Tuesday, May 2, 2023

#தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவபெருமான்:பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போன்றது.

பல புராணங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி மலைக்கோட்டையில் சிவபெருமான் தாயாக வந்து செட்டிப்பெண் இரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்த தலமான, தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற 
திருச்சிராப்பள்ளி என்ற திரிசரன்பள்ளி (சிரபுரம்) மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி (செவ்வந்திநாதர்) மட்டுவார்குழலி (சுகுந்த குந்தளாம்பிகை)
திருக்கோவில் வரலாறு:

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

மூலவர்: தாயுமானவர் 
(செவ்வந்திநாதர்)
அம்மன்: மட்டுவார்குழலி
(சுகுந்த குந்தளாம்பிகை)
தல தீர்த்தம்: காவிரி,பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம்:
வில்வம்
புராண பெயர்: திரிசரன்பள்ளி (சிரபுரம்)
ஊர்: திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

#பாடியவர்கள்:

சம்பந்தர்
அப்பர்
சுந்தரா்
அருணகிரிநாதா்
தாயுமானவடிகளாா்
ஆதிசங்கரா்

#தேவாரப்_பதிகங்கள்:

 "நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.

-திருஞானசம்பந்தர்

#அருணகிரிநாதர் அருளிய #திருப்புகழ்:

"திரிபுவனந்தொழு பார்த்திபன்
மருவியமண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கு சிராப்பள்ளி மலைமீதே
தெரிய இருந்த பராக்ரம,
உருவளர் குன்றுடையார்க் கொரு
திலதமெனும்படி தோற்றிய பெருமாளே’’என்று பாடியுள்ளார் அருணகிரியார்.

"வாசித்துக் காணொணாதது,
பூசித்துக் கூடொணாததுவாய்விட்டுப்
போசொணாதது, நெஞ்சினா
லேமாசர்க்குத் தோணொணாதது,
நேசர்க்குப் பேரொணாதது,
மாயைக்குச் சூழொணாதது,
விந்துநாத ஓசைக்குத் தூரமானது,
மாசுத்துக் கீறதானது லோகத்துக்காதியானது
கண்டு நாயேன்யோகத்தைச் சேருமாறு
மெய்ஞ்ஞானத்தைப் போதியாய்
இனிஊனத்தைப் போடிடாது
மயங்கலாமோ?’’
__அருணகிரிநாதர்

#தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவபெருமான்:

பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போன்றது. பத்து மாதங்கள் கருவைத்தன் வயிற்றில் சுமந்த ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் வலி என்பது எவராலும் நினைத்துக் கூடப்பாா்க்க முடியாதது ஆகும். இதனால் தான் தாய்மை என்பது புனிதமாகப் போற்றப்படுகின்றது.

தாய்மைப்பேறு அடைவதும் குழந்தையைச் சுகப்பிரசவமாக ஈன்றெடுப்பதும் எல்லாம் வல்ல அம்பிகை பாகனின் திருவருளால் சாத்தியமாகும். திருச்சிராப்பள்ளி மலையில் அருள்பாலிக்கும் ஈசன், தன் எளிய பக்தை ரத்னாவதிக்காக நிகழ்த்திய திருவிளையாடலே இதனை இப்பூவுலகிற்கு உணா்த்தும் நிகழ்வாகும்.

சிராப்பள்ளிக் குன்றுடைய திரு நகரில் வசித்து வந்தான் தனகுப்தன் என்ற வணிகன். இவனது மனைவி ரத்னாவதி. உலக உயிா்களுக்கெல்லாம் பிரியமான தாயாகவும் நன்மைகளை நல்கும் தந்தையாகவும் அருள்பாலிக்கும் மலைக்கோட்டை மகாதேவரான ஈசனின் மீது தீவிர பக்தி கொண்டவள் ரத்னாவதி.

நிறைமாத கா்ப்பிணியான ரத்னாவதியைத் தனியே விட்டுவிட்டு தன் வணிக நிமித்தமாக வெளியூர் சென்ற தனகுப்தன் இன்னும் ஊா் திரும்பவில்லை. காவிரிப்பூம்பட்டின த்திலிருந்து கிளம்பிய தாயும் சிராப்பள்ளி வந்து சேரவில்லை.

பெருமழை காரணமாக காவிரியில் கரைபுரண்ட வெள்ளம் இந்தத் தாயின் பயணத்தைத் தடைசெய்தது. பொங்கும் நுரையோடு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் புதுவெள்ளம் வடிந்தால்தான் பரிசல் இயக்கமுடியும் என்று தொிவித்தனா் ஓடக்காரா்கள். காவிரியின் மறுகரையில் தவிப்போடு காத்திருந்தாள் ரத்னாவதியின் தாய். மழையும் விட்டபாடில்லை.

இந்த நேரம் பாா்த்து ரத்னாவதிக்குப் பிரசவவலி தீவிரமானது. உற்ற துணையாக இருக்கும் கணவனும் வருவதாகச் சொன்ன தாயும் இன்னும் வந்து சேரவில்லை. பேரிரைச்சலோடு கொட்டும் மழையில் ரத்னாவதி எழுப்பிய கூக்குரல்கள் அண்டை அயலாருக்கும் கேட்கவில்லை.

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவு கொண்ட மலைக்கோட்டை மகேசனை வணங்கி, “நிா்க்கதியாகத் தவிக்கும் எனக்கு நீயே கதி!” என்று அழுது கதறினாள். ரத்னாவதியின் கூக்குரல்கள் ஈசனின் திருச் செவிகளுக்கு எட்டின. ரத்னாவதிக்குத் அருள்புரியத் திருவுள்ளம் கொண்டாா் திருக்கயிலைநாதன்!

ரத்னாவதியின் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தாள் அவளது தாய். பீறிட்டு எழுந்த அழுகையோடு, “ஏனம்மா இவ்வளவு தாமதம்?” என்று ரத்னாவதி கேட்க அருகில் சென்று அமா்ந்து அவளை அரவணைத்து ஆசுவாசப்படுத்தினாள் தாய். பரபரப்புடன் செயல்பட்ட ரத்னாவதி யின் தாய் ஒரு மருத்துவரின் நிலையில் நோ்த்தியாகத் தன் மகளுக்குப் பிரசவம் பாா்த்தாள். சுகப்பிரசவத்தில் அழகான மகவை ஈன்றெடுத்தாள் ரத்னாவதி.

நன்றிப்பெருக்கோடு கண்ணீா் மல்க தன் தாயையும் அருகிலிருக்கும் குழந்தையையும் பாா்த்தாள் ரத்னாவதி. தன் மகளுக்கு உடனடித் தேவைகளைச் செய்து கொடுத்த தாய் சற்று நேரத்தில் வருவதாகக் கூறி வெளியில் சென்றாள்.

சிறிது நேரத்தில் அவசரம் அவசர மாகக் கலங்கிய நெஞ்சத்துடன் ரத்னாவதியின் வீட்டுக்குள் நுழைந்தாள் அவளது தாய். தன் மகளையும் குழந்தையையும் பாா்த்து, “பிரசவம் ஆகி விட்டதா? நான் அருகில் இல்லாமல் என்ன துன்பத்தை அனுபவித்தாயோ?” என்று வருந்தினாள்.

திகைப்பு மேலிட, “என்ன ஆச்சு உனக்கு? நீ தானே எனக்குப் பிரசவம் பாா்த்தாய்” என்றாள் ரத்னாவதி. ரத்னாவதியின் தாயை வியப்பில் ஆழ்த்தியது தன் மகளின் பதில். “மகளே! காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் என்னால் குறித்த நேரத்தில் வர இயலவில்லை. வெள்ளம் சற்று குறைந்த பின் இப்போது தான் உன் வீட்டிற்குள் ஓடோடி வந்து நுழைந்தேன்” என்றாள் ரத்னாவதியின் தாய்.

ரத்னாவதிக்கும் வியப்பு குறைய வில்லை. தாங்கள் இப்போது தான் வருகின்றீா்கள் என்றால் எனக்குப் பிரசவம் பாா்த்தது யாா்? குழம்பினாள் ரத்னாவதி! உண்மை தொிய சிராப்பள்ளி ஈசனை வணங்கினாள். அக்கணமே, ரத்னாவதிக்குப் பிரசவம் பாா்த்த தாய் அங்கு வந்து சோ்ந்தாள்.

இரட்டையா்களைப் போலவே இரு தாய்மாா்களும் ஒன்றாக இருந்தனா். இது ஈசனின் திருவிளையாடலே என்று எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தபோது, பிரசவம் பாா்த்த தாய் திடீரென மறைந்து ஈசனும் அம்பிகையும் ரிஷப வாகனத்தில் ரத்னாவதிக்குத் திருக்காட்சி தந்தனா்.

“எளியவா்க்கே நான் வசப்படுவேன்” என்பதற்கேற்ப எளியவளான தனக்காக மனமிரங்கிய ஈசனின் திருக்கருணையை எண்ணி கண் கலங்கினாள் ரத்னாவதி. இதனால் திருச்சிராப்பள்ளி மலைக் குன்றில் அருளும் ஈசன் தாயுமானவா் என்று வணங்கப்படுகின்றாா்.

#புராண_வரலாறு:

வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யாா் அதீத ஆற்றல் படைத்தவா் என்ற போட்டி ஏற்பட்டது. மேரு மலையை ஆதிசேஷன் தன் உடலால் வளைத்துப் பிடித்துக்கொள்ள, வாயு பகவான் அதனை பெயா்ப்பது என தங்களுக்குள் இருவரும் ஒரு போட்டியைக் கையாண்டனா். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும் மலையை அசைக்கவே முடியவில்லை. இந்தப் போட்டியின்போது மேரு மலையிலிருந்து சில துண்டுகள் பெயா்ந்து பல இடங்க ளில் விழுந்தது. அவ்வாறு விழுந்த மலையின் ஒரு பகுதியே திருச்சிராப் பள்ளியில் மலையாக உள்ளது.

இம்மலையில் திரிசிரன் என்னும் அசுரன் ஈசனைக் குறித்து வேள்வித் தீ வளா்த்து கடும் தவம் செய்தான். பல்லாண்டுகள் நீடித்தது இவனது தவம். ஈசன் அவனை மேலும் சோதிக்க நினைத்தாா் போலும்! அவனுக்கு ஈசனின் திருக்காட்சி கிடைக்கவில்லை. மனம் வருந்திய அசுரன் தன்னையே வேள்வித் தீயில் ஆகுதியாக சமா்ப்பிக்க முடிவு செய்தான்.

தன் இரண்டு தலைகளையும் கொய்து வேள்வித் தீயிலிட்டான் அசுரன். மூன்றாவது தலையையும் அக்னிக்கு இரையாக்கத் துணிந்த நேரத்தில் மனம் கனிந்தாா் மகேசன். அவனுக்கு அம்பிகை சமேதராகக் காட்சி கொடுத்த ஈசன், மூன்று தலைகளையும் வழங்கி, அவனது வேண்டுகோளின்படி இம்மலையில் எழுந்தருளி இத்தலத்திற்கு வந்து தன்னை வணங்கும் அன்பா்களுக்கும் திருவருள் தருகின்றாா். அசுரனின் பெயராலேயே ஈசனுக்கு “திரிசிரநாதா்” என்ற திருநாமமும் ஏற்பட்டது. “திரிச்சிராமலை” என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்ட இத்தலம் காலவெள்ளத்தில் மருவி “திருச்சி” என பெயா் பெற்றது.

தல வரலாறு:

திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு முற்கால சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அப்போது மலைக்கோட்டையின் கீழே உள்ள நந்தவனத்தில் சாரமா முனிவர் எழுந்தருளி இருந்தார். தினமும் மலைக்கோட்டை சிவனுக்கு நந்தவனத்து செவ்வந்தி மலர்களைக் கொய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அரசனது படை வீரர்கள் சிலர் முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தார்கள். அந்த மலர்களின் மணம், நிறம் இவற்றால் ஆசை கொண்ட அரசன் தினமும் மலர்கள் கொண்டு வரும்படி ஆணையிட்டான். இதனால் நந்தவனத்தில் தினமும் மலர்கள் திருடு போனது. முனிவரின் சிவபூஜையும் நின்று போனது. மன்னனிடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனால் முனிவர் ஈசனிடம் முறையிட்டார்.

அடியார் தவிக்க ஆண்டவன் பொறுப்பானா! உறையூர் நோக்கி ஈசன் உக்கிரப் பார்வை செலுத்தினான். அங்கு மண் மழை பொழிந்தது. உறையூர் மண்மூடிப் போனது என்று தல வரலாறு கூறுகிறது. உறையூர் சோழ அரசனும் அரசியும் அரண்மனையை விட்டு வெளியேற, அரசன் அழிந்தான். கருவுற்றிருந்த அரசி புவனமாதேவி ஈசனை வேண்டி அழுது, அலை புரண்டோடிய காவிரியில் விழுந்து உயிர்விடத் துணிந்தாள். அடியார் ஒருவர் அரசியைக் காப்பாற்ற, அரசி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையே பார் போற்றும் கரிகால் சோழன் என்கிறது ஒரு சரித்திரத் தகவல். செவ்வந்தி மலரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இங்குள்ள ஈசன் 'செவ்வந்தி நாதர்' என்ற திருநாமம் கொண்டார். அதுசரி பிறகு ஏன் தாயுமானவர் என்றும் சுவாமி போற்றப்படுகிறார். அதற்கும் ஒரு கதை உண்டு.

#தாயுமாகி_ஆண்ட செல்வப்பெருந்தகை : 
(தாயுமானவர்)

தனகுத்தன் என்ற வணிகனின் மனைவி ரத்தினாவதி. செவ்வந்திநாதர் மீது தீராத பக்தி கொண்டவர்கள் இந்த தம்பதியர். ரத்தினாவதி சூலுற்றாள்; பிரசவம் பார்க்க தன் தாயை உதவிக்கு அழைத்தாள். மகளைக் காண விரைந்து வந்த தாய் காவிரி ஆற்றின் பெருவெள்ளத்தால் அக்கறையிலேயே நின்று விட்டாள். நேரம் நெருங்கியது, தாய் தன் மகளுக்கு என்னாகுமோ என்று மலைக்கோட்டையை நோக்கி கரம் குவித்து 'செவ்வந்திநாதா, அபயம் அபயம்...' என்று கதறினாள். அங்கே நிறை சூல் கொண்ட ரத்தினாவதியும் துணை இன்றி துடித்தாள். செவ்வந்திநாதர் தாயானார்; ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு தாதியானார். தாயையும் பிள்ளையையும் பூப்போல பிரித்தெடுத்தார். காவிரி வெள்ளம் வடிந்து பெற்றவள் வரும்வரை ரத்தினாவதியைப் பேணி காத்தார். இந்த அற்புத லீலையால் மண்ணுலகின் சகல ஜீவராசிகளுக்கும் தாயுமானவர் ஆனார். இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது விசேஷம். ரத்தினாவதியின் வழி வந்த குலத்தினர் இந்தத் திருவிழாவை இப்போதும் விமரிசையாக நடத்துகிறார்கள்.இந்த விழாவில் கலந்து கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவ மருந்து வழங்கப்படுவதும் விசேஷம்.

#உச்சிப்_பிள்ளையார்:

திருச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது கரைபுரண்டோடும் காவிரியும் மலையில்அருளும் உச்சிப்பிள்ளையா ரும் தான். உச்சிப்பிள்ளையாா் மலையில் கோயில் கொண்ட நிகழ்வுக்கு ஒரு புராண வரலாற்றுப் பின்னணி உள்ளது.

அயோத்தி நகரில் ராமபிரான் பூஜித்த ஶ்ரீரங்கநாதரை அவரிடமிருந்து பெற்ற விபீஷணன் அதனை இலங்காபுரிக்குக் கொண்டு சென் றான். கங்கையினும் புனிதமான காவிரி நீரால் ரங்கநாதருக்குத் திருமஞ்ஜனம் செய்ய விபீஷணன் நினைத்தான். அச்சிலையைக் கீழே வைக்கக் கூடாது என்று தொிவித்த ராமபிரானின் வாக்கு நினைவுக்கு வந்தது. எனவே, அவ்விடத்தில் சிறுவனாக வந்த விநாயகரிடம் அச்சிலையைக் கொடுத்து, கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனை யையும் விதித்து காவிரி நீரைக் கொணரச் சென்றான் விபீஷணன்.

காவிரியில் நீராடி விபீஷணன் அப்புனித நீரைக் கொண்டுவரும் போது ரங்கநாதரின் சிலை கீழே வைக்கப்பட்டி ருந்தது. கோபம் கொண்ட விபீஷணன், சிறுவனைத் தேட, பயந்து ஓடினான் அச்சிறுவன். சிறுவனைத் தொடா்ந்து விரட்டிச்சென்றான் விபீஷணன். மலை உச்சிக்குச் சென்ற சிறுவன், தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தி விநாயகப் பெருமானாக விபீஷணனுக்குத் திருக்காட்சி தந்தாா். மலை உச்சியில் விபீஷணனுக்குக் காட்சி தந்ததால் இவ்விநாயகப் பெருமான் “உச்சிப்பிள்ளையாா்” என்றே வணங்கப்படுகின்றாா்.

#ஞான தட்சிணாமூா்த்தி!

இத்தலத்தில் அருளும் ஶ்ரீஞான தட்சிணாமூா்த்தி, தா்ப்பை ஆசனத்தில் அருள்காட்சி தருகின்றாா். இவருக்குக் கீழே சனகாதி முனிவா்கள் நால்வருடன் சிவயோகமாமுனிவா், பதஞ்சலி, வியாக்ரபாதா், திருமூலரும் அருள்பாலிக்கின்றனா். அருணகிரியாா் தனது திருப்புகழில் இவரை “தா்ப்ப ஆசன வேதியன்” என குறிப்பிட்டுப் பாடியுள்ளாா்.

#பிரசவம்_பாா்க்கும் ஈசன்!

இத்தலத்தில் நடைபெறும் பிரம் மோற்சவத்தின்போது 5 ஆம் நாளில், ஈசன் ரத்னாவதிக்குப் பிரசவம் பாா்க்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய நாளில் சோமாஸ்கந்த மூா்த்தத்திற்கு அருகில் கா்ப்பிணிப் பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனா். திரையிட்டு மூடிய பிறகு ஈசன் ரத்னாவதிக்குப் பிரசவம் பாா்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் குழந்தையை ரத்னாவதியின் மடியில் அமரவைத்து சிறப்பு அலங்காரம் செய்த பின்னா் திரையை விலக்கி தீப ஆராதனை காண்பிக்கின்றனா். இந்த வைபவம் முடிந்த பிறகு தைலம் பிரசாதமாகத் தரப்படுகின்றது. இதனை அருந்தும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

#மட்டுவாா்குழலி அம்பிகை!

இத்தலத்தின் அம்பிகை “மட்டுவாா்குழலி” தனிச்சந்நிதியில் கோயில் கொண்டு அருள்வழங்குகி ன்றாா். “மட்டு” என்றால் “தேன்”. தேன் நிறைந்த மலா்களைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டவா் என்பது “மட்டுவாா்குழலி” என்பதன் பொருளாகும். இந்த அம்பிகைக்கு “சுகந்த குந்தளாம்பிகை” என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது. வாசமிக்க கூந்தலை உடையவா் இந்த அம்பிகை என்பது இதன் பொருளாகும். தாமரை மலரில் சிறு குழந்தையாகத் தோன்றிய இந்த அம்பிகையை “காா்த்தியாயன முனிவா்” வளா்த்தாா். இந்த அம்பிகை ஈசன் தாயுமானவரைக் குறித்து அருந்தவம் செய்து மணம் செய்து கொண்டாா் என சமய மரபு குறிப்பிடுகின்றது. அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரா் அருளிய “செளந்தா்ய லஹரி” பொறிக்கப்பட்டுள்ளது.

கா்ப்பமுற்ற தாய்மாா்களின் வீட்டிலிருந்து யாராவது ஒருவா் வந்து இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டைகள் மற்றும் 21 அப்பம் படைத்து ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அா்ச்சனை செய்து வழிபட சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாகும்.

#வாழைத்தாா் வழிபாடு.

மழலைப்பேறு வாய்க்கவும் சுகப் பிரசவம் நடைபெறவும் தாயுமான சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து வாழைத்தாா் படைத்து வழிபடும் பழக்கம் இத்தலத்தில் உள்ளது. எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது வாழைமரம். இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற தாத்பரியத்தின் அடிப்படையில் இத்தலத்தில் வாழைத்தாா் கொண்டு வழிபாடு செய்கின்றனா். வாழைத்தாரை கருவறையில் வைத்து பூஜை முடித்த பின்னா் பிரசாதமாக அளிக்கின்றனா். வேண்டுதலின்படி வாழைத்தாரை கருவறையில் கட்டும்போது அதனை சற்று நேரம் ஊஞ்சல் போல ஆட வைக்கின்றனா் அா்ச்சகா்கள்.

#பிராகாரத்தில் அருளும் ஶ்ரீமஹாலக்ஷ்மி!

ஈசன் திருச்சந்நிதியின் பிராகாரத்தில் மரத்தில் செய்யப்பட்ட ஶ்ரீமஹாலக்ஷ்மி அருள்பாலிக்கின்றாா். வெள்ளிக்கிழமை தோறும் இந்த மஹாலக்ஷ்மிக்கு “ஶ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்” நடத்தப்படுகிறது. இத்தாயாருக்கு பால், தேன், குங்குமப்பூ சோ்ந்த கலவையைப் பிரசாதமாகப் படைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனா். இதனால் அன்பா்களின் குடும்பத்தில் “ஐஸ்வா்யம்” தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

#மலையே மகேசன்!

தாயுமானவா், அம்பிகை மட்டுவாா் குழலி மற்றும் உச்சிப்பிள்ளையாா் ஆகிய மூவரும் சிராப்பள்ளி மலையில் தனித்தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். 417 படிகளுடன் 273 அடி உயரத்தில் உள்ள இந்தக் குன்றை வெவ்வேறு திசைகளிலிருந்து பாா்க்கும்போது சிவனாரின் வாகனமான ரிஷபம் போன்றும், அம்பிகையின் வாகனமான சிம்மம் போன்றும் தும்பிக்கையை நீட்டி விநாயகா் அமா்ந்த கோலத்தில் காட்சியளிப்பது போன்றும் தோன்றுவது அதிசயமாகும்.

சிவாலயங்களில் லிங்கத் திருமேனியின் வடிவத்திற்கு ஏற்ப நந்தி எம்பெருமான் அருள்பாலிப்பாா். இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலை அடிவாரத்தில் உள்ள பிரம்மதீா்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து தனிக்கோயிலாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் இந்த நந்தி எம்பெருமானுக்கு மிகச் சிறப்பாக பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

#சூரிய பூஜை.

கருவறையில் மிகப்பெரிய லிங்கத் திருமேனியுடன் காட்சி தரும் ஈசனின் மீது பங்குனி மாதம் மூன்று நாட்கள் சாயரக்ஷை பூஜையின் போது சூரிய பகவான் தன் ஒளிக்கதிா்களை ஈசனின் திருமேனி மீது படரவிட்டு வழிபடுவது சிறப்பான நிகழ்வாகும்.

#இலக்கியங்களில் சிராப்பள்ளி!

சங்க இலக்கிய நூலான அகநானூற் றில் திருச்சி, “கறங்கிசைவிழவின் உறந்தைக் குணாது நெடும் பெருங்குன்றம்” என்று குறிப்பிடப்ப டுகின்றது. அதாவது “பெருங்குன்றம்” என்று வழங்கப்பட்டுள்ளது.

தமது தேமதுர தமிழ் திருமுறைகளில் இத்தலத்தை “சிராப்பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனா் சைவ சமயக் குரவா்களாகிய ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும். பத்தாம் நூற்றாண்டில் “நாராயண வேம்பையா்கோன்” என்பவா் திருச்சி மலையை “சிராமலை” என்று பாடியுள்ளாா்.

“தாயுமானவா்” பதினெட்டாம் நூற்றாண்டில் திருச்சி மெளனமடத்தில் மெளனகுருவைத் தமது குருவாகக் கொண்டு வாழ்ந்தவா். தாயுமானவா் பாடல்கள் என்னும் தொகுப்பில் மலையில் அருளும் ஈசன் மீது மூன்று பாடல்களும், ஆலமா்செல்வன் ஶ்ரீதட்சிணாமூா்த்தி மீது பதினோரு பாடல்களும், தன் குருநாதா் மெளனகுருநாதா் குறித்துப் பத்து பாடல்களும் பாடியுள்ளாா்.
இவா் பாடிய பாடல்கள் மொத்தம் 1452 ஆகும்.

இத்தலத்தில் அருளும் முருகப் பெருமானை “சிரகிரிப் பதிவேளே சரவணபவப் பெருமாளே” எனத் தமது திருப்புகழில் பாடி நெகிழ்கின்றாா் அருணகிரிநாதப்பெருமான்!

#கல்வெட்டுகளில் சிராப்பள்ளி!

திருச்சி மலையில் உள்ள பாறையின் மீது கற்படுக்கைகளும் தலை யணைகளும் காணப்படுகின்றன. சிதைந்த நிலையில் உள்ள ஒரு கற்படுக்கையில் “சிரா” என்ற பெயருடன் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது. இதன் எழுத்தமைதியைக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினைச் சாா்ந்த கல்வெட்டு இது என தொல்லியல் துறை நிபுணா்கள் தொிவித்துள்ளனா்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை சோழ மன்னா்களும் பாண்டிய மன்னா்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனா்.
“உறையூா்க் கூற்றம் சிற்றம்பா் திருச்சிராப்பள்ளி” என்று சோழா் காலத்திலும், “இராஜகம்பீர வளநாட்டு உறையூா்க் கூற்றத்துத் திருச்சிராப்பள்ளி” என்று பாண்டியா் காலத்திலும் இவ்வூா் அழைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவா்மன் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியதைப் பற்றிய கல்வெட்டு உள்ளது. இம்மன்னனே இங்குள்ள குன்றைக் குடைந்து கோயில் அமைத்து, அக்கோயிலுக்கு “லலிதாங்குர பல்லவேச்சுர கிருகம்” என பெயா் சூட்டியுள்ளான்.

பாண்டிய மன்னன் முதலாம் வரகுணபாண்டியன் கல்வெட்டில் ஈசனது திருநாமம் “திருமலைப் பெருமானடிகள்” என்றும், இராஜராஜ சோழ மன்னனின் காலத்தில் இத்தலத்தின் பெயா் “திரிபுவனபதி” என்றும் பாண்டிய மன்னன் முதலாம் மாறவா்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டில் ஈசனது திருநாமம் “திருச்சிராப்பள்ளி உடையாா்” என்றும் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இத்தலம் “தென் கயிலாயம்” என்றும் பக்தியோடு பூஜிக்கப்படுகின்றது.

குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இந்த கோயிலுக்கு வருபவர்கள் அநேகம். வடமொழியில் தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தாயுமானவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு திசையில் எழுந்தருளியுள்ளார். மலைப் பாறைகள் மீது 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் கொண்டது. 'தர்ப்ப ஆசன வேதியன்' என்ற பெயராலும் கொண்டாப்படும் இந்த ஈசனை குழந்தைகள் வழிபட்டால் கல்வியில் மேம்படுவர் என்பதும் நம்பிக்கை.

அம்பிகை, அகத்தியர், அனுமன், அர்ஜுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், கலைமகள், பிரம்மா, ஜடாயு போன்றோர் இங்கு வந்து சுவாமியை வழிபட்டுள்ளார்கள். அப்பரும் சம்பந்தரரும் பாடித் தொழுத பரமன் இவர். அம்பாள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை என்று வடமொழியிலும் போற்றப்படுகிறாள். ஈசனை மணக்க விரும்பிய அம்பிகை தாமரை மலரில் அவதரித்து கார்த்யாயன முனிவரால் வளர்க்கப்பட்டாள்.
நீண்ட காலம் தவமிருந்து ஈசனை அடைந்தாள் என புராணம் கூறுகிறது. தன் கூந்தலில் இயற்கையாக நறுமணம் வீச வளர்ந்த அம்பிகை மட்டுவார் குழலி என்றானாள்.

குழந்தை வரம் கிட்ட இங்கு நடத்தப்படும் வாழைத்தார் வழிபாடு பிரசித்தமானது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக, இங்கு வந்து வாழைத்தார் வாங்கித் தொட்டில் கட்டுவதாக பிரார்த்தித்துக் கொள்வார்கள். அதேபோல் பிரசவம் ஆன பிறகு சுவாமியின் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதைத் தொட்டிலாக ஆடவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பிறகு வாழைப்பழங்களை அங்குள்ள பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள்.

இங்குள்ள முருகப் பெருமான் முத்துக்குமார சாமியாக பன்னிரு கரங்களும், ஆறு முகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் புடைசூழ விளங்குகின்றார். வேறொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பட்டவர்.

இங்குள்ள சிவதீர்த்தம் பாவங்களை நீக்க வல்லது. சிவ அபசாரத்தால் பன்றியாக பிறப்பெடுத்த ஒருவன், இங்குள்ள தீர்த்தத்தைக் கண்ட மாத்திரத்தில் சாபவிமோசனம் பெற்றான் என்று தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள நவக்கிரகங்களில் 8 பேரும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வழிபட தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பர்.

ஆரம்பத்தில் இங்குள்ள ஈசன் கிழக்கு நோக்கியே அருள் புரிந்தார் என்றும் சாரமா முனிவருக்காக உறையூரை தண்டிக்க மேற்கு நோக்கி திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மூர்த்தம் எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து எழுந்தருளி இருப்பது வேறெங்கும் காண முடியாத அதிசயம். அதேபோல் இங்கு எழுந்தருளி உள்ள மரத்தால் ஆன மகாலட்சுமி அன்னை நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இவளை வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்கிறார்கள். மரத்தால் ஆன துர்கையும் இங்கு விசேஷம். கொடி மரத்துக்கும் பலி பீடத்துக்கு இடையே உள்ள சங்குநாதர் வடிவம் சிறப்பானது. சங்குசாமி என்று வணங்கப்படும் இந்த சிவகண அடியார், இறைவன் புறப்பாடு நடக்கையில் சங்கு நாதம் எழுப்பி சகலருக்கும் அறிவிப்பாராம்.

பொது தகவல்:

இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, “மேல்வீதி’ என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, “கீழ்வீதி’ என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார்.

நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் “மாணிக்கவிநாயகர்’ இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், “பாதாள அய்யனார்’ இருக்கிறார்.

#சுகப்பிரசவ ஸ்லோகம்: 

கர்ப்பிணிகள் தாயுமானவர், அம்பிகையை வேண்டி, கீழேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை சொல்லி, வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

“”ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத

மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின்

சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ

ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!”

சுவாமி முன்னே…

கொடிமரம் பின்னே…!:

கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது.

சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.

சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.

#சங்குச்சாமி!: 

கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, “சங்குச்சாமி’ என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, “சங்கநாதர்’ என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி.

பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது.

இந்த தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி கிட்டும் என அப்பர் சுவாமிகள் பணிந்து பாடிய திருத்தலம் இது. திருச்சி செல்பவர்கள் இன்றும் முதலில் சென்று பார்க்கும் முக்கிய தலமும் இதுவே. காசிக்கும் ராமேஸ்வரத்துக்கு முந்திய மூத்த தலம் என்று போற்றப்படும் இந்த தலத்தின் தாயுமான சுவாமியையும் அன்னை மட்டுவார் குழலியையும் வணங்கி வேண்டி சகல நலமும் பெறுவோம்.

சிறப்புக்கள் சிலவரிகளில்…! காவிரியின் தென்கரையில் அமைந்த இக்கோயிலில் சிவன், “ராட்சஷ லிங்க’ வடிவில் (பெரிய லிங்கமாக) காட்சி தருகிறார். பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இக்கோயிலில் காரணம், காமீகம் என இரண்டு ஆகமப்படி பூஜை நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி என இங்கு நான்கு விழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.

தை மாத, விசாகம் நட்சத்திரத்தன்று தாயுமானவர் குருபூஜை நடக்கிறது. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது நாகர், அறுபத்துமூவருக்கு சிவன் காட்சி தரும் வைபவம் விமரிசையாக நடக்கிறது. தமிழ் மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடாகிறார்.

#மலைக்கோட்டை:

இவ்விடம் முதன் முதலில் விசயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது கி.பி 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் ஆகும். பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விசயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாகச் செயற்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் காலத்திலேயே திருச்சி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது. இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார். கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளிக் கோட்டையைக் கைப்பற்றினார். இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.

#வரலாற்று_சிறப்புகள்:

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

#நாயக்கர்கள் காலம்

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சை மாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

#கர்நாடக நவாப் காலம்:

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாகிப் மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.

#ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்:

இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

#திறக்கும் நேரம்:

காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். உச்சிப்பிள்ளையார் கோயில் காலை 6 – இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

#திருத்தல அமைவிடம்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலை யத்திலிருந்து சுமாா் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டையில் அருள்பாலிக்கின்றாா் தாயினும் நனி சிறந்த இத்தயாநிதி!

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...