அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் பொங்கு சனீஸ்வரர்!
சனீஸ்வரர் சன்னதிக்கு செல்பவர்கள் அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது. திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர்.
நவக்கிரங்களை அடக்கி அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான் இராவணன்.
அப்போது சனீஸ்வரர், தன் உக்கிரப் பார்வையால் ராவணனைப் பார்க்க அவனுக்கு சனி பிடித்தது. அதன் பின் இராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை.
இப்படி சனி என்றாலே ஒருவித பயம் இருக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் சன்னதியைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
அத்துடன் இங்குள்ள சனீஸ்வரரை பொங்கு சனீஸ்வரர் மற்றும் அனுக்கிரக சனீஸ்வரர் என அழைத்து தலைமுதல் பாதம் வரை தரிசிக்கின்றனர்.
சனீஸ்வரர் தலமான திருநள்ளாறில் கூட சனீஸ்வரரை வலம் வர முடியாது.
ஆனால் இலத்தூர் பொங்கு சனீஸ்வரரை வலம் வரலாம். அருள் வழங்கும் நிலையில் காட்சி தருகிறார்.
சுமார் 5000 ஆண்டுகள்
பழமை வாய்ந்தது இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி கோவில். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்துள்ளது இலத்தூர்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார்.
சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும்.
அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு
எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது
அகத்தியர் தென்னகம் வந்தபோது இத்தலம் வந்து மணல் லிங்கம் அமைத்து சந்தியா கால வழிபாட்டை மேற்கொண்டார் என்பது ஐதீகம்.
அப்போது அருகிலிருந்த புளியமரத்தில் கூடு கட்டியிருந்த தேனீ கூட்டிலிருந்து தேன் வழிந்து லிங்கம் மீது சொட்டி மணல் லிங்கம் தேன் லிங்கமாக மாறியது.
வழிபாடு முடிந்ததும் இதனைக் கவனித்த அகத்தியர் மதுநாதா என்று அழைத்து மகிழ்ந்தார்.
அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார்.
இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார்.
அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.
இதன் அடிப்படையில், இங்கு பொங்கு சனியாக சனீஸ்வர பகவான் தனிச்சந்நிதியில், வலம்வந்து வழிபடும் விதமாக எழுந்தருளியுள்ளார்.
சனி பகவானுக்கரிய பரிகாரத் தலம் இது.
நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.
பக்தர்கள் வலம்வரும் வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் மத்தியில் ஆறுமுக நயினார் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ளது.
சனீஸ்வரர் கோயில் மற்ற இடங்களில் மேற்கு நோக்கி இருக்கும் காக வாகனம், இங்கு கிழக்கு நோக்கி உள்ளது.
இவ்வாறான சனியை வணங்கினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி மற்றும் கண்டச்சனியால் சிரமப்படுவோர் இவரை வணங்குகின்றனர்.
சம்பாதித்த பொருள் கையில் தங்க சனிக்கிழமைகளில் பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்கின்றனர்.
குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம்.
இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.
காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் அன்னபூரணி மாதாவிற்கு தனிக்கோவில் உள்ளது என்பது சிறப்பு
அம்சமாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
மதுரை - தென்காசி சாலையில் மதுரையிலிருந்து 153 கி.மீ.தூ ரத்தில் இலத்தூர் விலக்கு வரும்.
இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் கோவில் உள்ளது.
தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை கிராமம் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர்.
No comments:
Post a Comment