*தினம் ஒரு திருத்தலம்*:
கர்ப்பவதி கோலத்தில் சீதை.
பக்தவச்சலர்.
அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்.
இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு என்னும் ஊரில் அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கோயம்பேடு உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சநேயரும், லட்சுமணரும் இருப்பர். ஆனால், இக்கோயிலில் ராமர், சீதை இருவர் மட்டுமே இருக்கின்றனர்.
இத்தலத்தில் ராமபிரான் அரச கோலத்தில் இல்லாமல் "மரவுரி தரித்த" கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.
இக்கோயிலில் சீதை கர்ப்பவதி கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
இத்தல உற்சவர் பக்தவச்சலர் ஆவார். இவர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலது கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு "பக்தவச்சலர்" என்ற பெயர் வந்தது.
வேறென்ன சிறப்பு?
லவகுசர்கள் "கோ" எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்" என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம்பேடு" என பெயர் பெற்றது.
ஆஞ்சநேயருக்கு இங்கு தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் சீதையின் மனக்கண்ணில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு, "ராகவபுரம்" என்ற பெயரும் உண்டு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆனியில் பிரம்மோற்சவம், ஆடியில் விகனஸர் உற்சவம், பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணமான பெண்கள் அறிவான ஆண் குழந்தைகள் பிறக்க பிரார்த்தனை செய்கின்றனர்.
திருமணதோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்குள்ள பார்வதி சுயம்வர விருட்சத்திற்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, தாயார் மற்றும் சீதைக்கு வஸ்திரம் சாற்றியும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
No comments:
Post a Comment