அளவற்ற செல்வம் தரும் ஆனித் திருமஞ்சனம்...!
ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு.
இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள்.
இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளைத்தான் குறிக்கும்.
அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும்.
தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும்.
அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தை குறிக்கும்.
இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள்.
மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும்.
இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.
அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது.
திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள்.
மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவ னையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள்.
சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது.
இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.
ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணா மலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது.
ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள்.
உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு. அப்போது பலவகை அபிஷேகங்கள் செய்யப்படும்.
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.
அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும்.
அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.
நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும்.
அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும்.
அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.
அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.
இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.
ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது.
பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை தலத்தில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துகிறார்கள்.
திருமஞ்சனம் தினத்துக்கு முந்தைய தினம், அதாவது 20-ந்தேதி புதன்கிழமை மாலை ஸ்ரீநடராஜ பெருமான் புறப்பாடாகி எழுந்தருள்வார்.
இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு வரும் அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தை கடந்து ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்து சேருவார்.
ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வார்.
ஒன்று மார்கழி திருவாதிரை தினம். மற்றொன்று ஆனி திருமஞ்சனம் தினம்.
எனவே ஆனி திருமஞ்சன திருநாளில் ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்துக்கு வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
ராஜகோபுரத்தை கடந்ததும் வலது பக்கம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.
அன்றிரவு முழுவதும் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருப்பார்.
மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அங்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதுபற்றி திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யார்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் கூறுகை யில், “ஆனி திருமஞ்சனம் தினத்தன்று பள்ளியறை திறக்கப்பட்ட பிறகே ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கும்.
பொதுவாக பழமையான மற்ற சிவாலயங்களில் அதிகாலை 3 மணிக் கெல்லாம் நடராஜ பெருமானுக்கு அபி ஷேகம் தொடங்கி நடப்பதுண்டு.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அதிகாலை 5 மணிக்குத்தான் அபி ஷேகம் தொடங்கும். பழங்காலத்தில் இந்த அபிஷேகம் பல மணி நேரத்துக்கு நடந்துள்ளது.
60-க்கும் மேற்பட்ட வகை, வகையான அபிஷேகங்களை நடராஜருக்கு செய்ததாக குறிப்புகள் உள்ளன.
ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அந்த அளவுக்கு அதிகமான அபிஷேகங்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே 16 வகை அபிஷேகம் நடத்தப்படுகிறது” என்றார்.
பொதுவாக இறைமூர்த்தங்களுக்கு நடத்தப்படும் சில அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்கக் கூடாது என்று சொல்லப் படுவதுண்டு.
ஆனால் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடத்தப் படும் அனைத்து வகை அபிஷேகங் களையும் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.
அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் ஸ்ரீநடராஜ பெருமான் அழகுப்படுத்தப்பட்டு, அலங்காரம் செய்யப் படுவார். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.
அதன் பிறகு ஸ்ரீநட ராஜ பெருமான், சிவகாம சுந்தரியுடன் நடனம் ஆடியபடி ஆயிரம் கால் மண்டபத்தின் படிகளில் இறங்கி வருவார்.
அந்த காட்சி கைலாயத்தில் சிவபெருமான் நடனம் ஆடிக் கொண்டு வருவது போன்று ஆனந்தமயமாக கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நடராஜர் ஆடும் அந்த ஆனந்த நடனம், உண்மையிலேயே பக்தர்கள் மனதில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளித்தரும். மனம் எல்லாம் பூரிப்பால் நிறைந்து விடும்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநடராஜ பெருமான் திருவீதி உலாவுக்கு புறப்படுவார். அதிலும் ஒரு வித்தியாசமான நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது.
பொதுவாக சிவாலயங்களில் திருவீதி உலாவுக்கு செல்லும் இறைமூர்த்தங்கள் ராஜகோபுரம் வழியாகவே சென்று திரும்பும்.
திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாக உற்சவர்கள் சென்று வருகிறார்கள்.
ஸ்ரீநடராஜ பெருமான் அந்த திட்டிவாசல் வழியை பயன்படுத்த மாட்டார். அவர் திருமஞ்சனம் கோபுரவாசல் வழியையே பயன்படுத்துவார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் அவர் ராஜகோபுரத்துக்கு முன்னதாக உள்ள பிரகார நந்தவனம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழி யாக வீதி உலா செல்வார்.
(ஆலயத்துக்கு தினமும் அதிகாலை இந்த வாசல் வழியாகத்தான் திருமஞ்சன புனிதநீர் எடுத்து வரப்படுவதால், இந்த கோபுரத்துக்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது)
திருவண்ணாமலை ஆலய நடராஜர் உற்சவர் பிரமாண்ட உருவ அமைப்பு கொண்டவர். வீதி உலாவில் அவரைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
வீதி உலா முடிந்த பிறகு ஸ்ரீநடராஜ பெருமான் அதே திருமஞ்சன கோபுரம் வழியாக ஆலயத்துக்கு திரும்புவார்.
திருவண்ணாமலை ஆலயத்தில் ஒருநாள் உற்சவமாக இந்த “ஆனித் திருமஞ்சன உற்சவம்” கொண்டாடப்படுகிறது.
ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.
அடுத்து ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக கூறப்பட்டுள்ளது.
சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மொத்தத்தில் சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்கு கிடைக்கும்.
ஆனி திருமஞ்சன உற்சவம் போலவே திருவண்ணாமலையில் நடக்கும் பஞ்ச பருவ உற்சவங்களும் அதிசயங்களால் நிறைந்தவை.
No comments:
Post a Comment