Monday, July 31, 2023

அடுத்த சில தினங்கள் ரோட்டில் சிறுவர்கள் நடக்கிறார்களோ இல்லையோ சப்பரம் ஓடும்,

ஆடிப்பெருக்கும் சப்பரத்தட்டியும்
ஆடி 18 வந்தாலே நினைவுகள் பின்னோக்கி பள்ளிப் பருவத்திற்குச் செல்லும்.  கும்பகோணம் பகுதிக்கென்றே உள்ள பிரத்யேகமான விஷயங்களில் ஒன்று ஆடிப்பெருக்கு அன்று குழந்தைகள் ஓட்டிச் செல்லும் சப்பரம்/சப்பரத்தட்டி. 
 'பதினைட்டாம் பேர்'  அன்றைய தினம் ஜே ஜே என இருக்கும் காவிரிக்கரை.  குளிக்கும் கூட்டம் ஒரு பக்கம், புதிதாய் மணமானவர்களின் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு ஒரு பக்கம், நோன்பு செய்பவர்கள் ஒரு பக்கம், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் காதோலை கருகமணி என காவிரி நீரில் மங்கலப் பொருட்களை படைப்பவர்கள் ஒரு பக்கம் என காலை முதலே அமர்க்களமாக இருக்கும். 
எங்களுக்கு பிடித்தமானது என்னவோ மாலை வேளையே. பள்ளியில் இருந்தாலும் எப்பொழுது வீட்டிற்கு சென்று தயாராகி காவிரிக்கு செல்வோம் என்றே ஏங்கும் மனது.  பள்ளி மணி அடித்ததும் ஓட்டமாக ஓடி வீடு சென்று தயாராகி  காவிரியை நோக்கிச் செல்வோம். அன்று செய்த சித்ரான்னங்களை எடுத்துக் கொண்டு அலங்கரித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக செல்லும் அனைவரையும் தெருவில் பார்க்கும் பொழுது கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்தில் எழுதியது முற்றிலும் உண்மை என்றே தோன்றும்.

புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், பொறித்த வடகங்களுடன் பெரியவர்கள் நடக்க, சிறுவர்கள் நாங்கள் எங்கள் சப்பரத்தட்டியுடன் நடப்போம். முன்பெல்லாம் வீட்டில் மர வேலை செய்து மீதமான துண்டுகளில் வடிவம் கொடுத்து அதை ஓட்டிச் செல்ல ஏதுவான சக்கரங்கள் பொருத்துவர்.  இந்த சப்பரத்தின் மேல்  கலர் காகிதங்கள் ஒட்டி, நடுவில் சாமி படத்தையும் ஒட்டி ஒரு சணல் கயிறை இழுப்பதற்குக் கட்டினால் கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான சப்பரம் தயார். சப்பரத்தை இழுத்துச் செல்வதே பெருமையாக இருக்கும். நமக்கே நமக்கென சொந்தமாக ஒரு வண்டி கிடைத்தது போலத் தோன்றும். சில நாட்களாக வீட்டில் preparation work நடந்த பொழுது யாருக்கும் காட்டாமல் அன்றைய தினம் வாசலில் இறக்கி ஓட்டுவது தான்‌ surprise & கெத்து.  தெருவில் உள்ள அனைவரின் சப்பரத்தையும் பார்த்து யாருடையது புதிது, பெரியது, எதில் கலர் பேப்பர் அதிகம் என்ற மதிப்பீடு எங்களுக்குள்  நடக்கும். இதில் சிலர் நண்பர்களின் சப்பரத்தை share செய்து கொள்வர். அதிலும் சண்டை, அழுகை வருவது உண்டு. புதிய சப்பரத்தை வைத்து பந்தா காட்டுபவர்கள், சிறிதாக பழையதாக இருந்தாலும் என்னுடையது தான் fast பார்க்கறியா என வம்புக்கும் raceக்கும் இழுப்பவர்கள், தன் சப்பரத்தை தூசி கூட பட விடாமல் பொத்திப் பாதுகாப்பவர்கள் என பல category. மொத்தத்தில் சப்பரத்துடன் சென்று காவிரிக்கரையில் சித்ரான்னங்கள் சாப்பிட்டு, கதை பேசி, boat race பார்த்து வீட்டிற்கு வரவே மனசில்லாமல் வருவதில் முடியும் எங்கள் 'பதினெட்டாம் பேர்'.

அடுத்த சில தினங்கள் ரோட்டில் சிறுவர்கள் நடக்கிறார்களோ இல்லையோ சப்பரம் ஓடும், ஓடும், ஓடிக் கொண்டே இருக்கும். கலர் காகிதங்கள்க் தேயும் வரை ஓடும், வீட்டில் அடி விழும் வரை ஓடும். பின்பு அட்டாலிக்கு சென்று அடுத்த ஆடிப்பெருக்கிற்காகக் காத்திருக்கும்.

ஓம் நமசிவாய. 

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய ஸ்தலங்களின்பெருமைகள். ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள் 1,திருப்புனவாசல் -- ஶ்ர...