Monday, May 8, 2023

பல கோவில்களுக்குத் தானமும், பல கோவில்களை புனரமைத்தும் பல கோவில்களை புதிதாக எழுப்பியும்,இறையருள் பெற்ற இந்த மாதரசி வரலாற்றில் அறிமுகமாகும் நாள்..கி.பி. 941.

சோழப் பெருந்தகை செம்பியன் மாதேவியார்
பிறந்த தினம் இன்று...

சித்திரை மாதத்து திருக்கேட்டை நட்சத்திரம்..
இவ்வுலகில் ஒவ்வொறு உயிரும்  ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் படைக்கப்படுகிறது.
தனது பிறப்பின் நோக்கம் என்னவென்று அறியாமலேயே பலரது வாழ்வு முடிந்து போகிறது.

இருந்தும்..
தன் பிறப்பின் நோக்கம் என்னவென்று அறிந்து, அதை முழுவதும் நிறைவேற்றும் பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கும்.

அந்த பாக்கியம் முழுமையாகக் கிடைக்கப்பெற்ற ஒருவர்தான்  செம்பியன் மாதேவி என்னும் வரலாறு போற்றும் ஒரு உன்னத மாதரசி.

பழுதுற்ற கோவில்களை புனரமைப்பதும், இருட்டிலேயே இருக்கும் இறைவனுக்கு விளக்கேற்றுவதும், புதிய கோவில்களைக் கட்டுவதும்,
இவைகளையே தன் பிறப்பின் நோக்கமாக கொண்டவர். அந்த நோக்கத்தை செம்மையாக நிறைவேற்றியவர்.

பல கோவில்களுக்குத் தானமும்,  பல கோவில்களை புனரமைத்தும்  பல கோவில்களை புதிதாக எழுப்பியும்,
இறையருள் பெற்ற இந்த மாதரசி வரலாற்றில் அறிமுகமாகும் நாள்..
கி.பி. 941.

முதலாம்  பராந்தகனின்
 34 ஆம் ஆட்சியாண்டில், கண்டாராதித்தரின் தேவியாக அறிமுகமாகிறார்.

இவரது கடைசிக் கல்வெட்டு சாசனம் 
கி.பி.1001. திருவக்கரை கோவிலை கற்றளியாக்கினார்.

941 - 1001..
அறுபது ஆண்டு காலம்.

ஏறக்குறைய ஏழு சோழ பேரரசர்களின் காலத்தில் வாழ்ந்தவர். 

பராந்தகர், கண்டாராதித்தர், அரிஞ்சயர், சுந்தரர் ஆதித்த கரிகாலன், உத்தமச்சோழர்,
 இராஜராஜ சோழர்.என்ற ஏழு சோழப் பேரரசர்களின் காலத்தில் வாழ்ந்தவர்.

தன் வாழ்நாள் முழுவதும்
கோவில் கட்டுவதையும், பழுதுற்ற கோவில்களை புனரமைப்பதையும் தம் பிறப்பின் நோக்கமாக கொண்ட மாபெரும் 
மாதரசி இவர்.

இவரது  முதல் வரலாற்று சாசனம்.

மதுரைகொண்ட கோப்பரகேசரியின் 
34ஆம்  ஆட்சியாண்டில்,  கண்டாராதித்தர் தேவியார் மழபெருமான் மகளார் பிராந்தகன் மாதேவடிகளார்
திருக்கற்குடி மகாதேவர்க்கு சந்திராதித்தர் உள்ளவரை திருவிளக்கு ஒன்றுக்கு 90 ஆடுகள் நிவந்தம் தருகிறார்.

முதல் நிவந்தம்.. திருக்கற்குடி இறைவனின் முழு ஆசிர்வாதமும் அம்மையாருக்கு கிட்டியது.

இதன் பிறகு..

இருட்டிலிருந்த பல கோவில்களுக்கு வெளிச்சம் கிட்டியது.. செங்கல் தளிகள் கற்றளிகளாயின. புதிய கோவில்கள்  கற்றளிகளாக எழும்பின.. இவர் எழுப்பிய ஆலயங்கள் செம்பியன் மாதேவி கலைப்பாணி என்று தனித்தன்மையுடன் இருந்தன.

பொதுவாக ஆலயங்களில் இரண்டு அல்லது மூன்று தேவகோட்டங்கள் இருப்பது வழக்கம். மாதேவியார் இந்த தேவ கோட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி சிவபெருமானின் அழகியத் திருக்கோலங்களை சிற்பங்களாக வடித்தார். இவர் காலத்தில் 8 முதல் 16 தேவகோட்டங்கள் வரை அமைக்கப்பட்டன.

ஏராளமான கோவில்களில் இவரது புனரமைப்புப் பணி தொடர்ந்து நடந்தது.

பழுதுற்று, பராமரிப்பின்றி, இருட்டில் இருந்த ஆலய இறைவர்கள்  இம்மாதரசியின் பார்வை தங்கள் மீது விழாதா என்று ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

பழுதுற்ற செங்கற் கோவில்களை முழுமையாகப் பிரித்து கற்கோவிலாக எழிலாகக் கட்டினார். முன்பு இருந்த கல்வெட்டுச் சாசனங்களை படியெடுத்து மீண்டும் புதிதாகக் கட்டியக் கோவிலில் பொறித்தார்.

கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம். இவ்வூரில் செம்பியன் மாதேவியார் தனது கணவர் கண்டராதித்தர் பெயரில் கண்டராதித்தம் என்னும் ஒரு கோவில் எழுப்புகிறார். தனது மைந்தன் உத்தமச்சோழரின் 
3 ஆம் ஆட்சியாண்டில்.
கி.பி. 974. இதுதான் மாதேவியார் திருப்பணி செய்த முதல் கோவிலாகும்.

 கோவிலின் தென்புறச்சுவற்றில் ஒரு சிற்பமும் அதன் கீழ் ஒரு கல்வெட்டும் உள்ளது.

கல்வெட்டின் வாசகம்..

" ஸ்ரீகண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருள்வித்து இத்திருக்கற்றளியிலே திருநல்லமுடையாரைத் திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீகண்டராதித்த தேவர் இவர்... "

திருநல்லம் கோவிலை எடுத்து இறைவனை வணங்கும் தோற்றத்தில் தனது கணவர் கண்டராதித்தரை காட்சிப்படுத்தினார்..

இச்சிற்பத்தில்.
லிங்கத்திற்கு சிவாச்சாரியார் ஒருவர் ஆடை சுற்ற, லிங்கத்தின் எதிரே கால்களை மடித்து அமர்ந்து வணங்குகிறார் கண்டராதித்தர்.
அவருக்கு பின்னே செம்பியன் மாதேவியார்..

இதே திருநல்லம் கோவிலில் மாதேவியார் பிறந்த தினமான திருக் கேட்டை நட்சத்திரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றும் பதிவாகியுள்ளது.

"ஸ்ரீ மதுராந்தகத் தேவரான உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பிராட்டியார் செம்பியன்மாதேவியார் திருநக்ஷத்திரமான திருக்கேட்டைதோறும் பெரும்பலி எழுந்தருள ஓராட்டைக்கு வேண்டும் நெல்லு எழுபதின் கலத்துக்குத் திருத்துருத்தி திருநல்லத்தில் ஒன்பதின்மா முந்திரிகைக்கீழ்"

இக்கோவிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மாதேவியாரின்  செப்புப்படிமம் ஒன்று எடுக்கப்பட்டது..

 நாகை மாவட்டம் - செம்பியன் மாதேவி என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் ஆலயம் இம்மாதரசியால்
எடுக்கப்பட்டது.. இவ்வாலயத்தில் முதலாம் இராஜேந்திரன் இவ்வம்மையை கற்படிமமாக எடுத்துள்ளார்.. எந்த நேரமும் கோவில் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும் அம்மையின் தோற்றம். கூப்பியக் கரங்களுக்குள் காசுகள் அடங்கிய சுருக்குப் பையுடன் காட்சி தருகிறார்..

இக்கோவிலில் இவரது மருமகள்கள் ஐவர் ஒன்று சேர்ந்து மாதேவியாரின் பிறந்த நாளான சித்திரை - கேட்டை நட்சத்திர நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.

கல்வெட்டு வாசகம்.

" பிராட்டியார் திருநாளான சித்திரை திருக்கேட்டை நாள் "

அம்மையார் திருப்பணியால் 
செங்கற் கோவில்கள்  கற்றளியாக மாற்றப்பட்டவை.

1.கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோவில் ( கி.பி.974) 

2 ஆனாங்கூர் திருகத்தீஸ்வர் கோவில்.
 ( கி.பி.980)

3. திருக்கோடிக்காவல்
  (981)

4.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர்
(982)

5.செம்பியன் மாதேவி.கைலாசநாதர் கோவில்.( கி.பி.985) 

6.ஆடுதுறை.
( கி.பி.986)

7.திருவாரூர்.
 திருவரநெறி ஆழ்வார் கோவில்.( 987,  992)

8. திருமணஞ்சேரி.
 ( கி.பி.987)

9.குத்தாலம் ( 992)

10. திருவக்கரை.
 ( கி.பி.1001)

மேற்கண்ட கோவில்கள் அனைத்தும் அம்மையாரின் தனித்துவமான கற்றளிகளாகும்.

மேலும் ..
ஏராளமான கோவில்களுக்கு தானம் அளித்தும் பணி செய்தும்  கோவில்களை நிர்வகித்தும்  வழிபாடுகளை சிறப்புறச் செய்தும்  மற்றும் பல சமூக அறப்பணிகள் செய்தும்  சிறப்புற்றார்.

ஆலயப்பணியையும்.
அறப்பணியையும்..
தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட செம்பியன் மாதேவியாரின் பிறந்த தினம் இன்று..

நினைவு கூர்வோம்..

அன்புடன்..
வரலாற்று நோக்கில் தமிழ்

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...