Sunday, July 2, 2023

திருவயிந்திரபுரம்இத்திருத்தலம் குறித்து பிரம்மாண்ட பெருமாள்

திருவயிந்திரபுரம்
இத்திருத்தலம் குறித்து பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களிலும், கந்த புராணத்திலும், ப்ரஹன் நாரதீய புராணத்திலும்  கூறப்பட்டுள்ளது. இத்திருத்தலம் குறித்து கந்த புராணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போர் மூண்டது. அந்தப் போரில் தேவர்கள் தோல்வியடைந்தனர். தோல்வியுற்ற தேவர்கள் திருமாலை துதித்து உதவி கோரினர். தேவர்களுக்கு உதவுவதற்காக திருமால், கருட வாகனத்தில் மேலிருந்தவாறு போரிட, கீழிருந்தவாறு அசுரர்கள் திருமாலுடன் போர் புரிந்தனர். திருமால் சக்ராயுதத்தை ஏவி, அசுரர்களை அழித்தார்.
இந்நிலையில், அசுரர்களுக்கு உதவியாகப் போர்புரிந்த சிவபெருமான், சக்ராயுதத்தை நோக்கி தனது சூலாயுதத்தை ஏவ, சூலாயுதம், சக்ராயுதத்தின் அணிகலனாக மாறி நின்றது. இதனைக் கண்ட சிவபெருமான் தனது ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி திருஷ்டியால் தனது வடிவத்தை சிவபெருமானுக்கு காண்பித்தார். அவ்வடிவில், ஸ்ரீமந் நாராயணனுடன், பிரம்மன், சிவன், தேவர்களும் தெரியவர, எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக்கொண்டு, சூலாயுதத்தை சிவபெருமானிடமே சேர்ப்பித்து, ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். அவ்விடமே திருவஹீந்திபுரம்.
போர் முடிந்ததும்  தாக சாந்திக்கு எம்பெருமான் நீர் கேட்க, நீர் கொணர கருடன்  ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார். 
 
 இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) எனப் பெயருண்டாயிற்று. ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்திருத்தலம் திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான். ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் சற்று தாமதித்து வைகுண்டத்திலிருந்து விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான். இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டுவரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய தேசத்திற்குமில்லை. 
 
 கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் கெடில நதியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
 
 இத்திருத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில்,  திருக்குடந்தைக்கு வடக்கில் ஆறு  யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும், சமுத்திரத்திற்கு மேற்கே  அரையோசனை தூரத்திலும் அமைந்துள்ளது என்று புராணம் வர்ணிக்கிறது.
இங்கு ஸ்ரீமந் நாராயணன், பிரம்மாவுக்கு அடையாளமான தாமரைப் பூவினைக் கையிலும், விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களுடனும், சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக் கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் அருள்கிறார். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்ற மங்களாசாஸனத்தை மொழிந்தார். மூவரும் இவரே என்பதை நம்மாழ்வாரின்  பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.
முதலாம் திருவுருவம் மூன்றென்பர்,
          ஒன்றே நிகரிலகு காருருவா நின்னகத்த தன்றே
     முதலாகும், மூன்றுக்கு மென்பர்
          முதல்வா புகரிலகு தாமரையின் பூ
சோழமன்னன் ஒருவன் விஷ்ணு கோயில்களை இடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும், அப்போது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், இது சிவன் கோவில் என்று தெரிவித்ததாகவும், அப்போது மன்னன் அக்கோயிலினுள் உற்று நோக்க, சிவபெருமானைப் போன்றே ஸ்ரீமந் நாராயணன் அம்மன்னனுக்கு காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
       மூவராகிய ஒருவனை
          மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
     தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத்
          தண் திருவயிந்திர புரத்து
     மேவு சோதியை வேல் வலவன்
          கலிகன்றி விரித்துரைத்த
     பாவு தண் டமிழ்ப் பத்திவை
          பாடிட பாவங்கள் பயிலாவே
என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம்.
மூலவர் தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன் என்றும் திருநாமம் உண்டு.
தாயார், வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித் தாயார். தேவர்களைக் காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும் தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமங்கள் உண்டு.
ஸ்தல விருட்சம், சிவபெருமானுக்கு உகந்த வில்வ மரம்.
ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட சேஷ தீர்த்தத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம் உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்ததக்கது.
ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இத்திருக்கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஓம் நமோ நாராயணாய நமஹ

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...