#பச்சையம்மன்_என்னும்_ஆதி_மீனாட்சியம்மன்
தமிழ்நாட்டில் பழமையான சக்தி வழிபாட்டு முறையில் பச்சையம்மன் வழிபாடு முக்கிய அங்கம் வகிக்கிறது. தொடக்கத்தில் தனி சக்தி வழிபாட்டிலும், தாய் தெய்வ வழிபாட்டிலும் ஓர் அங்கமாக இருந்து பின்னர் சிவனோடு இணைக்கப்பட்டு பார்வதியாகவும் மீனாட்சியாகவும் வணங்கப்படுபவள் பச்சையம்மன். இவள் வளமையையும், செழுமையையும் தருபவளாக விளங்குகிறாள். அதனால்தான் பச்சையம்மன் ஆதி மீனாட்சி என அழைக்கப்படுகிறாள். மீனாட்சியாக மதுரையில் முடிசூடி ஆளும் முன்பே இப்பூவுலகிற்கு தவம் செய்வதற்காக வந்தவள் என்பதால், பச்சையம்மன் என்ற சொல் மதுரை மற்றும் அதற்கு அப்பால் இல்லை. தமிழ்நாட்டில் தொண்டை நாடு முதல் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வரை பரவலாக பச்சையம்மன் கோயில்களைக் காணலாம்.
சீலமால் இமயவரை காசிமாநகரமும் திருக்காஞ்சி அருணை நகரும் சேம்பிலிபுரம் செஞ்சி சிறுகரும்பூர் தில்லை திருமுல்லைவாயில் நெல்லூர் சேலையூர் தண்டரை சேர்ப்பாகைப் பெருந்துறை சீக்கனாங்குப்பம் மீஞ்சூர் சிதம்பரம் சீர்காழி சென்னராயபுரம் தஞ்சை திருக்கழுக்குன்றம் சேவூர் ஆலவாய்க் கருங்குழி வாழைப்பந்தல் ஒற்றியூர் அம்பிகைவனம் குடந்தை அரகண்ட நல்லூரும் சாத்தணம் நகர்முதல் அகிலமாய் அமர்ந்த தாயே! என்று பச்சையம்மன் குடியிருக்கும் பிரபலமான தலங்கள் குறித்து செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் தலவரலாறு குறிக்கிறது.
பச்சை நாயகி, பச்சைவாழி அம்மன், பச்சம்மன், பச்சம்மாள், பச்சிம்மா என்றும், சிவன்கோயில்களில் ஈசனின் துணையாக மரகதவல்லி, மரகதாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகாவிலும் பச்சையம்மனுக்கு வேறு பெயர்கள் வழங்குகின்றன. கிராம தெய்வம், குல தெய்வம் மற்றும் காவல் தெய்வமாக பல சமூகங்களில் கொண்டாடப்படும் பச்சையம்மனை வணங்குபவர்கள் பச்சை, பச்சம்மா, பச்சையப்பன், பச்சமுத்து என தங்கள் வாரிசுகளுக்குப் பெயர் சூட்டுகின்றனர். பச்சையம்மன் கோயில்களில் வாழ்முனி, செம்முனி, கருமுனி போன்ற வித்தியாசமான பெயர்களில் பெரிய சுதை உருவங்களாக முனிவர்களது சிலைகள் காணப்படுகின்றன. மன்னாதன், மன்னார்சாமி, மன்னதீஸ்வரன் என்ற பெயர்களில் சிவனுக்கு தனிச் சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களில் லிங்க வடிவிலும் முழு உருவமாகவும் இறைவன் வணங்கப்படுகிறார். அம்மனும் முனிகளும் மட்டும் உள்ள கோயில்களும் உண்டு.
சிதம்பரத்திற்கு அப்பால் உள்ள தலங்களில் பெரும்பாலும் பச்சையம்மன், தனது நிழலிலிருந்து உருவான காத்தாயி அம்மனுடன் சேர்ந்து அருளும் வகையில் கோயில்கள் அமைக்கப்படுகிறது. செங்கல்பட்டு ஞானகிரி பச்சையம்மன் குறித்து சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலில் பச்சையம்மன் வரலாறு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சையம்மன் குறித்து வரிவான நூல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போதைய பச்சையம்மன் வரலாறு கைலாயம் தொடங்கி காஞ்சிபுரம் வந்து செய்யாறு சென்று திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையன்று ஈசனுடன் இணையும் விழாவாக ஆகி மீண்டும் யோக நிலையில் பல்வேறு தலங்களில் அருளுவதாக உள்ளது. கயிலையில் ஒருநாள் சிவனும் பார்வதியும் தனிமையில் உலக இயக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இடையே, அனைத்து உயிர்களுக்கும் படியளக்கச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்ட ஈசனை, சோதிக்க விரும்பிய உமாதேவி, சிறிய சிமிழுக்குள் ஓர் எறும்பைப் பிடித்து மூடி எவருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டாள். படியளக்கும் பணி முடிந்து திரும்பினார் சிவன். அவரிடம் மென்சிரிப்போடு, போன காரியங்கள் முடிந்ததா? படியளந்தாயிற்றா? எதுவும் மிச்சமில்லையே? யோசித்துச் சொல்லுங்கள் எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டாள் உமையவள்.
சிவனார் சிரித்துவிட்டு, இல்லை. எதுவும் மிச்சமில்லை! என பதிலளித்தார். அதைக்கேட்ட பார்வதி குறும்பாகச் சிரித்துவிட்டு, தன் பாதுகாப்பிலிருந்த சிமிழைத் திறக்க அதனுள் இருந்த எறும்பு அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஓர் அரிசியைக் கவ்வித் தின்று கொண்டிருந்ததைக் கண்டு திகைத்தாள். சிவன், என்னை சோதிக்க ஒரு பாவமும் செய்யாத ஒரு சிற்றெறும்புதான் கிடைத்ததா? இந்தச் சின்ன எறும்பை சிறை வைத்த பாவச்செயல் உன் பாவக்கணக்கில் சேர்ந்திருக்கிறதே! அதற்குக் கழுவாயாக என்ன செய்யப் போகிறாய்? எனக் கேட்க, மனம் கலங்கினாள், மகேஸ்வரி. வேறொரு நாள். அதிகாலை. கயிலையில் சிவன் முனிவர்களுக்கு ஞானத்தை நயன தீட்சையால் உபதேசித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு வந்த பார்வதி சூழலின் மௌனத்தை உணராமல் ஈசனின் கண்களை மெலிதாகப் பொத்தினாள். ஈசனின் கண்களை மூடியதால் அதிலிருந்து ஒளி பெற்றுக்கொண்டிருந்த சூரிய சந்திரர்கள் இருண்டார்கள். உலகம் இருண்டது. நயன தீட்சை தடைப்பட்டதால் முனிவர்களும் உணர்வற்று மயங்கி வீழ்ந்தனர்.
உலக இயக்கம் தொடர வேண்டி ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். உலகம் அதிக வெப்பத்தில் தகித்தது. நிலையை உணர்ந்த அம்பிகையின் கரங்களில் இருந்து வியர்வை பொங்கி வழிந்து பாகிரதி என்னும் கங்கை நதியாக பிரவகித்தது. தன் கைகளை விலக்கிக்கொண்டு சிவனை நடுக்கத்துடன் வணங்கி நின்றாள். சிவன் மூன்றாவது கண்ணை மூடிக்கொண்டு இரு கண்களையும் திறந்தார். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பார்வதி பயந்து சிவனிடம் அறியாது செய்த செயலை மன்னிக்கக் கேட்டாள். பாவங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் அதற்குரிய கழுவாய் தேடிப் போக்கத்தான் வேண்டும். உரிய காலம் வரும் வரை காத்திரு. பின்னர் பாவங்களுக்கு உரிய நிவர்த்தியைக் கழுவாயாகச் செய்து பாவம் போக்கு என இமவான் மகளிடம் எடுத்துரைத்தார் ஈசன். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஒரு சமயம் அவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றார். அதனால் வருந்திய ஈஸ்வரி, ஐயனே! இதென்ன நியாயம்? எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மைப் பிரித்து வணங்கலாமா? அவர் மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்குத் தரவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினாள்.
தவம் செய்தால் தருவதாகச் சொன்னார் இறைவன். உடனே பூவுலகு வந்தாள். இங்கே இமயம் தொடங்கி குமரி வரை உள்ள அனைத்து சிவதல தீர்த்தங்களிலும் நீராடி அதன் பின்னர் தவம் செய்து பலன் பெற விரும்பினாள். அவளது தோழியரான அறுபத்து நான்கு யோகினியரும் அவளுடன் வந்தார்கள். அப்படி தல தரிசனம் செய்தவாறே கேதாரம், காசி முடித்து உஜ்ஜயினி வந்தாள் அம்பிகை. அந்நகரை அக்னி வீரன், ஆகாச வீரன் உள்ளிட்ட ஏழு சகோதரர்கள் ஆண்டு வந்தனர். கொடுங்கோலர்களான அவர்கள், திரிலோக சுந்தரியான உமாதேவியைக் கண்டார்கள். தீய எண்ணத்தோடு அவளை அணுகினார்கள். தவக்கோலம் பூண இருந்ததால் சினத்தை வெளிப்படுத்தாமல், சிவனைத் துதித்தாள் அம்பிகை. சிவனாரது கூற்றின்படி திருமால், பிரும்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் முதலானோர் தேவிக்குப் பக்க துணையாக வந்தனர். தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னிவீரனை, திருமால் வான் அளவு உயர்ந்து அழித்தார். வானளவு உயர்ந்து நின்றதால் வான்முனி எனப்பட்டு வாழ்முனி என பின்னர் அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர். அடுத்து வந்த ஆகாய வீரனை செம்முனி என்னும் அகத்தியர் வென்றார். தொடர்ந்து வந்த ஜலவீரன், சண்ட வீரன், ரணவீரன், கோட்டைவீரன், அந்தவீரன் ஆகியோரை செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி என்ற பெயர்களோடு நாரதர், பராசரர், வியாசர் போன்ற முனிவர்கள் வதைத்தனர்.
முடிவில் அக்னிவீரனின் மகனான வீரமுத்து வெகுண்டெழுந்து போருக்கு வந்தான். வாழ்முனியான திருமால் அவனை சம்ஹாரம் செய்யப்போகும் போது அவன் மனைவி வீராட்சி, விஷ்ணுவின் காலில் விழுந்து தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தரக்கேட்டாள். வாழ்முனி இரக்கப்பட்டு அவனை விடுவித்து அம்பிகையின் கோயில் காவலராக இருக்க உத்தரவிட்டார். அக்னிவீரன், ஆகாசவீரன், ரணவீரன், ரத்தவீரன் ஆகியோரின் உடல்களை பூமிக்குள் புதைந்து தலை மட்டும் தெரியும்வண்ணம் அழுத்தியபடி முனிவர்கள் அமர்ந்தனர். உடல் பாதாளத்திலும் தலை மட்டும் பூலோகத்திலும் இருந்த காரணத்தால் அவர்கள் பாதாள அசுரர்கள் எனப்பட்டனர். பின்னர், தவம் மேற்கொள்ள இருந்த தங்கை பார்வதியிடம், தேவைப்படும் சமயத்தில் எங்களை அழைப்பாயாக தவம் இருக்கும் உனக்கு, வேங்கடமலை நாச்சியார் என்ற மகாலட்சுமி. பூங்குறத்தி நாச்சியாராக சரஸ்வதி, ஆனைக்குறத்தி என்ற இந்திராணி முடியால் அழகி எனப்படும் ரதி, வனக்குறத்தி என்கிற வள்ளி ஆகியோர் துணை இருப்பார்கள்! எனக் கூறிச் சென்றார், திருமால்.
தன் துணை தேவியர்களுடன் உமை காசிமாநகர் சென்று அன்னபூரணியாக இருந்து அறம் செய்து கொண்டிருந்தாள். சிவன் உமையிடம் யோகபூமியான காசியை விட்டு மோகபூமியான காஞ்சி செவ்வாய் எனக்கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு சிவதலமாக சென்று தவம் செய்து பின்னர், காஞ்சியில் காமாட்சியாக அமர்ந்தாள். சிவன் இரு நழி நெல் கொடுத்து தருமத்தைப் பேணிக்காக்கக் கூறினார். அதைக்கொண்டு 32 வகை அறங்களையும் செய்ததோடு தான் தங்கி தவம் செய்து வந்து திசைகளில் எல்லாம் அறம் பெருகும்படி செய்தாள். அவளது பணியில் மகிழ்ந்த சிவபெருமான், அருணைக்கு வந்து பவளப்பாறைக் குன்றில் தவம் செய்து என் உடலில் இடப்பாகம் பெறுக! எனக் கட்டளையிட்டார். அதன்படி திருவண்ணாமலை நோக்கி சென்றாள். வழியில் வெப்பம் தகித்தது. பூஜை செய்யும் நேரமும் நெருங்கியது. தன் குமாரன் குமரனிடம் நீர் கொண்டுவர வேண்டினாள். செவ்வேளும் வேலை செலுத்த, அது அங்கிருந்த சிறு குன்றைத் துளைத்து நின்றது. அங்கிருந்து நீர் பிறீட்டுப் பெருகி ஆறாக ஓடிவந்தது. அது சேயாறு என அழைக்கப்பட்டு செய்யாறு என மாறி வழங்கியது.
வாழைமரங்களைக் கொண்டு பந்தல் அமைத்துக் கொடுத்தான், குமரன். அந்தப்பந்தலில் இருந்து அம்பாள் தியானம் செய்ததால் அந்த இடம் வாழைப்பந்தல் என அழைக்கப்பட்டது. அங்கு சிவதீட்சை பெற்று சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்ய எண்ணினாள். கௌதம முனிவரை நினைக்க அவர் நேரில் தோன்றி சிவதீட்சையும் இரண்டு சிவலிங்களையும் வழங்கினார். ஒன்றை தன் தலையிலே தரித்துக்கொண்டு மற்றொன்றை அங்கேயே நிறுவி பூஜை செய்தாள். கௌதமரும் அம்பிகை செய்த பூஜையில் கலந்துகொண்டு பேரானந்தம் அடைந்த அந்த இடம் வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயில் என வழங்கப்படுகிறது. உமை, சிவனைப் பிரிந்து வந்து தவத்திலிருப்பதால் உலகில் போகமும் குழந்தை பிறப்பதும் குறைந்து விட்டன. அதை சரி செய்ய மனம் கொள்ள வேண்டுமென தேவர்களும் முனிவர்களும் பார்வதியிடம் வேண்டினர். உடனே மகேஸ்வரி, தம் அம்சமும் கங்கையின் அம்சமும் உடைய ஒரு தேவதையை தன் நிழலிலிருந்து தோற்றுவித்தாள். அவள் கந்தனை மடியில் அமர்த்திக் கொண்டவளாக கந்தனின் ஆயியாகத் தோன்றினாள். அவளுக்கு காத்தாயி என்ற பெயரையும் சூட்டி அவளையும் தன் குழுவிலேயே சேர்த்துக்கொண்டாள். வாழைப்பந்தலில் தன் தவத்தை முடித்துக் கொண்டு திருவண்ணாமலை பவழப்பாறைக் குன்றில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். தோழிகள் அனைவரும் சுற்றி நிற்க, திருமால், அகத்தியர், பராசரர், வியாசர், நாரதர் முதலானோர் முனிக்கூட்டங்களாக அமர்ந்தனர். தேவேந்திரன் யானை, குதிரை முதலியவற்றினைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
தவத்தின் உச்சமாக கார்த்திகை மாதத் தீபத் திருநாளில் அவன் முன் தோன்றி இடப்பாகத்தில் இடம் தந்து அருளினார், ஈசன். இருவரும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தனர். மாலையில் சந்தியாநடனம் என்னும் ஆனந்த நடனம் ஆடினர். அனைத்து தேவர்களும் அந்த சந்தியா தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு குளிர்ந்தனர். பின்னர் சிவனும் உமையும் பழைய வடிவு கொண்டனர். திருவண்ணாமலையில் ஒளிப்பிழம்பாக பரணி தீபத்தில் இணைந்து இறைவிக்கு இடப்பாகம் அருளுவதும் அந்தி சாயும் நேரத்தில் சந்தியா நடனமாடுவதும், எங்கும் ஒளிவெள்ளமாக உருவெடுப்பதும் கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. தேவர்கள் சிவசக்தியாரிடம் உங்கள் திருமணக் கோலத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமெனக் கேட்டனர். உமை கயிலையிலிருந்து இப்புவி மேல் வந்து தவம் செய்த யோக கன்னியாகவே கோயில் கொள்ள விரும்புகிறேன். எனவே வள்ளி -குமரனின் திருமணம் எம் வரலாற்றோடு சேர்ந்தே நிகழ்வுறும் எனச் சொன்னாள். அதன்படி அவர்கள் திருமணம் நடைபெற்றது. சிவன், உமையிடம் நீ எம்மைக் குறித்து தவம் இருந்த இடங்கள் எல்லாம் உன் பெயரால் பச்சையம்மன் தலங்கள் என சிறக்கட்டும் என அருளினார். இந்த தலங்களே பின்னாளில் பச்சையம்மன் கோயில்களாக அமைந்தன.
No comments:
Post a Comment