Wednesday, June 28, 2023

ஶ்ரீசக்கரத்தாழ்வார் ஜெயந்தி சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதம்.

ஶ்ரீசக்கரத்தாழ்வார்  ஜெயந்தி சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதம். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.
       
ஆனிமாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், 
ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. திருமாலின்  திருக்கரத்தில் இருக்கும் 

சக்ரத்தாழ்வார் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

*சுதர்சன சக்கரம்*

சுதர்சன சக்கரத்தைத் தன் கரத்தில்  வைத்திருப்பார் ஶ்ரீகிருஷ்ணர்.  சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது என்று பொருள்.  சக்ரா    என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். 

எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.
சாதாரணமாக ‘சுதர்சன சக்கரம்’ கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால்   மகாவிஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
      
எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மீண்டும் இறைவனின் கரத்திற்கே திரும்பி விடுகிறது.
 
சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.  ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.  
         
சுதர்சன சக்கரம் சுழலும் போது  சத்தம் எழுப்புவதில்லை.   சுதர்சன சக்கரத்தின்  உருவம் வடிவம் எத்தகையது என்றால்  சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.  
       மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, துயர்களிலிருந்து  மக்களைக் காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம். இந்தச் சக்கரம், சிவபெருமானின்  ருத்ர சக்தியையும்  தன்னுள் கொண்டுள்ளது.
     கிருஷ்ணரின் கையிலிருந்த சுதர்சன சக்கரம், , அர்ஜுனனை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணை நின்றது. மகா சுதர்சனத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும்,  ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுகின்றனர்.  திருமாலின் ஆக்ரோஷமான  ஸ்ரீசுதர்சன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சுதர்சன சக்கரம் வீரம் அளிக்கும்,  தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான  எதிரிகளையும் நீக்கி மங்கலம் அருளும் . 
         சக்கரத்தாழ்வாரை  #திருவாழியாழ்வான்  என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு”ஹேதிராஜன்” என்ற திருநாமமும் உண்டு. 
"வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று பல்லாண்டு பாடி  வாழ்த்துகிறார்!  பெரியாழ்வார். மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு ” என்று குறிப்பிடுகிறார் . ஆண்டாள் நாச்சியார்  தன்னுடைய திருப்பாவையில் ,”சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் “என்றே பெருமாளைப் போற்றுகிறார்.
சக்கரத்தாழ்வாரின்  அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார்”. நம்மாழ்வாரோ "சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.
       ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் "நித்யசூரிகள்" ஆவார்கள். திருமால்,  தனது  எல்லா அவதாரங்களிலும் துஷ்ட நிக்ரஹத்தை   ஶ்ரீசுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார்;  உலக இயக்கத்திற்கே ஆதாரம்  ஶ்ரீசுதர்ஸனமே.
        சுதர்சன சக்கரம் பக்தர்களுக்கு சந்தோஷம் தரும்.  பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷங்கள் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி கல்வி யோகத்தைத் தருபவர்
          சுதர்சன யந்திரம் உள்ள இடத்தில் தீய எண்ணங்களோ, சக்திகளோ புக முடியாது நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது,  சுதர்சன உபாசனை செய்வது சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் 
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் ஶ்ரீசக்கரத்தாழ்வார்.
            ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, பணவிரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும்.
       மகாவிஷ்ணுவின் கையிலிருக்கும் சுதர்சன சக்கரத்தை வணங்கி வர அவரது கருணை நமக்குக் கிடைக்கும். 
சுகாரத்தாழ்வாரை வணங்கி வர நமது  சகல பாபங்களும், மனக் கவலைகளும்,  வியாதிகளும் இல்லாமல் போய்விடும்; பயிரை நாசம் செய்யும் பிராணிகளின் தொல்லைகளும்    இல்லாமல் போய்விடும்;  எதிரிகள் இருக்க மாட்டார்கள்;  நண்பர்கள் நட்புடன் இருப்பார்கள்; நெருங்கியவர்கள் நன்மை செய்வார்கள்; உறவினர்கள்  கனிவுடன் இருப்பார்கள்;  நல்லவர்கள் எப்பொழுதும் நன்மையையே  செய்வார்கள்;  ஐஸ்வரியம் என்றென்றும் பெருகும்! என்பதும் உறுதி. 

ஶ்ரீசக்ரதாழ்வாரே போற்றி
 
ஓம் நமோநாராயணா, ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.....

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...