Saturday, May 20, 2023

நம் நாட்டின்மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?..

நம்  நாட்டின்மிகப்  பெரிய கோயில் எது   தெரியுமா?..
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. 

திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். 

தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

9 ராஜ கோபுரங்கள், 
80 விமானங்கள், 
12 பெரிய மதில்கள், 
13 மிகப்பெரிய மண்டபங்கள், 
15 தீர்த்தக்கிணறுகள், 
3 நந்தவனங்கள், 
3 பெரிய பிரகாரங்கள், 
365 லிங்கங்கள் 

(இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 
86 விநாயகர் சிலைகள், 
24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. 

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள்,முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப் பட்டுள்ளது. 

தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. 

இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும்.  

அதன்மேல்வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.  

தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம்அமைந்துள்ளது

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். 

(ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். 

அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். 

தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். 

அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. 

இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு. 

திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்..

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...