Tuesday, May 2, 2023

திருக்கோட்டூர் கொழுந்தீஸ்வரர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருக்கோட்டூர் கொழுந்தீஸ்வரர் ஆலயம். 
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருக்கோட்டூர் கொழுந்தீஸ்வரர் ஆலயதரிசனம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைபூண்டி செல்லும்  வழியாக 15 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரி தென்கரை தலங்களில் 111 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 175 வது தலமாகவும் விளங்கும் சிவாலயம் இது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளுடையது இத்தலம். ‘கொந்துலாமலர் விரிபொழிற் கோட்டூர் நற்கொழுந்தினை’ என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஆலயம் இது. இந்த தலத்தில் கொழுந்துநாதர் (கொழுந்தீஸ்வரர்) என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் தேனார்மொழியம்மை (மதுரபாஷினி) என்பதாகும்.

ஒரு சமயம் இந்திரனின் சபையில் ரம்பை, திலோத்தமை, மேனகை, ஊர்வசி, கெற்பை, பரிமளை, சுகேசி ஆகிய ஏழு தேவலோக மங்கைகள் நடனமாடி, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். நடனம் முடிந்ததும் ரம்பை அருகில் இருந்த பூஞ்சோலையில் படுத்து உறங்கினாள். நடனமாடிய களைப்பில் உறங்கிய அவளது ஆடை சற்று விலகியிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த நாரத மகரிஷி, இதனைக் கண்டு கோபம் அடைந்தார். ஒரு பெண் தன் ஆடை விலகியிருப்பதைக் கூட கவனிக்காதபடி தூங்குவதை சகிக்க முடியாத அவர், ரம்பையை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். 

கண் விழித்த ரம்பை நடந்தவற்றை அறிந்து, நாரதரை வணங்கினாள். தன்னுடைய சாபத்தை நீக்க வேண்டும் என்று மன்றாடினாள். இதையடுத்து நாரதர், ‘பூலோகத்தில் சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். பூமிக்கு வந்த ரம்பை, முதலில் பாலியாற்றங்கரையில் அமர்ந்து நீண்ட காலம் தவம் புரிந்தாள். அவளுக்கு சிவனருள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அந்த பகுதியில் இருந்த ரோமச மகரிஷியை வணங்கி தன்னுடைய நிலையை கூறினாள்.
அவரது வழிகாட்டுதலின்படி இத்தலத்தில் உள்ள கொழுந்தீசரை வணங்கினாள். 

வன்னி வனமாக இருந்த இந்த இடத்தில் சிவனை பூஜித்த ரம்பை, சிவ வழிபாட்டிற்காக ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கி, ஒற்றைக் காலில் நின்றபடி தவம் செய்தாள். இதற்கிடையில் ரம்பை இல்லாததால் தேவலோகம் பொலிவிழந்தது. நடந்ததை அறிந்த இந்திரன், ரம்பையை அழைத்து வருவதற்காக சித்திரசேனன் என்னும் கந்தர்வனை பூலோகம் அனுப்பினான். அவன் வந்து அழைத்தும், ‘சிவனருள் பெறாமல் தேவலோகம் வரமாட்டேன்’ என்று ரம்பை மறுத்து விட்டாள். இதைக் கேட்டு கோபம் கொண்ட இந்திரன், தனது வாகனமான ஐராவதத்தை அனுப்பி, ரம்பையை தூக்கி வரும்படி பணித்தான். 

பூலோகம் வந்த ஐராவதம் யானை, ரம்பையை தனது துதிக்கையால் வளைத்து தூக்க முயன்றது. அதைக் கண்டு அஞ்சிய ரம்பை, சிவலிங்கத்தைத் தாவி அணைத்துக் கொண்டாள். இதனால் கோபமுற்ற ஐராவதம், ‘இந்தச் சிவலிங்கத்தோடு உன்னை இந்திரலோகம் கொண்டு செல்வேன்’ என தனது தந்தத்தால் சிவலிங்கத்தைச் சுற்றிலும் தோண்டத் தொடங்கியது. ரம்பையின் அளவற்ற அன்பினால் நெகிழ்ந்த பரமன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, ஐராவதத்தை ஓங்கி உதைத்தார். அதன் உடல் பலவாறாக சிதறிட, அது ஓலமிட்டவண்ணம் உயிரைவிட்டது.

ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் அவளுக்கு, வரங்கள் பல தந்து மறைந்தார். ரம்பை சிவபூஜையை தொடர்ந்து செய்து வந்தாள். ஐராவதத்திற்கு ஏற்பட்ட நிலையை அறிந்த இந்திரன், சிவ பாதகம் செய்ததற்காக அஞ்சி, வன்னிவனம் அடைந்து, ரம்பை வழிபட்ட லிங்கத்தை அவளோடு இணைந்து வழிபட்டு வந்தான். பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி, ஐராவதத்தை உயிர்பித்ததோடு, ரம்பையையும் இந்திரனுக்கு பணி செய்ய பணித்தார். ஐராவதத்தின் கொம்புகளாகிய கோட்டால், அகழப்பட்டதால் இத்தலம் ‘கோட்டூர்’ எனப் பெயர் பெற்றது.

இவ்வாறு பல சிறப்புவாய்ந்த இந்த
ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...