சிவாயநம...
உலகம் புகழும் நூல்🌷🌷
உத்தரகோச மங்கை என்னும் தலத்தில் சிவபெருமான் ஆயிரம் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர், ""முனிவர்களே... என் சிறந்த பக்தை "ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரி' என்னை அழைக்கின்றாள்.
நான் இலங்கை செல்கிறேன். இலங்கையை நான் அடைந்தவுடன், இந்தக் குளத்தில் ஒரு ஜோதி தோன்றும்.
நான் திரும்ப வரும் வரை "இந்த சிவாகம நூலை பத்திரமாக வைத்திருங்கள்' என்று முனிவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
சிறிது நேரம் சென்ற பின் அவர் சொன்னபடியே "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படும் அந்தக் குளத்தில் ஒரு பெரும் ஜோதி எழுந்தது.
அந்த ஜோதி கண்ணுக்கு இனியதாக,தேன் மணம் கமழ்வதாக, வெப்பமே வீசாத ஒரு அதி அற்புத ஜோதியாகத் திகழ்ந்தது.
வசீகரமான அந்த ஜோதியில் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் ஒவ்வொருவராக அந்த ஜோதியில் கலந்து வீடு பெற்றனர்.
கடைசியில் கலக்க இருக்கும் ஒரு முனிவர், அடுத்திருந்த ஒரு இளைய முனிவரிடம் ""அப்பனே... இது இறைவன் அருளிய சிவாகமம்; இலங்கை சென்ற அவர் திரும்ப இங்கு வருவார்; அவரிடம் சேர்த்துவிடு'' என்று கூறி அவரும் ஜோதியில் கலந்துவிட்டார்.
ஆண்டுகள் பல சென்றுவிட்டன. வண்டோதரியின் பக்தி வெள்ளத்தில் தன்னை மறந்த பெருமான், அவளுக்கு அருள் புரிந்து மீண்டும் உத்தரகோசமங்கை வந்தார்.
அக்னிதீர்த்தக் கரையில் இளம் முனிவர் ஒருவர் மட்டும் "சிவாகம' நூல் வைத்திருப்பதைப் பார்த்தார்.
அனைத்தையும் உணர்ந்த சிவபெருமான் அந்த இளம் முனிவரை அன்புடன் தழுவி,
""கடமை தவறாமல் காத்திருந்து என் வாக்கைக் காப்பாற்றிய நீ அடுத்த பிறவியில் பாண்டிநாட்டில் அவதரித்து உலகமே புகழும் ஒரு தோத்திர நூல் தருவாய்'' என்று ஆசிகள் மொழிந்து மறைந்தார்.
அந்த இளம் முனிவரே மாணிக்கவாசகராகத் தோன்றி மாநிலம் புகழும் திருவாசகம் அருளியவர். அவர் திருக்கையில் தவழும் நூல் சிவாகமம்.
திருச்சிற்றம்பலம்.🌹🌿
No comments:
Post a Comment