழிகாட்டி:

மயிலாடுதுறைக்கு பக்கத்தில் 12 கீ மீ தொலைவில் உள்ளது. மாயூரத்திலிருந்து குத்தாலம் செல்லும் சாலையில் பொன்னூர் வந்து அங்கிருந்து திருவாளப்புத்தூர் செல்லும் குறுகிய சாலையில் 4 கீ மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். மாயூரத்திலிருந்து நீடூர் சென்று அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...