Monday, July 31, 2023

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன்   சுவாமி ஆலயதரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் 
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே  உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரிதென்கரை தலங்களில் 25 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 88 வது தலமாகவும் விளங்குகிறது திருவலஞ்சுழிநாதர் சிவாலயம்.

அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி , சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் தனது பரிவாரங்களுடன் சென்றான். வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு இங்குள்ள சிவனை வலம் வந்து ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான், முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டார்.

அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் புகுந்தால் அப் பள்ளம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். இதைக் கேட்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

இத்திருத்தலத்தில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தை பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர்.ஈசன் அவர்களிடம், விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலை கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகர் என பெயர் பெற்றார் .

தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கி கொள்ளும் பொருட்டு, சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் இந்திரன் பூஜித்த அந்த வெள்ளை விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் அரைத்து, இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார்கள் அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார்.
முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு.

 மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவியாகிய வாணியையும் இத்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர். திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும்.

கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதை விட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.
இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
திருத்தலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த பெருமானை வழிபாடு செய்து இவரின் பரிபூர்ண திருவருளை பெற வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்ய.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...