Friday, June 23, 2023

இன்று #ஆனி_மகம் நட்சத்திரத்தில்,பூலோக கைலாயமாம் #சிதம்பரம்

இன்று 
#ஆனி_மகம் நட்சத்திரத்தில்,
பூலோக கைலாயமாம் 
#சிதம்பரம் என்னும் 
தில்லையிலே
அம்பலக்கூத்தன் #நடராஜப்பெருமானோடு
இரண்டறக்கலந்த,
சைவ சமயக்குரவர்கள் நால்வரில் முக்கியமானவரான,சிவபெருமானால் ஆட்க்கொள்ளப்பட்டு திருவடி தீட்சை பெற்று ,
சைவ வேதம் #திருவாசகம் தந்த பெருவள்ளல் 
#எம்பிரான்_மாணிக்கவாசகர் 
முக்தி நாள் (குருபூஜை) இன்று:

திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன், அருள்வாசகர், மாணிக்கவாசகர், என்ற  சிறப்புகளைப் பெற்று தமிழுக்குத் திருவாசகத்தைத் தந்து தெய்விகத் தமிழை உலகறியச் செய்த மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்த நாள் இன்று. ஆம், ஆனி மகம்  தில்லையில் இறைவனுடன் நேரடியாகக் கலந்து மாணிக்கவாசகர் முக்தி பெற்ற நாள்!

காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர்.

சைவத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8,000 பதிகப் பாடல்கள் ஆகும். இதன் தொடர்ச்சியாக அந்தக் காலகட்டத்திற்கு முன்பே மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.

சிவபக்தர்கள் பலரது வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல்  திருவாசகம்! அந்த மாபெரும் பொக்கிஷத்தை, நமக்கெல்லாம் தந்து அருளியவர்  சைவ சமயக் குரவர்கள், நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஆவார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட, பெரும் நூல்களுள் முதலாவது  திருவாசகம், மற்றொன்று திருக்கோவையார் என்பதாகும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே இந்த இரண்டு நூல்கள்.

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.

மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.

இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான ஜி. யு. போப் இதற்குத் தக்க சான்றாவார். "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

#மாணிக்கவாசகர் வரலாற்றுச் சுருக்கம்:

மதுரை மாநகரத்திலிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர்.

அன்றைய தென்னாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அவ்வூரில் அவதரித்தார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து, அம்மகனார்க்கு ``திருவாதவூரார்`` என்று பெயரிட்டனர்.

பதினாறு வயதளவில், வாதவூரார் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக்கத்தையும், அறிவுத் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்றான்.

அரிமர்த்தன பாண்டியன், அவரைத் தனது அவைக்கு அழைத்து, அளவளாவி அவரது அறிவுத்திறனைக் கண்டு வியந்து, ``தென்னவன் பிரம்மராயன்`` என்னும் பட்டம் சூட்டினான். அத்தோடு தனது முதன் அமைச்சராக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும், இறைவனுடைய செயலாக எண்ணி, அதனை ஏற்றுக்கொண்டார்.

வாதவூராரும், அரிமர்த்தன பாண்டியனுக்கு விசுவாசமாக இருந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியில்  சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆயினும் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சியடையவில்லை.

உலக வாழ்வும், வாழ்வில் காணும் பெரும் போகமும், நிலையற்றவை என்றறிந்தமையால், அப்பதவியை அவர் பெரிதாக நினைக்கவில்லை. 

ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை, இவருக்குள் இருந்தது. பிறவிப் பெரும் பயனை, அடைதற்குரிய வழி என்ன, என்பதிலேயே இவருடைய சிந்தனை இருந்தது.

#நரியைப்_பரியாக்கியது:

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.

மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார்.

அவ்வூரை அணுக அணுக, அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை, குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே, இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.

அந்த சமயம் சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது, அவர் செவிகளில் கேட்டது.  அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில், கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில், சீடர்கள் சிலரோடு, சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார்.

வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும், கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள், அந்தக் குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பற்றறுக்கும் ஆசானாக, அந்தக் குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத்திருக்கை, சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம், ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள், திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு வீற்றிருந்த, குருநாதரைக் கண்ட வாதவூரார், தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர், இவரேயென்று எண்ணினார். 

காந்தம் கண்ட இரும்பு போல, மணிவாசகர் மனம், குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில், விரைந்து அருகிற் சென்ற வாதவூரார், அடியற்ற மரம் போல, அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்து, அய்யனே !  எளியேனை ஆட்கொண்டருளுக, என வேண்டி நின்றார். 

 குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அன்று)

'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

மணிக்கவாசகர் குருநாதரை வணங்கி, `என்னை ஆட்கொண்டபோதே, என்னுயிரும் உடைமையும் தங்கட்குரியவாயின. ஆதலால், அடியேன் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு அருளல் வேண்டும்` என்று கூறினார். குருநாதரும் அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாணையிட்டார்.

மணிக்கவாசகர் அப்பொருள்களைக்கொண்டு, திருப்பெருந்துறையில் மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு, மாகேசுவர பூசை நிகழ்த்தினார்.

இவ்வாறு, அரசன் குதிரை வாங்குவதற்கு, தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும், சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. அமைச்சரின் வேறுபட்ட நிலையை, உடன் வந்தவர்கள் கண்டு மாணிக்கவாசகரிடம், `குதிரை கொண்டு மதுரை செல்ல வேண்டுமே என்று தாங்கள் வந்த வேலையினை  நினைவூட்டினர். 

தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய், இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பணியாளர்கள், மதுரைக்குச் சென்று, பாண்டியனிடம் நடந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.

'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர். 

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனைத் தஞ்சம் அடைந்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று, சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றிக் கொடுமைப்படுத்தினர்.

வாதவூரார், இறைவன் திருவருளை நினைந்து, எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று கூறி வருந்தி நின்றார்.

வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான், வைகையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். 

#வைகை_வெள்ளமும் வந்தியும்:

சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருத்தி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா ? என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய்க் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். 

அமைச்சர் பதவியைத் துறந்து தவ வேடம் தாங்கிய மாணிக்கவாசகர் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய் திருப் பெருந்துறையை அடைந்தார்.

மீண்டும் தன் குருநாதரை அடைந்த மாணிக்கவாசகர் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த  சிவ பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதை சீடர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு அருளாசி வழங்கி சென்றார்.  

அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல், பெரிதும் வருந்தினர். அதனைக் கண்ட குருநாதர் “இக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் இக்கோயில் திருக்குளத்தில் தீப் பிழம்பு ஒன்று தோன்றும். அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்” என்று திருவாய் மலர்ந்தார். 

தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும், அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

அவரைக்கண்ட குருநாதர்  `நீ எம்மைப் பின்தொடர்ந்து வருதல் வேண்டாம். உத்தரகோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று, அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக்கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர், தில்லை அடைவாயாக` என்று கூறிச்சென்றார்.

மணிவாசகரும் அவ்வாறே திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின் கீழ், ஒரு தெய்வீகப் பீடம் அமைத்து, அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து, அடியார்களோடு தாமும் வழிபட்டு வந்தார்.

#தலயாத்திரை:

 மாணிக்கவாசகர், திருவருளில் திளைத்து வாழும் நாள்களில், நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல், அற்புதப் பத்து, அதிசயப்பத்து,  குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப் பத்து,  செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம்,  திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி பாடினார்.

அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்களைத்  “திருப்பள்ளி எழுச்சி” பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.

அடியார் கூட்டத்துடன், பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும், ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு அதில் மூழ்கினர். பெருமான், அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருட்காட்சி வழங்கியருளினார்.

அடியார்கள் அனைவரும் அதில் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர் இவ்வேளையில் கொன்றை மர நிழலில், சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சியை, யோகக் காட்சியில் அறிந்த அடிகள், அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த, குருநாதரின் திருவடிப் பீடத்தை, பற்றிக் கொண்டு அழுதார். திருச்சதகம் என்னும் பாமாலையால், இறைவன் திருவருளைத் தோத்திரித்தார்.

பின்னர், குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம், திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று, அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி, நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் தோத்திரம் செய்தார். அப்போது, இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்கு பல சித்திகளும் கைவரப் பெற்றார்.

பின்னர், பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கடந்து சோழவள நாட்டைச் சேர்ந்த திருவிடைமருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந்தருளியுள்ள இறைவன் அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூரை அடைந்தார். அங்கு  புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கி திருப்புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார்.

அதன் பின்னர், சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து, பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து, திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள், அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.

அண்ணாமலையில் தங்கியிருந்தபோது, மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில், கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து, வீடுகள்தோறும் சென்று, ஒருவரையொருவர் துயிலெழுப்பிக் கொண்டு, நீராடி வழிபாடு செய்வதைக் கண்டார். அவர்கள் வாய் மொழியாகவே வைத்து, திருவெம்பாவையை மாணிக்கவாசகர் பாடினார்.

திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடிப் பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.

திருவண்ணாமலை கிரிவலம் வரும்போது அடி அண்ணாமலை செல்லும் முன்பு மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய சன்னதி சாலையின் முன்பே இருக்கும். போனால் ஒரு நிமிடம் அமைதியாக உணருங்கள்.

அதேபோல திருவண்ணாமலை பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு, அவர்கள் பாடுவதாக வைத்து, திருவம்மானையையும் அருளினார்.

இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.

அண்ணாமலைக்கு அடுத்து காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவ்வூர் இறைவனைத் தரிசித்து திருக்கழுக்குன்றம் அடைந்தார். திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறையில், அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, திருத்தில்லையின் எல்லையை அடைந்து, அத் திருத்தலத்தைத் தரிசித்தார். தில்லை, சிவ லோகம் போலக் காட்சியளித்தது. 

அந்நகரையடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருக் கோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி வலமாகச் சிற்சபையில் எழுந்தருளியிருக்கும், ஆனந்த நடராசப் பெருமானை உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளிக் காட்சி கொடுத்த இறைவனை, தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து பேரானந்தம் கொண்டார்.  ஆனந்தக் கண்ணீர் பெருக, கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். 

#இறைவன்_திருவாசகம் கேட்டு எழுதியது:

சிதம்பரத்தில் இப்படியாக  மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள்களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து, தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி, மணிவாசகர் பல தருணங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். 
அந்தணரும் தம் திருக்கரத்தால் அவற்றை எழுதி முடித்தார். “பாவை பாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக” என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம்   வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார்.

பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதனைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருவருளை எண்ணி மகிழ்ந்தார்.

 திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தின் வாயிற்படியிலே வைத்தருளினார்.

காலையில் இறைவனைப் பூசை செய்ய வந்த அர்ச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக் கண்டு அதனையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர்வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார்.

 அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார்.

திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரார் அதனைக் கேட்டு திருவருளை எண்ணி வணங்கினார்.

 முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மணிவாசகர் இதன் பொருளை தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார்.

அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந்தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவான்” என்று சுட்டிக் காட்டி அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார்.
 
ஆனி மகத்தன்று இறைவனோடு இரண்டற கலந்தார்.  இவ்வற்புத நிகழ்ச்சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர்.

நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலேயே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து, அவரை ஆட்கொண்டருளினார்.

32 ஆண்டுகளே வாழ்ந்த பெருமான் ஞானநெறி மூலம் பக்தியும், இறைமார்க்கத்தையும் காட்டியருளினார்.

#வாழ்ந்த_காலகட்டம்:

சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை நூலில் மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர் எனலாம். இவற்றால் இவரது காலத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர். 

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை நிலைநாட்டுவதற்கு, பல்வேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும், கடைச் சங்க காலத்திற்குப் பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில், ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம், என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளை, தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து, தருமை ஆதீன திருவாசக நூல் வெளியீட்டு விழாவில் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.

மாணிக்கவாசகரின்  காலத்தைப் போலவே அவர் குலத்தையும் பலர் அறியவில்லை.  மாணிக்கவாசகர் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தை சார்ந்தவர் ஆவார். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும்.

#அற்புதங்கள்:

சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

#ஜி. யு. போப் கருத்து:

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். 

குரு வடிவாகக் காட்சியளித்து, திருவடி தீட்சை தந்து மறைந்த சிவபெருமானை, மீண்டும் பெற நினைத்து, நனைந்து நனைந்து பாடியவை திருவாசகம் எனும் தேனருவி. இறைவனின் பேரன்பையும் பெருங்கருணையும் விளக்கும் தெவிட்டாத நூல். 

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும்.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.

இப்பாடலின் பொருளுணர்ந்த டாக்டர் ஜி.யூ. போப் ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று கூறினார். 

திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். மாணிக்கவாசகரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய சிறப்புமிக்க திருவாசகத்தைப் பற்றியும் மாணிக்கவாசகப் பெருமான் பற்றியும் முழுவதும் விரித்துக் கூற இந்த ஒரு கட்டுரையில் முடியாது. அவரைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையாக இந்த கட்டுரையைக் காண வேண்டும்.

தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்கவாசகரது பாடல் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் சிறப்பு விளங்கும்.

திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.  திருவாசகத்தில் சிவத்தை உணர்ந்ததால் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணை என்று இறைவனை வள்ளலார் குறிப்பிட்டார். 

திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள் உள்ளன.  பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது.

#தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோவில்கள் உள்ள இடங்கள்:

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோவில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோவில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்ததாக கூறுவர்.

மதுரை மாவட்டம் திருவாதவூர் தலம். இங்குதான் மாணிக்கவாசகர் அவதரித்ததாக கூறுவர்.

தேனி மாவட்டம் சின்னமனுார். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன் மற்றும் அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில். இங்கு சிவபெருமானே மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோவில் அருகில் தனி சன்னதி உள்ளது.

மாணிக்கவாசகர் வாழ்வையும், அவர் இயற்றிய பாடல்களையும்  படித்துணர்ந்தால் இம்மையும் மறுமையும் சிறக்கும். இது உறுதி.

#திருவெம்பாவை பாடல்களில் சில:

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்"
__மாணிக்கவாசகர்

திருச்சிற்றம்பலம்🙏
ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...