பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர் ...
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும்.
மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார்.
அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது.
துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.
கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது.
அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.
அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது.
அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது.
இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.
இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர்.
இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார்.
பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார். அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது.
குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று.
தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.
No comments:
Post a Comment