Thursday, May 11, 2023

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)*

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)
*
முக்கண் முதல்வரின் ஆணையை ஏற்று, இறைவர் கயிலையில் தோற்றுவித்த குளத்தில் மூழ்கி, மறுகணமே திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு வருகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருள் பெருமையை யாரே அறிந்துணர வல்லார்?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்.  
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 371)
ஆதி தேவர்தம் திருவருள் பெருமை யார்அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றிலோர் வாவி
மீது தோன்றி வந்தெழுந்தனர் உலகெலாம் வியப்ப
*
சுவாமிகள் கரைக்கு வந்து 'கயிலை நாயகரின் திருவருளும் இதுவோ?' என்று விழிநீர் பெருக்கி நெகிழ்கின்றார் ('இறைவர் தன் அருளினால் கயிலையில் ஒரு குளத்தைத் தோற்றுவிக்க, நம் சுவாமிகளோ இங்கு இறைவர் மீதுற்ற அன்பினால் (தன் கண்ணருவி கொண்டு) ஒரு பொய்கையைத் தோற்றுவிக்கின்றார்' என்றிதனைச் சேக்கிழார் பெருமான் நயம்பட விவரித்துப் போற்றுகின்றார்).   
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 372)
வம்புலா மலர் வாவியின் கரையில் வந்தேறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியில் படிந்தெழும் படியார்
*
குளக்கரையிலிருந்து திருவையாறு திருக்கோயில் நோக்கிச் செல்லுகையில், யானை; கோழி; குயில்; பேடை; மயில்; பகன்றில்; மான்; நாரை; கிளி; காளை இவைகள் யாவும் தத்தமது துணையோடு விளங்கியிருக்கக் காண்கின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 373)
மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயா(று)
உடைய நாயகர் சேவடி பணிய வந்துறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவுமான
புடை அமர்ந்ததம் துணையொடும் பொலிவன கண்டார்
*
காட்சி யாவும் சிவசக்தி மயமாய் விளங்கக் காண்கின்றார். எத்திசையிலும், எவ்வுயிரிலும் சிவசக்தியர் உயிர்க்குயிராய் எழுந்தருளி இருப்பதை காட்சி பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் தரிசித்தும் உணர்ந்தும் சிவானந்தம் எய்தியவாறே, ஐயாறு ஆலய வாயிலை வந்தடைகின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 374)
பொன் மலைக் கொடியுடன்அமர் வெள்ளியம் பொருப்பில்
தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார் 
🕉திருச்சிறம்பலம் சிவசிவ 🕉

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...