Wednesday, May 3, 2023

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும்

🛕 சித்ரகுப்தசுவாமி கோவில்... 
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவரான, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் 
தனிக் கோயிலாக அமைந்த
யம தர்மனின் கணக்கரான 
சித்ரகுப்தசுவாமி
கர்ணகிஅம்பிகை

 திருக்கோயில் வரலாறு: 

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார்.

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில், காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்திரகுப்தனுக்கென்று தனி    ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு, சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பௌர்ணமிக்கு முன்தினம், சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில், ராஜவீதியில் அமைந்துள்ளது.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருவார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.மனிதர்களின் பாவச் செயலுக்கு இறைவன் சித்ரகுப்தரே கணக்குக் கொடுக்கிறார். அவர் வாழ்க்கையில் பாவம் செய்பவர்களைக் கண்காணித்து, அவர்களை யமனுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். இந்தியாவில் சித்திரகுப்தர் கோயில்கள் அரிதாகவே காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது.

கோயில் வரலாறு 9 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், மூன்றுநிலை ராஜகோபுரங்களைக் கொண்டுள்ளது. இங்கே, சித்ரகுப்தர் தனது பக்தர்களுக்கு, வலது கையில் எழுத்தாணி மற்றும் இடது கையில் ஓலைச்சுவடிகளுடன் அமர்ந்த நிலையில் ஆசிர்வதிக்கிறார். இந்து நம்பிக்கையின்படி, சிவபெருமான் ஒருமுறை உலகில் ஒழுக்கத்தை நிலைநாட்ட விரும்பினார்.

பாவம் செய்தவர்களை தண்டிக்க விரும்பினார். அவர் ஒரு நபருக்குக் கடமையை ஒதுக்க வேண்டும். எனவே, அவர் ஒரு தங்கத் தட்டில் சித்திரகுப்தராக உருவம் வரைந்தார். அவர் சித்தரிப்பிலிருந்து உருவானதால், அவர் சித்ரகுப்தன் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் சித்ரகுப்தரிடம், மக்களின் நன்மை தீமைகளைக் கணக்கிட்டு, அவர்களை யமனின் முன் அழைத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறார். சோழர்களுக்குப் பிறகு, மற்ற வம்சங்களால் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

தலவரலாறு:

சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்த பிரம்மாவின் உடம்பில் இருந்து, கையில் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன், தெய்வீக வடிவில் ஒருவர் வெளிப்பட்டார். தவத்தின் பலனாக இந்த அதிசயம் நிகழ்ந்ததை அறிந்த பிரம்மா, ”ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், ‘சித்ர குப்தர்’ என அழைக்கப்படுவாய்.

உனது சந்ததியினர் காயஸ்தா என பெயர் பெறுவர்” என்று அருள்புரிந்தார். இவர்கள் தற்போது ‘கருணீக மரபினர்’ எனப்படுகின்றனர். சித்ரகுப்தர் காளி தேவியை வழிபட்டு, எண்ணும், எழுத்தும் கற்றுக் கொண்டார். பிறகு உஜ்ஜயினி சென்று மகாகாளேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமை பெற்றார். ஐப்பசி மாதத்தில் வரும் எம துவிதியையன்று எமலோகத்தில் கணக்கராகப் பதவி ஏற்றார்.

மற்றொரு புராணமாக ,

பார்வதி தேவி வடி‌த்த ‌சி‌த்‌திர‌த்தை‌க் கொ‌ண்டு உருவா‌க்‌கப்ப‌ட்டதாலு‌ம், ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ததாலு‌ம் ‌
சி‌த்ரகு‌ப்த‌ர் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.கல்வி வேள்விகளில் சிறந்தவரான சித்ரகுப்தரை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவ, புண்ணியங்களை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.

ஒன்பதாம் நூற்றாண்டில் சென்னிச்சோழன் அமைச்சராக இருந்த கனகராயன் என்பவன் சித்திரகுப்தனுக்கு ஆலயம் எழுப்பியதை வரலாறு கூறுகிறது.
இக்கோயில் மூன்று நிலை இராஜகோபுரத்தை கொண்டுள்ளது.
இங்கு சித்திரகுப்தரே கருவறையில் தெற்கு முகமாய் மூலவராக அமர்ந்த கோலத்தில் தன் வலது கரத்தில் எழுத்தாணியும், இடது கரத்தில் ஏடும் தாங்கி வீற்றிருக்கின்றார் (சித்திரகுப்தர் கரங்களில் எழுத்தாணியும் ஏடும் சிவபெருமான் தந்தார் என தலபுராணம் கூறுகிறது).

இவருக்கு காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் கோயில் உள்ளது.

ராஜாதி_ராஜன்: 

முன்னொரு காலத்தில், சவுதாஸ் என்ற மன்னன் சவுராஷ்டிர தேசத்தை ஆட்சி செய்தான். கொடுங்கோலனான அவன் மக்களைத் துன்புறுத்தினான். ‘நானே ராஜாதிராஜன்’ என்று ஆணவத்துடன் திரிந்தான். ஒருநாள், காட்டில் வேட்டையாடச் சென்ற போது தன் உடன் வந்தவர்களை விட்டு வழி தவறினான். அந்த நேரத்தில்,
” ஓம் தத்புருஷாய வித்மஹேசித்ர குப்தாய தீமஹிதந்நோ: லோக ப்ரசோதயாத்”
என்னும் காயத்ரி மந்திரம் ஒலித்தது. அந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு முனிவர்கள் யாகம் நடத்தக் கண்டான். ”என் ஆணையில்லாமல் யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொல்வேன்” என கத்தினான். முனிவர் ஒருவர், ‘நீ யார்? ஏன் இடையூறு செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு, “நான் ராஜாதி ராஜன் சவுதாஸ்” என கர்ஜித்தான். அதற்கு அவர், ”உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரே ராஜாதி ராஜன். அவரை வழிபட்டு நன்மை பெறுங்கள்” என்றார். அதைக் கேட்ட சவுதாஸுக்கு ஞானம் பிறந்தது. மனம் திருந்தி நல்லாட்சி நடத்தி தொடங்கினான். சவுதாஸின் ஆயுள்காலம் முடியவே, எமதுாதர்கள் எமலோகம் அழைத்துச் சென்றனர். அங்கு சித்ரகுப்தர், ”பிரபோ…சவுதாஸ் என்னும் இம்மன்னன் செய்த பாவம் கணக்கில் அடங்காது. ஆனால், தற்போது மனம் திருந்தியதால் சொர்க்கம் செல்ல அனுமதிக்கலாம்” என்றார்.

அதன்படியே, சொர்க்கம் செல்ல அனுமதிக்கப்பட்டான்.
கல்வி யோகம்: நவக்கிரகங்களில் ஒருவரான கேதுபகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். இவரை வணங்குவதால் கேது தோஷம் நீங்கும். நல்ல புத்தி உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் ஏற்படும். 

புராண_வரலாறு:

எமதர்மன் ஒருமுறை, கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கூறினார்.

உடனே ஈசன், பிரம்மதேவனை வரச்செய்து எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார். ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தைத் தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின. அப்போது, கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி எனும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள்.

இதனால், அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள். அந்தக் குழந்தை பிறந்த நேரம், சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது, சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம்.

இவர் இமயமலையில் கடும் தவம்புரிந்து பல சக்திகளைப் பெற்றார். பிறகு தந்தை, சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் என்கிறது புராணம். தென்னிந்தியாவில் சித்ரகுப்தருக்கு உள்ள ஒரே திருக்கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தத் திருத்தலம்.

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக, சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள், ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர்தான் சித்ரகுப்தர். மிகச்சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாகவும் இந்தத் தலம் திகழ்கிறது. சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிபதியாக திகழ்வதால், 7 கொள்ளு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் செல்வ விநாயகர் சந்நிதியும், கருவறையின் வலது பக்கத்தில் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் சந்நிதி அமைந்துள்ளது, அதனருகே சித்திரகுப்தர், அவரது துணைவியார் கர்ணகி அம்பாள் ஆகிய உற்சவ திருமேனிகள் உள்ளன. இங்கு ஐயப்பன் சந்நிதி வடக்கு முகமாகவும், அதற்கு எதிர்புறத்தில் விஷ்ணு துர்க்கை சந்நிதியும், அருகில் நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளன. கோயிலில் பின்பக்கத்தில் தீப மண்டபம் உள்ளது.

வழிபாட்டு பலன்:

சித்ரா பௌர்ணமியன்று சித்திரகுப்தரை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.
சித்ரா பௌர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகளை ரகசியமாக, நோட்டு மூலம் எழுதி வழிபட்டால், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர் காஞ்சி புரம் சித்ரகுப்தர். ஆகவே, சித்திரை மாதத்தில் சித்திரை பவுர்ணமியன்று சித்ரகுப்தனை வழிபட்டால் உங்கள் சிந்தனைகள் சீர்படும். வாழ்வில் நன்மைகள் ஏற்படும்!

சித்திரகுப்தருக்கு பெளர்ணமி விழா:

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பது. முற்பிறவியின் பாவ,புண்ணியங்களைக் கணக்கெடுத்து வைத்துக் கொள்ளும் பணியில் உள்ள சித்திரகுப்தரை மகிழ்விப் பதற்காகவே இந்திரவிழா சித்திரா பௌர்ணமியன்று தொடங்கப்படுகிறது.
என்று சிலப்பதிகாரத்தில் கூறபட்டுள்ளது. இவ்வழக்கப்படி இன்றும் தமிழகத்தில் சித்திரா பௌர்ணமியன்று மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சித்ரகுப்தர் கணக்கு:

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசித்ரகுப்தர் கோயிலில், சித்திரா பௌர்ணமி அன்று விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. அன்று சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பாளுடன் திருக்கல்யாணம் நடைபெறும் மற்றும் சிறப்பு தரிசனமும், கல்யாண திருக்கோலத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்கள். கோயிலுக்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் மனதளவிலும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.
இந்த கோயிலுக்கு வந்து மூலவர் சித்திரகுப்தரை வழிபட்டுச் சென்றால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

“சித்திரகுப்தர் எழுத்தால்
தென்புலக் கோன்பொறி யொற்றி
வைத்த விலச்சினை மாற்றித்
தூதுல ரோடி யோளித்தார்”. - என பெரியாழ்வார் கூறுகின்றார்.
சித்திரகுப்தர் எழுதிய கணக்குப்படி எமதர்மராஜன் காலமுத்திரை இடுகிறார். ஆனாலும், திருமாலின் அடியாரைக் கண்டால் எமதூதர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

சித்ரகுப்தர் காயத்ரீ மந்திரம்:

“ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயாத்”

இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது.  


No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...