சாந்த சொரூபியாக்கும் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர்...!
செட்டி நாட்டில் வீரப்ப சுவாமிகள் என்பவர் பரமசிவனின் பரமபக்தர்.
தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் எல்லாம் வேதங்கள் முழங்க எப்போதும் விழாக்கோலம் காணவேண்டும் என்பது அவரது ஆசை. அவரிடம் இருந்த ஒரே ஒரு கெட்டகுணம். துர்வாச மகரிஷி மாதிரி முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். தான் சொன்னதை யாராவது செய்யாவிட்டால் சபித்துவிடுவார்.
இதனால் இவர் விரும்பியபடி அன்பர்கள் ஏராளமான ஆலயங்களுக்கு திருப்பணி செய்தார்கள். ’இவ்வளவெல்லாம் செய்தும் இந்த கோபம் மட்டும் என்னைவிட்டு தொலையவில்லையே ? இதற்கு என்ன செய்யலாம்...?’’ என தன் நெருங்கிய நண்பரான சுப்பராய அய்யரிடம் கேட்டார்.
திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ளது திருக்களர் என்ற க்ஷேத்திரம் உள்ளது. உங்களைப் போலவே முன்கோபியாக இருந்த துர்வாச மகரிஷி இந்த தலத்தில் வந்து சிவனை ஆராதித்தார்.
ஈசனும் கருணை கொண்டு துர்வாசரின் கோபத்தை ஒழித்து சாந்தமான மனிதராக்கி அருள் புரிந்தார்’’ என புராண தகவலைச் சொன்னார்.
துள்ளிக் குதித்த வீரப்பர் உடனே திருக்களர் தலத்துக்கு சென்று குடில் ஒன்றை போட்டுக்கொண்டு சிவனை மனமுருக துதிக்க ஆரம்பித்து விட்டார்.
கூடவே, கோயிலின் திருப்பணியையும் செய்து முடித்தார். இந்தப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் போதே அவருடைய முன்கோபம் குறையத் தொடங்கியது. அமைதியான மனிதராக மாறிக் கொண்டிருந்த வீரப்பர், சிவனுக்கு தேர் ஒன்றையும் செய்து கொடுத்தார்.
தேரில் சிவன் உலாவர ஏற்பாடானது. தேர் கிளம்புமுன் ஆடு, பலி தர வேண்டும் என்று சிலர்கூற, வீரப்பர் கடுமையாக எதிர்த்தார். ’பலி கொடுக்காவிட்டால் தடை ஏற்படும்...’’ என பலர் குரல் கொடுக்க... ‘’நான் சொல்கிறேன்... தேரை இழுங்கள். ஏதாவது விக்னம் ஏற்பட்டால் பார்த்துக்கொள்ளலாம்...’’ என்றார் வீரப்பர்.
கனஜோராக கிளம்பிய தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. அசையவில்லை. ‘’நாங்கள் அப்போதே சொன்னோம்... சுவாமிகள் கேட்கவில்லை.... இப்போதாவது பலி கொடுக்க அனுமதி தரவேண்டும்...’’ என்றனர் நிர்வாகிகள்.
‘’நீங்கள் ஆடோ, கோழியோ எதை பலி கொடுத்தாலும் ‘ஐயோ... தாய் போய்விட்டாளே?’ என்று குட்டிகள் அழும், ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சை பலியிட்டாலும் தாய் புத்திர சோகத்தில் ஆழ்ந்துவிடும்... பலி கொடுத்தால் தான் தேர் ஓடும் என்றால் என்னையே பலி கொடுங்கள்’’
எனக்கென்ன அழுவதற்கு அம்மாவும் இல்லை. குழந்தையும் இல்லை. தேர் செய்யக் காரணமான நானே அது ஓடுவதற்கும் பொறுப்பாகிறேன்’’ என்றார் வீரப்ப சுவாமிகள்.
கோபசுவாமி சாந்தசுவாமியாக மாறிதான் இதை சொன்னார் என்றாலும் யாரும் துணியவில்லை. எதுவும் பேசாமல் தேரை இழுத்தனர். என்ன ஆச்சரியம்! தேர் சுலபமாக கிளம்பி ஓடியது. சுவாமிக்கு அவர் கற்பூர தீபம் காட்டினர்.
’முன்கோபியான என்னை சாந்தமாக்கி, என் பொருட்டு தேரையும் ஓடவைத்து அருள்மழை பொழிந்த உன் கருணையே கருணை!’’ என ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரப்ப சுவாமிகள் அப்படியே சுப்பராய அய்யரின் மேல் சாய்ந்தார். அவருடைய ஆன்மா சிவனோடு ஒன்றிக் கலந்துவிட்டது !
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!
No comments:
Post a Comment