திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்
சிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது.
புண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திரு வதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்கு கிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.
சிறப்பு :
கோவிலை பற்றி சம்மந்தர், நாவுக்கரசர், அருணகிரி நாதர், மனவாசம்டைந்தார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவபெருமான், திருவதிகையில் முப்புரம் எரித்ததை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது.
இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த கோவில் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.
இங்குதான் முன்பு ஒரு சமயம் சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோய் வரப்பெற்று சைவ மதத்துக்கு திரும்பிய போது தமக்கையார் திலவகதி அம்மையாரின் திருக்கரங்களால் அப்பர் பெருமானுக்கு திருநீறு பூசி கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றதால் திருநீற்றின் பெருமை உலகிற்கு உணர்த்திய தலமாகவும், திருநாவுக்கரசருக்கு வாழ்வில் திருப்பம் தந்த தலமாகவும் திருவதிகை திகழ்கிறது.
திருநீறு அணியும் முறை :
மேலும் பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.
திருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம். இங்கு தலை குனிந்து வந்தால் தலைநிமிர்ந்து வாழலாம். தலைகுனிந்து ஆணவம் கொள்ளாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பம் தரும் தலமாக இது திகழ்கிறது.
தீர்த்த சிறப்பு :
திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.
வராகி :
கோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். இந்த வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், வழக்கில் வெற்றிகளையும் கொடுத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி திருப்பம் தரும். தாய்க்கு தாயாக வராகி அம்மன் திகழ்கிறார்.
உள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். வீரட்டா னேசுவரர் உமா தேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார். திருவதிகையில் ஒரு தடவை வந்து காலடி வைத்தாலே உன்ன தமான மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.
No comments:
Post a Comment