*சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள்* 🌹
தமிழக அம்மன் கோவில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றனர். அவர்களை பற்றிச் சுருக்கமாக பார்ப்போம்...
1.சமயபுரம் முத்துமாரியம்மன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள்.
2.அன்பில் மாரியம்மன்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். மகா மாரியம்மன் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாகக் கூறப்படுகிறது. சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்னை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்ற கருத்தும் உண்டு. அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற கோவில் களில் அம்மனுக்கு குழந்தை கிடை யாது. நண்ப கல் 12.00 மணியளவில் கண்குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது.
3.புன்னை நல்லூர் முத்துமாரியம்மன்
தஞ்சைக்குக் கிழக்கே உள்ள இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலவரான அம்பாளுக்கு திருமுழுக்கு செய்யப்படுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு திருமுழுக்கு நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்ட வர்கள் பிராத்தனைக்காக இங்குத் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எண்வகைச் சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று "சோழ சம்பு" என்னும் நூல் கூறுகிறது.
4.நார்த்தமலை முத்துமாரியம்மன்
முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. நார்த்தமலை கோவில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தமலை முத்துமாரியம்மன் சந்நிதியில் வடக்குபுறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். நீண்ட காலமாக உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் "அக்னி" காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். தல புராணங்களின்படி இலங்கையில் ராவணனுடனான யுத்தத்தின் போது ராம - லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்க ளைக் குணமாக்கும் பொருட்டு, இமயத்தில் இருந்து ஆகாய மார்க்க மாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் எனக் கருதப்படுகிறது.
5.தென்னலூர் முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே "திருநல்லூர்" என அழைக்கப்படும் "தென்னலூர்" ஆகும். இந்த கிராமத்தின் அதிதேவதை "முத்துமாரியம்மன்" ஆகும். இந்த அம்மன் தானாக உதித்த சுயம்புவடிவான காவல்தெய்வம் ஆகும். மிக எளிமையாக கூரையிலே குடிகொண்ட குலதெய்வம் இந்த "முத்துமாரியம்மன்" ஆகும். தென்னலூர் முத்துமாரியம்மன் தலவரலாறு கர்ணபரம்பரை கதைகளாக (செவிவழிக் கதைகள்) அறியப்படுகின்றது.
இதற்கென கல்வெட்டு குறிப்புகளோ, ஓலைசுவடிக் குறிப்புகளோ, பட்டயங்களோ இல்லை எனலாம்.
6.கொன்னையூர் முத்துமாரியம்மன்
தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையப்பகுதியில் கோவில் கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், காடு கரைகளையும் கால்நடைகளையும் காத்து வருகிறாள் முத்து மாரியம்மன்.
7.வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன்
திருவையாற்றிற்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம் வீரசிங்கம்பேட்டை. வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடை வில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது. சுற்றிலும் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. பொதுவாக மாரியம்மனின் அக்காள், தங்கை, ஏழு பேர் என்பர். அவர்களில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டையில் வீற்றிருப்பவள் இந்த இள மாரியம்மன் என்பது தல வரலாறு. மேற்குறிப்பிட்ட செய்திகளால் மாரியம்மன் வழிபாட்டில் தமிழ்மக்கள் ஒன்றியிருப்பதும் அருளாட்சியால் ஈர்க்கப்பட்டு பக்தி பரவசத்தில் இருப்பதும் அம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மாரியம்மனின் அருஞ்செயல்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தந்த பகுதி மாரியம்மன் பூச்சொரிதல் விழாவின் போதும் திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் காவடிதூக்கியும் அலகு குத்தியும் பெருமை செய்கின்றனர். தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று சொல்வதைக் கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளாவில் பகவதி,வங்காளத்தில் காளி, உத்தரபிரதேசத்தில் விந்தியாவா கினி, அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டி யத்தில் துலஜா பவானி, பஞ்சாப்பில் ஜவாலாமுகி, குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றனர். 🙏🌹
No comments:
Post a Comment